Published:Updated:

`ஆர்.டி.ஓ-தானே, பவர் இருக்குதுல்ல, சஸ்பெண்டு பண்ணுங்க!' - சப்கலெக்டர்-தாசில்தார் அதிர்ச்சி ஆடியோ

ஜெ.முருகன்
`ஆர்.டி.ஓ-தானே, பவர் இருக்குதுல்ல, சஸ்பெண்டு பண்ணுங்க!' - சப்கலெக்டர்-தாசில்தார் அதிர்ச்சி ஆடியோ
`ஆர்.டி.ஓ-தானே, பவர் இருக்குதுல்ல, சஸ்பெண்டு பண்ணுங்க!' - சப்கலெக்டர்-தாசில்தார் அதிர்ச்சி ஆடியோ

முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் முறைகேடு புகார் குறித்து அறிக்கை கேட்ட விழுப்புரம் துணை ஆட்சியரை,  தாசில்தார் ஒருவர் சகட்டுமேனிக்கு வறுத்தெடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பாக வலம் வந்துகொண்டிருக்கிறது.

`ஆர்.டி.ஓ-தானே, பவர் இருக்குதுல்ல, சஸ்பெண்டு பண்ணுங்க!' - சப்கலெக்டர்-தாசில்தார் அதிர்ச்சி ஆடியோ

கடந்த ஆண்டு குமாரவேல் என்பவர் விழுப்புரம் மாவட்டத்தின் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். ஆனால், சில மாதங்களிலேயே அதிரடியாக அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து மறுநாளே அவரைப் பணியிலிருந்து விடுவித்தது விழுப்புரம் மாவட்ட நிர்வாகம். அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்த குமாரவேல், இடமாறுதல் உத்தரவுக்குத் தடையாணை பெற்று மீண்டும் பணியில் சேர்ந்தார். அப்போது தனது இடமாறுதலுக்கு மாவட்டத்தில் உள்ள சில முக்கிய அதிகாரிகள்தாம் காரணம் என்று குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் இறந்து போனவர்களின் பெயர்களில் முதியோர் உதவித் தொகை வழங்கி முறைகேடு நடப்பதாக வந்த புகார்களையடுத்து, விழுப்புரம் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட வானூர், விக்ரவாண்டி, விழுப்புரம் தாலுகாக்களில் முதியோர் உதவித்தொகை பெறும் பயனாளிகளின் விவரம் மற்றும் இறந்துபோனவர்களின் பட்டியல் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தார் துணை ஆட்சியர் குமாரவேல். அதுகுறித்துப் பேச வானூர் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் சங்கரலிங்கம், துணை ஆட்சியர் குமாரவேலுவிடம் செல்போனில் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த உரையாடல்:

தனி தாசில்தார் சங்கரலிங்கம்: ``வணக்கம் சார்... நான் சங்கரலிங்கம் வானூர் தாசில்தார் பேசுகிறேன்.”

துணை ஆட்சியர் குமாரவேல்: “சொல்லுங்க.”

தாசில்தார்: “புதன்கிழமை என்னென்ன சார் எடுத்து வரணும்?”

துணை ஆட்சியர்: “நீங்க வந்ததிலிருந்து முதியோர் உதவித்தொகை எத்தனை பேருக்கு கொடுத்திருக்கிறீர்கள் போன்ற விவரங்களை எடுத்துட்டு வாங்க.”

தாசில்தார்: ``இதுவரை நான் யாரையும் தேர்வு செய்யவில்லை. என்ன ரிப்போர்ட் வேணும் உங்களுக்கு.”

துணை ஆட்சியர்: ``அதைத்தான் சொல்லிட்டனேங்க. வாங்கிக்கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர், இறந்தவர்கள் எத்தனை பேர், அதன் பிறகு கணக்கெடுப்பு நடத்தி எத்தனை பேரை சேர்த்தீங்க.”

தாசில்தார்: ``இறந்தவங்க 82 பேர். அவர்களுக்குப் பதிலாக யாரையும் சேர்க்கவில்லை.”

துணை ஆட்சியர்: ``ஏன், யாரையும் சேர்க்கவில்லை.”

தாசில்தார்: ``ஏனென்றால் தேர்தல் நடந்தது.''

