பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
தலையங்கம்

ந்து வருடங்களுக்கு ஒருமுறை நம் கையில் கொடுக்கப்படுகிறது வாக்குச் சாவி. அதை வைத்து சொர்க்கமோ, நரகமோ... அதன் கதவுகளை, நாமே திறக்கலாம். இது, தமிழ்நாட்டு மக்கள் கைகளுக்கு மறுபடியும் சாவி வரும் நேரம்!

தேர்தல் என்றாலே, கள்ள ஓட்டு, வன்முறை, வேட்பாளரின் அளவுக்கு மீறிய விளம்பரச் செலவு என்றுதான் புகார் எழும். ஆனால், சமீப காலமாக நடந்த இடைத் தேர்தல்களில், இதை எல்லாம் தாண்டி பேசப்பட்ட விஷயம் - வாக்காளர் களுக்கு பிரியாணி விருந்து, உறையில்வைத்து காந்தி நோட்டு!

'அது உங்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட வரிப் பணம்தான். எனவே, அவர்கள் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால், ஓட்டை மட்டும் எங்களுக்குப் போடுங்கள்' என்று எதிர்க் கட்சிகளும் வாக்காளர்களை 'கை நீட்டும் கலை' நோக்கி உற்சாகப்படுத்துகின்றன.

இந்தச் சூழலில், 'உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்ற கோஷத்தோடு, மக்களைச் சந்தித்து விழிப்பு உணர்வு உண்டாக்கும் பணியில் சில அமைப்புகள் இறங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

இன்றைய மகிழ்ச்சிக்காக நாளைய வாழ்க்கையை அடகுவைக்கும் எத்தனையோ காரியங்கள் இங்கே நடக்கின்றன. அவற்றில் மிக அபாயகரமானது இந்த 'நோட்டுக்கு ஓட்டு' கலாசாரம் என்பதை எல்லோருக்கும் அழுத்தமாக எடுத்துச் சொல்லும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

தேடி வந்து திணிக்கும் அரசியல்வாதிகளிடம் பணத்தை வாங்கியவர்கள், அப்படி வாங்க மறுத்தவர்களைப் 'பிழைக்கத் தெரியாதவர்கள்'போலப் பார்க்கும் நிலை மாற வேண்டும். ஜனநாயகம் அளித்திருக்கும் கம்பீரமான உரிமையை, காசுக்காக அடகுவைப்பவர்களைச் சமூக விரோதிகள்போலப் பார்க்கும் நிலை உருவாக வேண்டும்!

சமூகத்தின் மீது விஷம் பாய்ச்சும் பூச்சிகள் பணக் கட்டுகளோடு தேடி வரும் பட்சத்தில், 'மக்களே திரண்டு அந்தப் பூச்சிகளைப் பிடித்து, அவற்றின் கொடுக்கை உடைத்தார்கள்' என்பதுதான் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும் வரும் தேர்தல் களத்தில்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு