Published:Updated:

தி.மு.க-வில் தஞ்சம்... இனி, தேனியை வளைப்பாரா தங்க தமிழ்ச்செல்வன்?

தி.மு.க-வில் தஞ்சம்... இனி, தேனியை வளைப்பாரா தங்க தமிழ்ச்செல்வன்?

தேனி மாவட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவி தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொடுக்கப்பட்டால், ஒன்று கோஷ்டிப் பூசல்களில் தவிக்கும் தேனி மாவட்டத்தை தி.மு.க மீட்கப்படலாம். அல்லது தங்க தமிழ்ச்செல்வனை காலி செய்ய மற்ற அனைவரும் கோஷ்டி சேரலாம்.

Published:Updated:

தி.மு.க-வில் தஞ்சம்... இனி, தேனியை வளைப்பாரா தங்க தமிழ்ச்செல்வன்?

தேனி மாவட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவி தங்க தமிழ்ச்செல்வனுக்கு கொடுக்கப்பட்டால், ஒன்று கோஷ்டிப் பூசல்களில் தவிக்கும் தேனி மாவட்டத்தை தி.மு.க மீட்கப்படலாம். அல்லது தங்க தமிழ்ச்செல்வனை காலி செய்ய மற்ற அனைவரும் கோஷ்டி சேரலாம்.

தி.மு.க-வில் தஞ்சம்... இனி, தேனியை வளைப்பாரா தங்க தமிழ்ச்செல்வன்?

ம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வலதுகரமாக இருந்து வந்த தங்க தமிழ்ச்செல்வன், தற்போது தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் ஐக்கியமாகிவிட்டார். `` `மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு’ என்பதை கடைப்பிடிக்கும் தலைவர் ஸ்டாலின்" என இணைப்புப் படலத்துக்குப் பிறகு பேட்டி கொடுத்தார்.

ஒற்றைத் தீர்மானம்:

கடைசிவரை தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க பக்கம்தான் சாய்வார் என எண்ணிக்கொண்டிருந்த சூழலில், அதற்குத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முட்டுக்கட்டை போடுவதாகத் தகவல் வெளியானது. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அனைத்தையும் ஏற்றுக்கொண்டால்தான் கட்சிக்குள் என்ட்ரி ஆக முடியும் எனவும் கூறப்பட்டதாம். ஏனென்றால், தேனி மாவட்ட அ.தி.மு.க அரசியல் வரலாற்றில், தங்க தமிழ்ச்செல்வனும் ஓ.பன்னீர்செல்வமும் எதிரும் புதிருமாகத்தான் வலம் வந்திருக்கிறார்கள். தற்போது தன் மகனையும் தேனி எம்.பி ஆக்கிவிட்ட சூழலில், மீண்டும் தங்க தமிழ்ச்செல்வன் கட்சிக்குள் வந்தால், அது தனக்கும், தன் மகனுக்கும் பெரிய குடைச்சலாக இருக்கும் என்று கருதினார், ஓ.பி.எஸ். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிரீன் சிக்னல் கொடுக்க, ஓ.பி.எஸ் ரெட் சிக்னல் மட்டுமே காட்டிக்கொண்டிருக்க, எடப்பாடியையும் ரெட் சிக்னல் காட்டவைத்தது அந்தத் தீர்மானம். அடுத்த நாள் காலை எடப்பாடியைச் சந்தித்து கட்சியில் இணைய இருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன் எனப் பரவிய செய்தியை அடுத்து, முந்தைய நாள், தேனி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் ஒன்றுசேர்ந்து, ``தங்க தமிழ்ச்செல்வன் வேண்டாம்” என தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள்.

``பாருங்கள்… தேனி மாவட்ட நிர்வாகிகளே தங்கத்தை வேண்டாம் என்கிறார்கள். அவர் வேண்டாம்” என அழுத்திப்பேசினார், ஓ.பி.எஸ். அதுவரை ஆங்காங்கு தங்க தமிழ்ச்செல்வனுக்கு எதிராக அ.தி.மு.க-வினர் போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். கையில் இப்படியொரு தீர்மானம் இல்லை. அது, கிடைத்ததும் ஓ.பி.எஸ் குரல் ஓங்கியது. ராயப்பேட்டை தலைமைக் கழகக் கதவு அடைக்கப்பட்டது. அண்ணா அறிவாலயம் கதவைத் தட்டவே அது திறக்கப்பட்டது.

தி.மு.க-வில் தஞ்சம்... இனி, தேனியை வளைப்பாரா தங்க தமிழ்ச்செல்வன்?

