Published:Updated:

தமிழை மறந்தாரா ஜெயலலிதா?

சிக்கலில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

##~##

மொழி, இலக்கியம், பண்பாட்டு வளர்ச்சி மற்றும் கலா​சாரம் ஆகியவற்றை வளர்ப்பதற்காக, மத்திய அரசு பல நூறு கோடி ரூபாய்களை ஒதுக்கி, நாடு முழுவதும் பல நிறுவனங்களை நடத்தி வருகிறது. மத்திய மனித வளத் துறையின் கீழ் இயங்கும் இந்த அமைப்புகளுக்கு மத்திய மனிதவளத்துறை அமைச்சரே தலைவராக செயல்படுவார். இந்த வகையில், தமிழ்மொழி செம்மொழியான பிறகு, அதனை வளர்ப்பதற்காக, 'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்’ மார்ச் 2006 முதல் மைசூரில் ஒரு திட்டமாக செயல்படத் தொடங்கியது. 2008-ல் சென்னை காம​ராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்துக்குத் தற்காலிகமாக மாற்றப்பட்டது.

 இந்த நிறுவனத்தின் ஆட்சிக்குழுவுக்கு மட்டும் தமிழக முதல் அமைச்சரே தலைவராகவும், மத்திய மனிதவளத்துறையின் இணை அமைச்சர் துணைத் தலைவராகவும் இருக்கும்படி மத்திய அரசிடம் பேசி, காரியம் சாதித்தார் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி. அந்தச் செயல்தான், இப்போது அந்த நிறுவனம் முடங்க முதல் காரண மாகிவிட்டது என்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
தமிழை மறந்தாரா ஜெயலலிதா?

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தன் செயல் பாடுகளைத் துரிதப்படுத்தவேண்டிய அதன் ஆட்சிக்

தமிழை மறந்தாரா ஜெயலலிதா?

குழு,  இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே கூடி இருக்கிறது. இதுகுறித்து, மனிதவளத் துறையின் டெல்லி அலுவலக வட்டார அதிகாரிகளிடம் பேசினோம். ''அக்டோபர் 12, 2004-ல் தமிழ் மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டு 2006-ல் அதற்கான நிறுவனம் துவக்கப்பட்டது. அது ஒரு தன்னாட்சி நிறுவனமாக ஜனவரி 21, 2009-ல் சென்னையில் பதிவு செய்யப்பட்டது. பிறகு, ஜூன் 29, 2010 அன்று அமைக்கப்பட்ட அதன் ஆட்சிக் குழுவின் (கவர்னிங் போர்டு) முதல் கூட்டம், அதே வருடம் அக்டோபர் 20-ல் நடந்தது. கருணாநிதி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அடுத்து அவரது தலைமையிலே கூடி இருக்க வேண்டிய ஒரு கூட்டம், தேர்தல் அறிவிப்பு காரணமாக நடைபெறவில்லை.

தேர்தலில் வென்று புதிய முதல்வரான ஜெய​லலிதா தலைமையில் கூடவேண்டிய அக்டோபர் கூட்டத்துக்காக பல கடிதங்​கள் அனுப்பியும், அவர் நாள் ஒதுக்கவே இல்லை.

இதற்காக, 11-வது ஐந் தாண்டுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 76.32

தமிழை மறந்தாரா ஜெயலலிதா?

கோடி யில், சுமார் 38 கோடி மட்டுமே இதுவரை செல​விடப்​பட்டு உள்ளது. மீதித் தொகையை வரும் மார்ச் மாதத்துக்குள் செலவழிக்​கவில்லை என்றால், அது வீணாகப் போய்விடும். ஆட்சிக்குழுவின்துணைத் தலைவரான மத்திய இணை அமைச்சர் புரந்தரேஸ்​வரியை வைத்துக் கூட்டத்தை நடத்த மனிதவளத்துறை கடந்த ஜனவரி 18-ல்  திட்ட​மிட்டதை, மத்திய அரசு தடுத்துவிட்டது. ஜெய​லலி தாவைப் பகைத்துக்​கொள்ள விரும்பாததுதான் அதற்குக் காரணம்'' என்​கிறார்கள்.

செம்மொழி தமிழாய்​வு மத்திய நிறுவனம் ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகியும், தலைமைப் பதவியான இயக்குனருக்கு நிரந்த​ரமாக ஒருவரைப் நியமிக்கவில்லை. சென்ற ஆண்டுதான் பதி​வாளர் மற்றும் நிதிஅலுவலர் பதவிகள் நிரப்பப்​பட்டன. தவிர, முக்கியப் பதவிகளான இயக்குநர், துணை இயக்கு​நர்கள், இணை மற்றும் துணை பேராசிரியர்கள் உட்பட முக்கியமான 149 பதவிகள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.

இதுகுறித்துப் பேசும் அலிகர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் து.மூர்த்தி, ''ஒரு சாதாரண துவக்கப் பள்ளி ஆசிரியர் பதவிக்குக்கூட தகுதி யானவர்களையே தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால், இயக்குநர் பதவிக்கு பெரும் கேலிக்கூத்தே நடந்து விட்டது. முதலாவதாக, இயக்குநர் பதவிக்குக் கூடுதல் பொறுப்பு ஏற்ற மோகன், ஒரு சிவில் இன்ஜினீயர். அவருக்குப் பின் கூடுதல் பொறுப்பை ஏற்றுள்ள ஞானமூர்த்தி, ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயர். நிரந்தர இயக்குநர்கள் இல்லாத

தமிழை மறந்தாரா ஜெயலலிதா?

