தி.மு.க ஆட்சியில் இலவச கலர் டிவி திட்டம், அ.தி.மு.க ஆட்சியில் அம்மா உணவகம் எனத் தமிழக அரசின் பல முக்கியமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசின் நிதி நிர்வாகத்தைத் திறம்பட நடத்திய தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளரான சண்முகம் ஐ.ஏ.எஸ், தமிழக அரசின் 46-வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். வேளாண் துறையில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், 1985-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார்.
சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராகவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் உட்பட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். தி.மு.க ஆட்சியில் 2010-ம் ஆண்டு நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமித்தார் கருணாநிதி. 2011-ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க அரியணை ஏறியது.
அப்போது பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்தார் ஜெயலலிதா. நிதித்துறையிலிருந்து சண்முகம் மாற்றப்படுவார் என்று பேச்சுகள் அடிபட்டன. ஆனால், அவர் அதே இடத்தில் தொடர்ந்தார். அப்போது தொடங்கி 2016-ல் ஜெயலலிதா ஆட்சிக்காலம் முடியும் வரையில் நிதித்துறை முதன்மைச் செயலாளராக சண்முகம் தொடர்ந்தார். 2016-ல் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த காலத்திலும் நிதித்துறையிலேயே நீடித்த சண்முகம், எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் அதே பதவியில் தொடர்ந்தார்.
நிதி நெருக்கடி மிகுந்த தருணங்களைத் திறம்பட சமாளித்த அனுபவத்தாலும், அரசின் பல முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து நிர்வாகத்தைக் கையாண்ட அனுபவம் நிறைந்தவர் என்பதாலும், நான்கு முதல்வர்களுமே அவரை நிதித்துறையிலிருந்து மாற்றாமல் வைத்திருந்தனர்.
நேர்மையான அதிகாரி என்றும் பெயரெடுத்தவர் சண்முகம். 1996-ம் ஆண்டு சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்தார். அப்போது, சிவகங்கை அரண்மனைக்கு எதிரே உள்ள தெப்பக்குளம் வறண்டுபோய் கிடந்தது. நகரின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருக்கும் அந்தத் தெப்பக்குளத்துக்கு, ஆக்கிமிப்புகளை எல்லாம் அதிரடியாக அகற்றி, பெரியாற்றுத் தண்ணீரைக் கொண்டுவந்து, சிவகங்கை மக்களின் பாராட்டுகளைப் பெற்றார்.
சிவகங்கையில் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சித்தா மருத்துவமனையில் சுமார் 60 பேர் பணியாற்றிவந்தனர். திடீரென அதை மூடியதால், அவர்கள் வேலையிழந்தனர். சண்முகம் ஆட்சித்தலைவராக வந்த பிறகு, அது குறித்து அவரின் கவனத்துக்குக் கொண்டுசென்றதும், உடனே அவர்களுக்கு வேலை வழங்க உத்தரவிட்டார். மரியாதை நிமித்தமாக தனக்கு அணிவிக்கப்படும் சால்வை, துண்டு ஆகியவற்றைப் பார்வையற்றோர் பள்ளிக்குக் கொடுப்பதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். புதுக்கோட்டை ஆட்சித் தலைவராக இருந்தபோது, அரசுப் பணியாளர்கள் தீபாவளி வசூல் செய்யக் கூடாது என்று கறாராக உத்தரவு பிறப்பித்தார்.
தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஜூன் 30-ம் தேதி ஓய்வுபெறுவதால், அவரைத் தொடர்ந்து புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்படும் சண்முகம் அடுத்த ஆண்டு பணி ஓய்வு பெறுவார்.