‘கிட்னி தானம் செய்தால் 3 கோடி தரப்படும்’ என முகநூல் மற்றும் வாட்ஸ்அப்பில் பலரிடம் லட்சக்கணக்கில் பணத்தைச் சுருட்டிய நைஜீரியர்கள் இருவரை போலீஸார் கைது செய்திருக்கின்றனர்.

ஈரோடு சம்பத் நகர் பகுதியில் `கல்யாணி கிட்னி கேர் சென்டர்’ என்னும் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையின் பெயரில் போலியான முகநூல் பக்கம் ஒன்றைத் தொடங்கிய மர்ம நபர்கள், `கிட்னி தானம் செய்தால் 3 கோடி ரூபாய் பணம் வழங்கப்படும்’ என பரபரப்பான விளம்பரம் ஒன்றை வெளியிட்டனர். இந்த விளம்பரத்தைப் பார்த்த பலரும் அதிலுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு, கிட்னி தானம் செய்வதற்கு முன்பதிவுக்காக சுமார் 15,000 வரை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கில் கட்டியிருக்கின்றனர்.
அப்படிப் பணம் கட்டிய பலரும், ஒருகட்டத்தில் மருத்துவமனையைத் தொடர்புகொண்டு பேசியபோதுதான், கிட்னி தானம் என்ற பெயரில் மர்மநபர்கள் பெரும் மோசடியை நிகழ்த்தியிருப்பது தெரியவந்திருக்கிறது. இதுசம்பந்தமாக, மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கல்யாணி கிட்னி கேர் சென்டர் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரான பிரபாகர், ஈரோடு எஸ்.பி-யிடம் புகார் மனு அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார், மோசடி நபர்களின் தொலைபேசி எண்ணை வைத்துத் தேடிவந்தனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி பகுதியில் மோசடி நபர்கள் இருப்பதாகத் தகவல் கிடைக்க, அங்கு சென்ற போலீஸார் ஓசூர் சிப்காட் பகுதியில் நைஜீரியாவைச் சேர்ந்த ஸ்டீவன் ஃபிரான்க் (32), காலின்ஸ் அன்ட்டி என்ற இரண்டு வெளிநாட்டவரை சுற்றிவளைத்து பிடித்திருக்கின்றனர். கிட்னி தானம் என்ற பெயரில் பல பேரிடம் லட்சக்கணக்கான பணத்தை ஏமாற்றியதை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட நைஜீரியர்களிடமிருந்து கார், பைக் செல்போன், லேப்டாப் மற்றும் 20,000 ரூபாய் பணத்தை போலீஸார் பறிமுதல் செய்திருக்கின்றனர்.
விசாரணையின் முடிவில்தான் இவர்களுக்கு வேறு யாருடன் தொடர்பிருக்கிறது, இதுவரை எவ்வளவு பேரை ஏமாற்றியிருக்கின்றனர் என்பது தெரியவரும்.