அதிருப்தியடைந்த ஆதரவாளர்கள்:

தேனி மாவட்டத்தைப் பொறுத்தவரை, அ.தி.மு.க., அ.ம.மு.க என்ற வேறுபாடு கட்சிப் பெயர்களில் மட்டுமே இருந்தது. ஒரு குடும்பத்தில் அண்ணன் அ.தி.மு.க-விலும், தம்பி அ.ம.மு.க-விலும் இருப்பார்கள். அதேபோலத்தான் மாமன் மச்சானும். அப்படியிருக்கையில், பெரிய பாகுபாடோ, பிரிவினையோ இல்லாத சூழலில், தங்க தமிழ்ச்செல்வன் அ.ம.மு.க-விலிருந்து அ.தி.மு.க செல்லவே அனைவரும் விரும்பினர். அதைத்தான் எதிர்பார்த்தும் காத்திருந்தனர். ஆனால், தி.மு.க-வுக்குச் சென்றது தங்க தமிழ்ச்செல்வனின் ஆதரவாளர்களைப் பெரிய அளவில் அதிருப்தியடையச் செய்தது. சென்னைக்குத் தனது ஆதரவாளர்களை வரச்சொல்லிய தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க கரை வேட்டி வாங்கிக்கொள்ளும்படி அறிவுறுத்தவே, பாதிப்பேர் சென்னை போகாமலேயே  தவிர்த்துவிட்டார்கள். மிகச் சொர்பமான எண்ணிக்கையில் மட்டுமே தற்போது தங்க தமிழ்ச்செல்வனுடன் இருக்கிறார்கள். சரி, இதெல்லாம் நடந்த கதை. இனி, நடக்கப்போகும் கதையைப் பார்ப்போம்....

கோஷ்டிப்பூசல்களைச் சமாளிப்பாரா?

தேனி மாவட்ட தி.மு.க-வைப் பொறுத்தவரை, எல்லாம் திண்டுக்கல் ஐ.பெரியசாமியின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அவரின் உத்தரவில்லாமல், தேனி மாவட்ட தி.மு.க-வில் எதுவும் நடக்காது என்ற சூழலில், தற்போது தங்க தமிழ்ச்செல்வன் தி.மு.க-வுக்குள் வந்திருக்கிறார். தேனி தி.மு.க என்றாலே, கோஷ்டிப் பூசல்களுக்குப் பெயர்பெற்ற இடம் எனலாம். கம்பம் ராமகிருஷ்ணன், கம்பம் செல்வேந்திரன், முன்னாள் மாவட்டச் செயலாளர் மூக்கையா, ஜெயக்குமார், போடி லெட்சுமணன் என தேனி மாவட்ட தி.மு.க-வில் கோஷ்டிகளுக்குப் பஞ்சமே இல்லை. இதனால்தான் இப்போதுவரை தேனி மாவட்டம் அ.தி.மு.க கோட்டையாக இருக்கிறது. அதன்நீட்சிதான், தேனி எம்.பி-யாக ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றிபெற்றதும், காங்கிரஸ் வேட்பாளராகக் களம்கண்ட அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தோல்வியடைந்ததும் எனலாம். இப்படியான சூழலில், கோஷ்டிகளுக்கு மத்தியில் தங்க தமிழ்ச்செல்வன் எப்படித் தன்னை தேனி மாவட்ட தி.மு.க-வில் நிலைநிறுத்திக் கொள்ளப்போகிறார் என்பது பெரிய சவாலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

மாவட்டச் செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன்?

இப்போதுவரை தேனி மாவட்ட தி.மு.க-வுக்குப் பொறுப்பாளர் மட்டுமே நியமிக்கப்பட்டிருக்கிறார். பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் இருக்கிறார். தேனி மாவட்ட தி.மு.க, மாவட்டச் செயலாளர் பதவி தங்க தமிழ்ச்செல்வனுக்குக் கொடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அப்போது அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் நேரடியாக மோதல் போக்கையே கடைப்பிடித்தார். அவரின் செயலும், ஆளுமைத்திறனும் எப்படி இருக்கும் என நன்கறிந்தவர்கள் அ.தி.மு.க-வினரே என்றாலும், தி.மு.க-வினர் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். அப்படியிருக்கையில், தேனி மாவட்ட தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவி தங்க தமிழ்ச்செல்வனுக்குக் கொடுக்கப்பட்டால், ஒன்று கோஷ்டிப்பூசல்களில் தவிக்கும் தேனி மாவட்ட தி.மு.க மீட்கப்படலாம். அல்லது தங்க தமிழ்ச்செல்வனைக் காலி செய்ய அனைவரும் கோஷ்டி சேரலாம். எது எப்படியோ, புதிய களத்துக்குள் அடி எடுத்துவைத்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். அது பூ பாதையா... சிங்கப் பாதையா என இனிவரும் காலங்களில்தான் தெரியும்!