துணை ஆட்சியர்: “தேர்தல்தான் முடிந்துவிட்டதே.”

தாசில்தார்: ``தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்ததால் என்னால் விசாரணை செய்து சேர்க்க முடியவில்லை. இதைப்பற்றி திடீர்னு கேட்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு.''

துணை ஆட்சியர்: “அனைத்தையும்தான் கேட்க வேண்டும்.”

தாசில்தார்: ``விழுப்புரத்திலும் விக்ரவாண்டியிலும் கேளுங்க.”

துணை ஆட்சியர்: ``அவங்ககிட்டயும்தான் கேட்டிருக்கேன். அந்தக் கேள்வி உங்களுக்கு அவசியமில்லாதது.”

தாசில்தார்: ``நீங்கள் இதைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லை.”

துணை ஆட்சியர்: “ஏங்க… நான் தாங்க கேட்கணும். வேற யாரு கேட்பாங்க. நீங்க ஏன் அப்படிக் கேட்டீங்க.”

தாசில்தார்: “நான் அப்படிலாம் கேட்கலையே. நீங்க கேளுங்க… உங்களுக்கு ரைட்ஸ் இருக்கு கேளுங்க. நான் புதிதாக யாரையும் சேர்க்கவில்லை.”

துணை ஆட்சியர்: “ஏன் சேர்க்கவில்லை.”

தாசில்தார்: “தகுதியான ஆட்கள் இல்லை.”

துணை ஆட்சியர்: “ஓ... அப்படியா… இதைக் கடிதம் வழியா கேட்கிறேன். நீங்களும் அப்படியே பதில் சொல்லிடுங்க.”

தாசில்தார்: “அப்படிக் கேளுங்க. அதைவிட்டு போன் போட்டு எடுத்துட்டு வாங்கனு கேட்காதீங்க.”

துணை ஆட்சியர்: “ஏன் கேட்கக் கூடாதுங்க.”

தாசில்தார்: “வானூரில் மட்டும் கேட்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு. விக்ரவாண்டியில் கேட்டீங்களா, விழுப்புரத்தில் கேட்டீங்களா ?”

துணை ஆட்சியர்: “யாரை எப்போது எப்படிக் கேட்க வேண்டும் என்று எனக்குத் தெரியும்.”

தாசில்தார்: ``உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் பாத்துக்கலாம் (குரலை உயர்த்துகிறார்). விழுப்புரத்தில் என்ன நடந்திருக்குனு தெரியுமா?”

`ஆர்.டி.ஓ-தானே, பவர் இருக்குதுல்ல, சஸ்பெண்டு பண்ணுங்க!' - சப்கலெக்டர்-தாசில்தார் அதிர்ச்சி ஆடியோ

துணை ஆட்சியர்: “பாத்துக்கலாங்க.”

தாசில்தார்: “நல்லா பாத்துக்கலாம். என்னை உங்களால் என்ன செய்ய முடியும் என்பதையும் பார்த்துக்கலாம். விக்ரவாண்டியில் நடந்தது குறித்து அனைத்தையும் எடுத்து வர்றேன். அதன் மீது ஆர்.டி.ஓ நடவடிக்கை எடுக்கணும்.”

துணை ஆட்சியர்: “நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்க போதும்.”

தாசில்தார்: ”நீங்க கேட்பதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. நான் உங்களுக்கு அடிமை கிடையாது. லீவு போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.”

துணை ஆட்சியர்: ``நீங்கள் எனது கீழ் பணியாற்றும் அதிகாரி.”

தாசில்தார்: ``அய்யோ… அய்யோ... எனக்கு ஒண்ணுமே புரியலையே. நீங்க கேட்டதும் என் உடம்பெல்லாம் நடுங்குது. ரிட்டனா கேளுங்க, நீங்க ஓரலா எதுக்கு கேக்கறீங்க. விக்ரவாண்டியில இருந்து உங்களுக்கு எத்தனை மனுக்கள் வந்திருக்கு.”

துணை ஆட்சியர்: “ரிட்டனாகவும் கேட்பேன். ஓரலாகவும் கேட்பேங்க. எனக்கு அதிகாரம் கொடுத்திருக்காங்க. நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில்சொல்லுங்க. என்கிட்ட கேள்வி கேட்க நீங்க என் உயரதிகாரியா.”

தாசில்தார்: `அய்யையோ... பயங்கர அதிகாரம் உங்களுக்கு கொடுத்துட்டாங்க. பெரிய ஆபீஸர் நீங்க. திங்கள்கிழமை 4 மணிக்கு வருவாய் அலுவலர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரா நான் வர்றேன்.”

துணை ஆட்சியர்: ``மாவட்டச் செயலாளர்லாம் வர வேண்டாம். நான் கூப்பிட்டது வானூர் சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தாரைத்தான். அவர் மட்டும் வந்தால் போதும்.''

தாசில்தார்: ``இந்தக் கதையெல்லாம் எங்கிட்ட தேவையில்லை. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வர்றேன். விழுப்புரம், விக்ரவாண்டி தாலுகாவுல என்ன நடந்ததுனு எல்லாத்தையும் எடுத்திக்கிட்டு வர்றேன். அதுமேல ஆர்.டி.ஓ நடவடிக்கை எடுக்கல… பார்த்துக்கிறேன். எவனோ சொல்றான் என்பதற்பாக நீ ஆட்டம் போட்டிக்கிட்டுருப்பது எனக்குத் தெரியாதுனு நினைச்சிக்கிட்டிருக்கியா. இவர் வந்துட்டாரு சிவகங்கையிலிருந்து. ஒரு பூச்சு வந்திட்டாரு, பூச்சு வந்து என்னை இது பண்ண போறாரு.”

துணை ஆட்சியர்: ``அநாவசியமா பேசாதீங்க. ரொம்ப சிரமப்படுவீங்க.”

தாசில்தார்: ``என்னை மட்டும் கேட்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு. என் மேல பெட்டிஷன் வந்திருக்கா, வந்தா காட்டுங்க. உங்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. நான் உங்க சபாடினேட் கிடையாது.''

துணை ஆட்சியர்: ``என்ன நிலைமையில இருக்கீங்க, சபாடினேட் கிடையாதுன்னு சொல்றீங்க.”

தாசில்தார்: ``உங்க சபாடினேட் தான் சார். நாளைக்கே என்னை ஜூனியர் அசிஸ்டன்ட் ஆக்கிடுங்க எனக்கு கவலையில்லை. எனக்கு பயமும் இல்லை. ஆர்.டி.ஓ-வுக்கு என்ன அதிகாரம் இருக்குங்கறதையும் நான் செக் பண்றேன். திங்கள்கிழமை வருவாய் அலுவலர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரா 400 பேரோட வந்து உங்களை மீட் பண்றேன்.”

துணை ஆட்சியர்: ``வானூர் தாசில்தாரா மட்டும் வாங்க. நான் பர்மிஷன் கொடுத்தாதாங்க நீங்க என்னை மீட் பண்ண முடியும்.”

தாசில்தார்: ``நீங்க என்ன பர்மிஷன் கொடுக்கிறது. நான் வந்து சந்திக்கிறேன். நீ ஆர்.டி.ஓ தானே, பவர் இருக்குதுல்ல... உடனே என்னை ரிலீவ் பண்ணு, சார்ஜ் குடு, சஸ்பெண்டு பண்ணு. ஊழல் பண்ணிட்டேன்னு சொல்லி சஸ்பெண்டு பண்ணு. ரிப்போர்ட்டு பண்ணு. திங்கள்கிழமை (குரல் உயர்த்தி மிரட்டும் தொனியில்) நீ ரிப்போர்ட்டு அனுப்பணும். எனக்கு எல்லா சட்டமும் தெரியும். நான் திங்கள்கிழமை வந்து பார்த்துக்கிறேன்.

இதுகுறித்து விளக்கம் கேட்க துணை ஆட்சியர் குமாரவேலுவை தொடர்பு கொண்டோம். “சம்பந்தப்பட்ட அந்த அதிகாரி மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முடித்துக் கொண்டார்.

வானூர் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தார் சங்கரலிங்கத்திடம் பேசினோம். “நான் தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக இருக்கிறேன். இது எங்களின் சங்கம் தொடர்பான பிரச்னை. உள்நோக்கத்தோடு நான் போனில் பேசியதை பதிவு செய்து வெளியிட்டிருக்கின்றனர்” என்றார்.