Published:Updated:

மிஸ்டர் கழுகு: பெங்களூருவில் 'நொந்த' சசி!

மிஸ்டர் கழுகு: பெங்களூருவில் 'நொந்த' சசி!

மிஸ்டர் கழுகு: பெங்களூருவில் 'நொந்த' சசி!

மிஸ்டர் கழுகு: பெங்களூருவில் 'நொந்த' சசி!

Published:Updated:
##~##

''பிரிவுக்குப் பிறகு சசிகலா முதன்முதலாக வெளியில் வரப்போகிறார்... என்று நீர் கோடிட்டுக் காட்டியது நடந்து விட்டதே!'' என்றதும் கழுகார் புன்னகைத்தார். 

''சசிகலா நிச்சயம் வந்தாக வேண்டும் என்று பெங்களூரு சட்ட விவகாரங்களைக் கண்காணிப்​பவர்கள் சொல்லியதால்தான், நானும் உறுதியாகச் சொன்னேன். 'சசிகலா வருவாரா... மாட்டாரா?’ என்ற சந்தேகத்துடன்தான், மற்ற மீடியாக்கள் கூடி இருந்தார்கள். ஏனென்றால், கோர்ட்டில் ஆஜரா​காமல் இருப்பதற்கான பல வேலைகளை சசிகலா பார்த்தார்.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வரிசையாகச் சொல்லும்!''

''பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா தனது பதிலை முழுக்கப் பதிவு செய்து முடித்துவிட்டார். அடுத்து சசிகலா பதில் தந்தாக வேண்டும். 'சசிகலாவுக்கு ஆங்கிலம் தெரியாது’, '10-ம் வகுப்புதான் படித்துள்ளேன். எனவே, தமிழில் பதில் சொல்ல வசதி செய்துதர வேண்டும்’ என்றெல்லாம் சொன்னார்கள். இந்த மனுவை சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனய்யா தள்ளுபடி செய்தார். கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். அங்கும் மனு ஏற்கப்படவில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் 9-ம் தேதி ஆஜராகும் நிலை ஏற்பட்டது. இதுவரை தனது படை பரிவாரங்களுடன் ஆஜரான சசிகலா, இந்த முறை தன்னந்தனி மனுஷியாய் வந்தார்!''

மிஸ்டர் கழுகு: பெங்களூருவில் 'நொந்த' சசி!

''ஓ!''

''ஒருவேளை யாரும் வரத் தேவையில்லை என்று சொல்லிவிட்டாரோ என்னவோ! சசிகலாவுக்கு உடல்நலம் சரி இல்லாததால், உதவிக்காக அவரது உதவியாளரையும், அவரது உறவினரான சிதம்பரம் ஜெயந்தி என்பவரையும் மட்டும் அழைத்து வந்திருந்தார். சென்னையில் இருந்து புதன் கிழமையே வந்துவிட்டாராம் சசிகலா. அவருடன் இளவரசியும் வந்துள்ளார். பெங்களூரு அட்ரியா ஓட்டலில் இவர்கள் தங்கினார்கள்.  அவர‌து வழக்கறிஞர்கள் மணி சங்கர், சந்தான கோபாலன் ஆகிய இருவரும் சசிகலாவை வந்து சந்தித்ததாகச் சொல்கிறார்கள். சசிகலா கோர்ட்டுக்கு வந்தாலே கர்நாடக அ.தி.மு.க. தொண்டர்களால், அந்த இடமே அல்லல்படும். ஆனால், இந்தமுறை எந்தக் கரை வேட்டியையும் காண முடியவில்லை. மாறாக, சிதம்பரத்தில் இருந்து இரண்டே இரண்டு கட்சித் தொண்டர்கள் வந்து, சசிகலா மீதான பாசத்தை வெளிப்படுத்தினார்கள்.''

''ம்!''

''காலையில் கோர்ட் ஆரம்பிப்பதற்குச் சரியாக ஒரு மணி நேரத்துக்கு முன்பே, இளவரசி சகிதமாக

மிஸ்டர் கழுகு: பெங்களூருவில் 'நொந்த' சசி!

