Published:Updated:

சோனியா கோரிக்கை: அன்னா நிராகரிப்பு

புதுடெல்லி, ஏப்.7, 2011

சோனியா கோரிக்கை: அன்னா நிராகரிப்பு

உண்ணாவிரதத்தை உடனடியாக கைவிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விடுத்த கோரிக்கையை, ஊழலுக்கு எதிராக போராடி வரும் மூத்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே நிராகரித்தார். ##~~##

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை அரசு சாராத பொதுநலன் கருதும் குடிமக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்புடன் இயற்றி, அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, மூத்த சமூகப் போராளியான அன்னா ஹசாரே சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.

டெல்லியில் மூன்றாவது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்துள்ள அவர் தனது உண்ணாவிரத்தைக் கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து சோனியா வெளியிட்ட அறிக்கையில், "நாட்டின் மிக முக்கிய பிரச்னையான ஊழல் ஒழிப்பு குறித்த ஹசாரேஜியின் கருத்துக்கள் மீது இந்திய அரசு முழு கவனம் செலுத்தும். ஊழலை ஒழிப்பதற்கு அரசு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, அன்னா தனது உண்ணாவிரதத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என கோருகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கைக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அன்னா ஹசாரே, லோக்பால் மசோதா விவகாரத்தில் உறுதியான தீர்வு எட்டப்படும் வரை தனது போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை கூறியுள்ளார்.

அத்துடன், இந்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சோனியா வழிவகுக்க வேண்டும் என்று அன்னா ஹசாரே கேட்டுக் கொண்டார்.

தொடர்புடையச் செய்தி: ஹசாரே இயக்கம் தீவிரம்... அன்னாவை கூட்டுக்குழு தலைவராக்க மத்திய அரசு மறுப்பு