Published:Updated:

மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க- அ.தி.மு.க ரகசிய உடன்பாடு: விஜயகாந்த் சந்தேகம்

மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க- அ.தி.மு.க ரகசிய உடன்பாடு: விஜயகாந்த் சந்தேகம்
மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க- அ.தி.மு.க ரகசிய உடன்பாடு: விஜயகாந்த் சந்தேகம்
மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க- அ.தி.மு.க ரகசிய உடன்பாடு: விஜயகாந்த் சந்தேகம்

சென்னை: கனிமொழியின் வெற்றிக்கு ஜெயலலிதா மறைமுகமாக ஆதரவு அளித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், தி.மு.க - அ.தி.மு.க இடையே ரகசிய உடன்பாடு உள்ளனவோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "நடந்து முடிந்த  மாநிலங்களவை தேர்தலில்  தே.மு.தி.க பல வகைகளில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஏனெனில்  இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை விட, யார் தோல்வியடைய வேண்டும் என்பதில்தான் ஆளும் அ.தி.மு.க. அரசு அதிக ஆர்வம் காட்டியது.

அ.தி.மு.க. முதலில் 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டு, பின் தி.மு.க. சார்பில் கனிமொழி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் அ.தி.மு.க. தனது வேட்பாளரை வாபஸ் பெற செய்து, அந்த ஒரு இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு விட்டுக் கொடுத்ததன் மூலம் மறைமுகமாக தி.மு.க.வை ஆளும் அ.தி.மு.க. அரசு வெற்றி பெறச் செய்யவா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.

ஆளும் அ.தி.மு.க. அரசு நினைத்திருந்தால் தன்னுடைய வாக்குகள் மற்றும் அவர்கள் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் மூலம் வெகு சுலபமாக தி.மு.க.வை தோல்வியடையச் செய்திருக்க முடியும். தி.மு.க. வெற்றியின் மூலம் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் வெளியில் தங்களை எதிரிகளைப் போல் காட்டிக் கொண்டாலும், தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க. செய்த தவறுகளை கண்டு கொள்ளாமலும், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தி.மு.க. செய்த தவறுகளை கண்டும், காணாததும் போல் இருப்பதும் மறைமுகமாக இரண்டு கட்சிகளுக்கும் ரகசிய உடன்பாடு கொண்டு உள்ளனவோ என்ற சந்தேகம் வலுப்பெறவே வழி செய்கிறது.

2ஜி வழக்கில் 1,76,000 கோடி ஊழல் நடந்தபோது கடுமையாக கனிமொழியையும், தி.மு.க.வையும் விமர்ச்சித்த ஜெயலலிதா மறைமுகமாக கனிமொழியின் வெற்றிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது ஏன்? ஒருவேளை தன் மீதும் ஊழல் வழக்கு பெங்களூரு நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளாக நடப்பதன் எதிரொலியாக இருக்குமோ என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தத் தேர்தலின்  மூலம் பலரின் முகத்திரை  கிழிக்கப்பட்டு, உண்மை சுயரூபம் வெளிப்பட்டுள்ளது. தொகுதியின் மேம்பாட்டிற்கும், தொகுதி மக்களின் நலன் கருதிதான் முதல்வரை சந்தித்தோம் என்று கூறியவர்களின் நாடகம் முடிவுக்கு வந்துள்ளது. அதேபோல் தொகுதி பிரச்னைகளுக்காகத்தான் அந்த எம்.எல்.ஏ.க்களை சந்தித்தேன் என்ற முதல்வரின் உள்நோக்கம் தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளது. இத்தனை நாள் தங்கள் சுய லாபத்திற்காக தொகுதியையும், தொகுதி மக்களையும் தங்கள் பதவியின் பாதுகாப்பு அரணாக பயன்படுத்தியவர்களின் வஞ்சக எண்ணத்தையும், குறுகிய மனப்பான்மையையும் கொண்டு, பசுத்தோல் போர்த்திய புலிகளாக வலம் வந்தவர்களை இப்பொழுது அந்த தொகுதிகளின் மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

தங்களுக்கு அரசியலில் முகவரி கொடுத்து, அடையாளம் காண்பித்த தன் கட்சிக்கும், தலைமைக்கும் துரோகம் செய்து விட்டு, மாற்றுக் கட்சிகளுக்கு வாக்களித்ததன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் மன்னிக்க முடியாத துரோகிகள் இவர்கள் என்பதனை வருங்காலம் உணர்த்தும்.

##~~##
தேமுதிகவை பொறுத்த வரையில்  மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை தேர்தல் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்டு, சில சட்டமன்ற உறுப்பினர்களை தவிர, மற்ற அனைவரும் முதன் முறையாக மாநிலங்களவை தேர்தலில் வாக்களிக்க வைத்ததே, எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி.
2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தொடங்கி இந்த எட்டு ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்ற எல்லா தேர்தல்களிலும் வெற்றி, தோல்விகளை பற்றி கவலைப்படாமல் தனது ஜனநாயக கடமையை தனக்கே உரிய பாணியில் கம்பீரத்தோடு எதிர்கொண்டு பணத்திற்கோ, பாசாங்கிற்கோ இடமளிக்காமல் மக்கள் பணி ஒன்றே எங்கள் கொள்கை, எங்கள் லட்சியம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு செயல்படும் எங்களுக்கு இந்த ஒரு மாநிலங்களவை தேர்தல் தே.மு.தி.க.வை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதை தெரிவித்துக் கொண்டு, வாக்களித்த 22 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தே.மு.தி.க. தன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.