நிறுவனங்களுக்கு மத்திய நிறுவனங்களின் பேராசிரியர்களை மட்டுமே கூடுதல் பொறுப் பாளர்களாக நியமிக்க முடியும் என்பது விதி. அந்த விதியின்படி, இப்போது சென்னையில் மத்தியப் பல்கலைக்கழகங்கள் இல்லாமையால், சென்னை ஐ.ஐ.டி-யின் பேராசிரியர்களுக்குக் கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் தமக்குரிய சிவில் மற்றும் மெக்கானிக்கல் துறைகளில் சிறந்தவர்களாக இருந்தாலும், தமிழின் வரலாறு, பண்பாடு, மொழி மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் ஆய்வுப் பணிகளை அறியாதவர்கள். அதனால், முறையாக நடக்க வேண்டிய ஆய்வுகள் மற்றும் பெரும் திட்டப் பணிகள் தொய்வடைந்து செம்மொழி தமிழாய்வு நிறுவனமே முடங்கிக் கிடக்கிறது.

இந்த ஆய்வு நிறுவனத்துக்காக சட்டசபை வளாகத்தில் பல முக்கிய நூல்களுடன் பிரம்மாண்​டமாக அமைக்கப்பட்ட நூலகம் காலி செய்யப்பட்டது அல்லவா? அந்த நூல்களை குப்பை வாருவது போல் அள்ளி, புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தில் கொட்டி வைத்து உள்ளனர். அந்தத் துணி மூட்டைகள் இன்னும் பிரிக்கப்படாமல் உள்ளன. நூலகத்தை அமைக்க முடியாமல் தமிழ்நூல்கள் சிறைபட்டுக் கிடக்கின்றன'' என்று குமுறினார்.  

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் கூடுதல் இயக்குநரான பேராசிரியர் ஞானமூர்த்தியிடம் விளக்கம் கேட்ட​போது, ''நிரந்தரக் கட்டடத்துக்காக எங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் வந்த சிக்கலால்தான், ஐந்தா ண்டுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகையை செலவிடத் தாமதமானது. இன்னும் ஒரு வருட காலம் அவகாசம் பெற்று, மீதியையும் செலவிட்டு விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. நிரந்தரப் பதவிகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஆட்சிக்குழு கூடாமல் இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை. இதற்கான விளம்பரப் பணிகள் துவங்கிவிட்டன.  விரைவில் முடித்துவிடுவோம். இப்போதுள்ள தமிழக முதல்வர் இந்த அமைப்புக்கு அதிமுக்கியத்துவம் தரவில்லையே தவிர, முழுக்கக் கண்டுகொள்ளவில்லை எனக்கூறுவது தவறான கருத்து. ஏனெனில், அவர் புதிய தலைமை செயலகத்தில் எங்கள் நூலகத்துக்கு நான்கு அறைகள் ஒதுக்கி உள்ளார். இரண்டில் நூல்கள் அடுக்கப்பட்டு விட்டன. மீதம் உள்ளஇரண்டு அறைகளில் வேலைகள் நடப்பதால் சற்று தாமதமாகிறது'' என்று, ஒருவிதத் தயக்கத்​துடன் பேசினார்.

இதுகுறித்து, ஆட்சி மன்றக்குழு உறுப்பினரும், டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மத்திய பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவருமான பேராசிரியர் கே.நாச்சிமுத்து, ''அறிவு சார்ந்த எந்த ஒரு நிறுவனத்தையும் அரசியலுக்கு அப்பால் கட்டிக்​காத்து, அதை வளர்க்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு. கி.பி. 13-ம் நூற்றாண்டிலேயே மாறவர்மன் சுந்தர பாண்டியன் சோழநாட்டை முற்றுகையிட்டு வென்றபோது, அங்குள்ள மாட மாளிகைகள் மற்றும் கோபுரங்களையும் அழித்தாராம். ஆனால், பட்டினப் பாலை பாடியதற்காக உருத்திரங்​கண்ணனாருக்கு கரிகால் பெருவளத்தான் பரிசாகக் கொடுத்த 16 கால் மண்டபத்தை மட்டும் தமிழுக்குரியது என்பதால் விட்டு வைத்தாராம். இதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் இன்றும் உண்டு. அதுபோல், அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழைக் காப்பதிலும் வளர்ப்பதிலும் நம் ஆட்சியாளர்கள் பாரபட்சம் இன்றி செயல்பட வேண்டும்'' என்றார்.

தமிழனுக்கு மட்டுமல்ல... தமிழுக்கும் சோதனை தான்!

- ஆர்.ஷஃபி முன்னா

 திடீர் கூட்டம்

ஆட்சிக்குழுவின் தலைவர் ஜெயலலிதா வராமலே, கடந்த பிப்ரவரி 18 அன்று செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழு கூட்டம் டில்லியில் கூட்டியது. ஆட்சிக்குழுவின் துணைத்தலைவரும், மத்திய இணை அமைச்சருமான புரந்தரேஸ்வரி தலைமையில் நடந்த கூட்டத்தில், '40,000 நூல்கள் வீணாக அடைந்து கிடக்கின்றன. மொழியின் விஷயத்தில் அரசியல் கலப்பது சரியல்ல’ என்று வருந்தினாராம். இதையடுத்து, மற்ற மத்திய அமைப்புகள் போலவே மனிதவளத் துறை அமைச்சரிடமே நிறுவன ஆட்சிக்குழுவின் தலைவர் பதவியைக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளில் காங்கிரஸ் தலைமை தீவிரமாக இறங்கி இருக்கிறதாம். ஜெயலலிதாவை சரிக்கட்டவும் முயற்சிகள் நடக்கிறதாம்.