தமிழ்நாடு பதிவு எண் கொண்ட இன்னோவா காரில் வந்து இறங்கினார் சசிகலா. மிகவும் மெலிந்து இருந்தார். சோகமான மன நிலையில்தான் இருக்கிறார் என்பதை அவரது இறுக்கமான முகம் சொன்னது. அவரது உதவியாளர்களையும், வழக்கறிஞர்களையும் தவிர எந்த பாடிகார்டும் உடன் வரவில்லை. பாதுகாப்புக்கு கர்நாடக போலீஸ்கூட வரவில்லை. கோர்ட் வராண்டாவில் இளவரசியுடன் அமர்ந்து, மீடியாக்களைக் கவனிப்பதும் ஏதோ பேசுவதுமாகவே இருந்தார். நீதிபதி வந்த உடன் எழுந்து நின்று வணக்கம் சொல்லிவிட்டு, 'அமருங்கள்’ என்று நீதிபதி சொல்லும்வரை நின்று கொண்டே இருந்தார். முன்பெல்லாம் சசிகலா அமரும்வரை வழக்கறிஞர்கள் அத்தனை பேரும் நின்றுகொண்டே இருப்பார்கள். கோர்ட்டுக்குள் இளவரசியுடன் அதிகமாகப் பேசவில்லை. 'கால்வலி காரணமாக சுதாகரன் வரவில்லை’ என்று அவரது வக்கீல் சரவணகுமார் நீதிபதியிடம் விளக்கம் அளித்தார். அப்போது, கோர்ட்டில் லேசாகச் சிரிப்பு சத்தம் கேட்டது!''

''மேலும் சொல்லும்!''

''சசிகலா தரப்பில் ஆஜரான வக்கீல் மணிசங்கர், 'சசிகலாவின் வாக்குமூலம் தமிழில் பதிவு செய்யக் கோரும் மனு, இன்று மதியம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து இருக்கிறோம். எனவே, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வரும் வரை சசிகலாவிடம் விளக்கம் பெறக்கூடாது. வழக்கை இன்னும் 10 நாட்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்’ என்று சொன்னதும் அரசுத் தரப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா வேகமாக எழுந்தார்.

'இந்த வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்  கண்டிப்புடன் சொல்லி இருக்கிறது. மனு மேல் மனு போடுவதும், அப்பீல் மேல் அப்பீல் போவதும் தேவை இல்லாமல் வழக்கை இழுத்தடிக்கும் செயல். எனவே, 10 நாட்கள் ஒத்திவைக்கத் தேவை இல்லை’ என்று காரமாக வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜூனையா, 'வழக்கை 18-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன்’ என்று சொன்னார். அன்றைய தினம் மொழிபெயர்ப்பாளர் ஹாரிஸ் மூலமாக சசிகலாவின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய இருக்கிறார்கள். நீதிபதி ஆங்கிலத்திலோ, கன்னடத்திலோ கேள்வி கேட்க, அதைத் தமிழில் மொழிபெயர்த்து ஹாரிஸ் சொல்வார். அதற்குத் தமிழில் பதில் சொல்வார் சசிகலா. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஹாரிஸ் சொல்வார். இந்த அடிப்படையில் பார்த்தால், சசிகலாவிடம் வாக்குமூலம் வாங்குவதற்கு சுமார் 12 நாட்களுக்கு மேல் ஆகும். இதற்கு சசிகலாவின் உடல் ஒத்துழைக்குமா என்பது தான் பலரது கேள்வி!''

''உடல் நலக்குறைவைக் காரணமாகக் காட்டியே வழக்கைத் தள்ளிப்போடப் போகிறார்கள்!''

''அவருக்குத் தெரியாத ஐடியாவா? சசிகலா பெங்களூரு வந்தது முதல் சென்ற‌து வரை அத்தனையையும் ரெக்கார்ட் செய்துகொண்டு, அன்றே சென்னை புற‌ப்பட்டு வந்துவிட்டது தமிழக உளவுத்துறை. கோர்ட்டில் அரங்கேறும் காட்சிகளை அவ்வளவு அக்கறையோடு ஜெயலலிதா கவனிப்பதைப் பார்த்தால், இன்னும் ஏதோ பாக்கி இருப்பது போல் தெரிகிறது'' என்ற கழுகார் சிறிது இடைவெளிவிட்டுச் சிரித்தார்.

''சசிகலா என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டு இருக்கும்போது, பெரியகுளத்தில் ஒரு தகவல். 'சசிகலா பேரவை’ என்ற அமைப்பை சிலர் உருவாக்கி உள்ளனர். பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள தங்கும் விடுதியில் 30-க்கும் மேற்பட்ட நபர்கள் கடந்த வாரத்தில் கூடி உள்ளனர். ஏதோ விவசாயிகள் சங்கக் கூட்டம் என்று இடம் கொடுத்தார்களாம். ஆனால், கலையும்போதுதான் ஏதோ கட்சி ஆட்கள் மாதிரி இருக்கே என்று அதன் உரிமையாளர்கள் கேட்டுள்ளார்கள். 'புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறோம்!’ என்று சொல்லிச் சென்றார்களாம். 'யாருங்க இந்தக் கட்சித் தலைவர்? அவர் பேரையாவது சொல்லுங்க’ என்று அந்த விடுதிக்காரர் விடாமல் துளைத்துள்ளார். 'தலைவர் இல்லைங்க.... தலைவி!’ என்று பதில் வந்ததாம்!''

''தலைவி என்றாலே சசிகலாதானா?''

''அந்த வட்டாரத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பே, 'சசிகலா பேரவை’ என்ற பெயரில் சிலர் இயங்கி வந்தார்கள். சசிகலாவைக் காக்கா பிடிக்க இந்த அமைப்பை ஆரம்பித்தார்களாம். இப்போது அவருக்கு ஒரு பிரச்னை என்றதும் நாம்தானே குரல் கொடுக்க வேண்டும் என்று இப்போது அதனைத்  துளிர்விட வைத்துள்ளார்கள் என்று உளவுத்துறை போலீஸார் மேலிடத்துக்கு ரிப்போர்ட் போட்டுள்ளார்களாம். 'டி.டி.வி. தினகரனுக்கு நெருக்கமான சிலரின் வேலை இது’ என்றும் சொல்கிறார்கள். போலீஸ் மோப்பம் பிடித்து விசாரிக்கத் தொடங்கியதும் இந்த தலைகள் எஸ்கேப் ஆகிவிட்டதாம்!''

''ஒருவேளை இது அண்டர்கிரவுண்ட் கட்சியோ என்னவோ!''

''முதல்வரின் செயலர்களில் ஒருவர் மீது அடுத்தடுத்துப் புகார்கள் குவிகின்றன. முதல்வரை விட்டுப் பிரிவதற்கு முன்பு சசிகலா மட்டும் தனியாக பெங்களூரு கோர்ட்டுக்குப் போயிருந்தார் அல்லவா? அப்போது, பிரச்னைக்குரிய செயலர் சசிகலாவுக்குப் போன் செய்து பேசிய ஆதாரம் முதல்வரின் கவனத்துக்குப் போயிருக்கிறதாம். அந்த உரையாடலில், 'உங்க பிளான்படி எல்லாம் சரியாப் போயிட்டு இருக்கும்மா..’ என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறாராம் அந்த அதிகாரி. அவர் குறிப்பிடும் 'பிளான்’  என்ன என்ற விசாரணை நடக்கிறது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் வேறு இடத்துக்கு மாறுதல் வாங்கிக்கொண்டு போய்விட நினைத்தவர் அதிர்ச்சியில் இருக்கிறார்!''

''ஓஹோ?''

''மூத்த அமைச்சர் ஒருவர் நொந்து போய் இருக்கிறார்.  சசிகலா குரூப் வெளியேற்றத்துக்குப் பிறகு அவருக்கு நல்ல துறை கிடைத்தது. கட்சியிலும் ஆட்சியிலும் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிட்டார். ஆனால், சொந்த மகனால் வருத்தமாம். கொங்கு மண்டலத்தில் அந்தப் பையனுக்குக் கல்லூரி கட்டிக் கொடுத்து நிம்மதியான வாழ்க்கை அமைத்துக் கொடுத்து விட்டாராம். ஆனால், சில வாரங்களாக சென்னையில் வந்து உட்கார்ந்து கொண்டு சில பவர் புரோக்கர்களின் ஆசைக்குப் பலியாகி... அரசியல் ஆசையும் துளிர்விட்டு, அமைச்சரான அப்பா பெயருக்கே சிக்கலை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டாராம். 'எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு. ஆனாலும் மகன் கேட்கலை’ என்று அமைச்சர் புலம்புகிறாராம். 'அம்மா கவனத்துக்குப் போய் பதவிக்கு வேட்டு வைக்கப்பட்டு விடுமோ?’ என்று அமைச்சரின் நண்பர்களும் புலம்ப ஆரம்பித்து உள்ளார்கள்!''

''அடடா!''

