Published:Updated:

பொது சொத்துக்களுக்கு சேதம்: ராமதாஸ் நேரில் ஆஜராக தமிழக அரசு நோட்டீஸ்!

விகடன் விமர்சனக்குழு
பொது சொத்துக்களுக்கு சேதம்:  ராமதாஸ் நேரில் ஆஜராக தமிழக அரசு நோட்டீஸ்!
பொது சொத்துக்களுக்கு சேதம்: ராமதாஸ் நேரில் ஆஜராக தமிழக அரசு நோட்டீஸ்!

சென்னை: மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தின்போது பா.ம.க.வினர் பொது சொத்துக்களுக்கு ஏற்படுத்திய சேதம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கு வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மரக்காணம் கலவரத்தை தொடர்ந்து போலீசாரின் நடவடிக்கையைக் கண்டித்து, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.இதைக் கண்டித்து, வட மாவட்டங்களில், வன்முறை சம்பவங்கள் நடந்தன. 800க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் நொறுக்கப்பட்டன; 15க்கும் மேற்பட்ட வாகனங்கள், தீ வைத்து எரிக்கப்பட்டன. இதில், மூன்று பேர் இறந்தனர்.

 

பொது சொத்துக்களுக்கு சேதம்:  ராமதாஸ் நேரில் ஆஜராக தமிழக அரசு நோட்டீஸ்!

இதனையடுத்து வன்முறையாளர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, பா.ம.க.,வைச் சேர்ந்த, 96 பேர், குண்டர் சட்டத்திலும், 24 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், இழப்புத் தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்தே வசூலிக்க வகை செய்யும், "தமிழ்நாடு சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992' என்ற சட்டத்தின் படி, இழப்பீட்டுத் தொகையை, பா.ம.க. வினரிடமிருந்து பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி பொதுச் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டபோது, 80 முதல் 100 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்தது.

##~~##
இத்தொகையை, பா.ம.க.வினரிடமே வசூலிக்கும் அதிரடியில் அரசு இறங்கியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே. .மணி, வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு ஆகிய 3 பேருக்கு  வருவாய் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில்  ஜூலை 1-ந்தேதி முதல் வருவாய்த் துறை ஆணையர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற உள்ளது. அதில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.