
தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மகனும் திரைப்பட நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணிச் செயலாளர் பதவிக்கு முடிசூட்டு விழா நாளை மாலை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.
தி.மு.க-வின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றாகக் கருதப்படுவது இளைஞர் அணிச் செயலாளர் பதவி. கருணாநிதி தி.மு.க தலைவராக இருந்தபோது அவருடைய மகன் ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட அணிதான் இளைஞர் அணி. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணியின் செயலாளர் பொறுப்பிலிருந்த ஸ்டாலின், தி.மு.க வின் பொருளாளர் பதவிக்கு வந்தபோதே தான் உருவாக்கிய இளைஞரணி பதவியை விட்டுக்கொடுத்தார். அதற்குபின் அந்தப் பதவியில் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் இருந்தார். இந்நிலையில் கருணாநிதி மறைவுக்குப் பிறகு ஸ்டாலின் தி.மு.க தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருடைய வாரிசான உதயநிதி தி.மு.க கூட்டங்களில் வலிய கலந்துகொள்ள ஆரம்பித்தார்.
தி.மு.க மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்க வாய்மொழியாக வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அவருடை பிரசாரத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்ததை ஒரு தந்தையாகப் பார்த்து பூரிப்படைந்துள்ளார் ஸ்டாலின். அதன்பிறகே உதயநிதிக்கு கட்சிப் பதவி வழங்க வேண்டும் என்ற பேச்சு வீட்டுக்குள்ளிருந்து கட்சிக்குள் சென்றுள்ளது. கடந்த மாதமே அவர் வசம் இளைஞர் அணி பதவியை ஒப்படைக்க தலைமை திட்டமிட்டது. ஆனால், ஜோதிட ரீதியாக இப்போது வேண்டாம் என்று தடுத்துவிட்டார்கள். உதயநிதி பதவியேற்க வசதியாக வெள்ளக்கோவில் சுவாமிநாதன் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்கெனவே கட்சித் தலைமையிடம் கொடுத்துவிட்டார்.
இந்நிலையில் இன்று உதயநிதியின் நெருங்கிய நண்பரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷுக்கு நெருக்கமானவர்கள் முகநூலில் நாளை உதயநிதி பதவியேற்கப் போவதாகப் பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் விசாரித்தபோது “உண்மைதான். செவ்வாய்க்கிழமை அமாவாசை, இன்று பாத்திமை, வியாழக்கிழமை வளர்பிறை என்பதால் அன்று மாலை முறைப்படி அறிவிப்பு வரவுள்ளது. இதுவும் நல்ல நேரம் பார்த்தே இந்த அறிவிப்பையும் வெளியிட உள்ளதாம் தி.மு.க. தலைமை. கருணாநிதி குடும்பத்தில் மூன்றாம் தலைமுறையின் அரசியல் என்ட்ரி வளர்பிறை நாளில் ஆரம்பமாகிறது.