''தென்மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் செல்லப்பாண்டியன் வீட்டு விவகாரம் தொடர்பாக உமது நிருபர் ஒரு செய்தியை எழுதி இருந்தார். அவரது மகன் காதலித்து ஏமாற்றியதாக, ஒரு பெண் புகார் அளித்த தகவல் அது. அந்தப் பேட்டி வந்ததற்குப் பிறகு லோக்கல் போலீஸ் அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை மிரட்டியதாகத் தகவல். மேலிடத்தில் கேட்டபோது, 'அமைச்சர் மீதான விசாரணை இன்னும் முடியவில்லை’ என்கிறார்கள். அம்மாவின் தீர்ப்புக்காக அந்தப் பெண் காத்திருக்கிறாராம். அடுத்து, நீதிமன்றத்தை நாட இருக்கிறாராம்!'' என்று சொல்லிவிட்டுப் புறப்படத் தயாரான கழுகாருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. படித்துவிட்டு நிமிர்ந்தார்.

''கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில், அந்த நிறுவனத்தைத் திறக்கத் தேவையான முன்னேற்பாடுகளை மாநில அரசாங்கம் எடுக்கப்போகிறது என்று சில நாட்களுக்கு முன் சொன்னேன் அல்லவா? மாநில அரசுக்கு அறிக்கை கொடுக்க ஒரு வல்லுநர் குழுவை முதல்வர் அமைத்துள்ளார். பேராசிரியர் எம்.ஆர்.சீனிவாசன், டாக்டர் அறிவுஒளி, டாக்டர் எஸ்.இனியன், ஓய்வுபெற்ற  ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜயராகவன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனால், சங்கரன்கோவில் இடைத்தேர்தல் முடிந்ததும் கூடங்குளம் திறக்கப்பட்டுவிடும்'' என்று சொல்லிவிட்டு கழுகார் பறந்தார்!

படம்: ரவி ராஜ்

வேகம் காட்டும் அமலாக்கத்துறை

மிஸ்டர் கழுகு: பெங்களூருவில் 'நொந்த' சசி!

''ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாநிதிமாறன் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். அதற்குப்பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை'' என்று, 'பொதுநல வழக்குப் புலி பிரசாந்த் பூஷண்... உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய... நீதிபதிகள் சாட்டையைச் சுழற்றிய சம்பவம் இரண்டு வாரங்களுக்கு முன்னால் நடந்தது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ. தனது நடவடிக்கைகளில் வேகம் காட்டி வரும் நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரு ஸ்டெப் முந்திக் கொண்டு விட்டார்கள்.

''2004 - 07 கால கட்டத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதிமாறன், ஏர்செல் நிறுவனத்துக்கு லைசென்ஸ் கொடுப்பதில் பாரபட்சம் காட்டினார். இதனால் எங்களது நிறுவனத்தின் வர்த்தகம் முடக்கப்பட்டது. இதை அடுத்து ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம். இந்தக் காரியங்களை தயாநிதிமாறன் பார்த்தார். இந்த விற்பனைக்குப் பிறகு மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு அந்த லைசென்ஸ் உரிமங்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்ஸிஸ் நிறுவனம் முதலீடு செய்தது. இதில் சுமார் 550 கோடி மதிப்பிலான பணப்பரிமாற்றம் நடந்துள்ளது'' என்று 'ஸ்டெர்லிங்’ சிவசங்கரன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்திருந்தது.

இதன் தொடர் விளைவாக மத்திய அமைச்சர் பதவியை தயாநிதிமாறன் ராஜினாமா செய்ய வேண்டி வந்தது. தயாநிதிமாறன், கலாநிதி மாறன் ஆகிய இருவரது பெயரையும் உட்படுத்தி சி.பி.ஐ. அந்த வழக்கை விசாரித்து வருகிறது. இவர்கள் இருவரது வீடுகளிலும் தேடுதல் நடவடிக்கையும் நடந்தேறியது.

இந்த நிலையில் மத்திய அமலாக்கத்துறை இந்த விஷயத்தை இப்போது கையில் எடுத்துள்ளது. அன்னியச் செலாவணி மோசடி தடுப்புப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி செய்திகள் கூறுகின்றன. சி.பி.ஐ.  நடத்திய விசாரணைகளைப் போலவே அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தத் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் வீட்டுக்கு தயாநிதிமாறன் சென்று ஆலோசனை நடத்தியதாகவும் டெல்லியில் ஒரு செய்தி பரவியது.

''அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகிய இரண்டும் ஒரு விவகாரத்தில் இறங்குவது இந்த வழக்கு சீரியஸாகச் செல்கிறது என்பதற்கான அடையாளம்'' என்கிறார்கள் டெல்லி அரசியல் வட்டாரத்தில். ''வரட்டும் விசாரணை... பதில் சொல்லத் தயார்'' என்று ரெடியாகி வருகிறது தயாநிதி மாறன் தரப்பு.

மிஸ்டர் கழுகு: பெங்களூருவில் 'நொந்த' சசி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism