Published:Updated:

கச்சத்தீவு: 30 ஆண்டு கால மீனவர்களின் கண்ணீருக்கு விடிவு கிடைக்குமா?

கச்சத்தீவு: 30 ஆண்டு கால மீனவர்களின் கண்ணீருக்கு விடிவு கிடைக்குமா?
கச்சத்தீவு: 30 ஆண்டு கால மீனவர்களின் கண்ணீருக்கு விடிவு கிடைக்குமா?

ராமநாதபுரம்: இந்தியாவிடம் இருந்த கச்சத்தீவை, இலங்கையிடம் ஒப்படைத்து இன்றோடு 39 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதே நேரத்தில் தமிழக மீனவர்களின் 30 வருட கண்ணீருக்கு காரணமாக இருக்கும் கச்சத்தீவு மீண்டும் மீட்கப்படுமா? என கேள்வி எழுப்புகின்றனர் நம் மீனவர்கள்.

கச்சத்தீவு: 30 ஆண்டு கால மீனவர்களின் கண்ணீருக்கு விடிவு கிடைக்குமா?

1480ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் கடல் கொந்தளிப்பின் விளைவாக வங்க கடலில் உருவான 12 தீவுகளில் ஒன்று கச்சத்தீவு. 285 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவு, கிழக்கு மேற்காக ஒரு மைல் நீளமும், தெற்கு வடக்காக அரை மைல் அகலமும் கொண்டது. இந்த தீவு ராமேஸ்வரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

சேதுபதி மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த தீவில், முத்தெடுக்கும் உரிமையினை பலருக்கும் குத்தகைக்கு விட்டிருந்தனர். அவ்வாறு முத்தெடுக்க சென்ற ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்த சீனிகருப்பன் படையாச்சி என்பவர் கச்சத்தீவில் அந்தோணியார் கோயில் ஒன்றை உருவாக்கினார். இந்த கோயிலில் 1905 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4 ஆம் தேதியன்று திருவிழா கொண்டாடுவது வழக்கம். இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த மீனவர்கள், இந்த விழாவில் பங்கேற்பதுடன், கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்தும், வலைகளை உலர்த்தியும் வந்தனர்.

கச்சத்தீவு: 30 ஆண்டு கால மீனவர்களின் கண்ணீருக்கு விடிவு கிடைக்குமா?

இந்நிலையில் 1947ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஜமீன்தாரி ஒழிப்பு சட்டத்தால் கச்சத்தீவு இந்திய அரசின் வசம் வந்தது. ஆனால் இலங்கையோ 1920 ஆம் ஆண்டிலிருந்தே கச்சத்தீவு தங்களுக்குதான் சொந்தம் எனக்கூறி வந்தது.

அப்போதைய இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகே டெல்லி வந்திருந்த போது, இது குறித்து பிரதமர் இந்திராகாந்தியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது தொடர்பாக உடன்பாடு காண்பது என அப்போது முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் 1974 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் நாள், கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு டெல்லியிலும், கொழும்பிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் இந்திரா கையெழுத்திடும் முன், கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது குறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டிருந்தார். 'கச்சத்தீவு தமிழ்நாட்டுக்கு சொந்தம், அதனை இலங்கைக்கு கொடுக்க கூடாது' என அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி, பிரதமர் இந்திராகாந்தியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

கச்சத்தீவை மத்திய அரசு இலங்கைக்கு தானம் செய்தது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தையும் கருணாநிதி கூட்டினார். அந்த கூட்டத்தில் ‘கச்சத்தீவு பிரச்னையில் மத்திய அரசு தனது நிலையை மறுபரிசிலனை செய்வதுடன், கச்சத்தீவின் மீது இந்திய அரசுக்கு உரிமை இருக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டும்’ என தீர்மானம் போடப்பட்டது. ஆனாலும் மத்திய அரசு தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

கச்சத்தீவு: 30 ஆண்டு கால மீனவர்களின் கண்ணீருக்கு விடிவு கிடைக்குமா?

இந்திய, இலங்கை அரசுகள் செய்து கொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், 'இந்திய மீனவர்களும், இறைவழிபாட்டு பயணிகளும் இதுவரை கச்சத்தீவை அனுபவித்ததை போல தொடர்ந்து வந்து போய் இருக்க உரிமை உடையவர்கள். இவ்வாறு வந்து போவதற்கு, இலங்கை அரசிடம் இருந்து எவ்வித பயண ஆவணங்களையோ, நுழைவு அனுமதியினையோ பெற வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இருநாட்டு படகுகள், கப்பல்கள் இதுவரை என்னென்ன உரிமைகளை இரு நாட்டு கடல் பகுதியிலும் அனுபவித்தனரோ,  அதே உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்க உரிமை உண்டு எனவும் கூறப்பட்டிருந்தது.

##~~##
இதன் பிறகு, 1976ஆம் ஆண்டில் இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையே கச்சத்தீவு ஒப்பந்தம் தொடர்பாக கடிதங்கள் பரிமாறப்பட்டன. பின்னர் அந்த கடிதங்களே ஒப்பந்தமாகவும் உருவாக்கப்பட்டன. இதன்படி தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையும் தாரை வார்க்கப்பட்டது. இதன் பின்னரே தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலை இலங்கை கடற்படையினர் தொடங்கினர்.

1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ல் துவங்கிய தாக்குதல் இன்று வரை 30 ஆண்டுகளாக நீடித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் கச்சத்தீவை திரும்ப பெற வலியுறுத்தி 1974ல் போடப்பட்ட தீர்மானங்கள் கடந்த 39 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

கச்சத்தீவினை தானம் கொடுத்தது குறித்து அப்போது கருத்து தெரிவித்த ராமநாதபுரம் மன்னர் ராமநாதசேதுபதி, ‘‘மத்திய அரசின் இந்த முடிவு துக்ககரமானது. கண்ணீர் விட்டு அழுவதை தவிர வேறு வழியில்லை’’ என்றார். அவர் கூறியது எத்தனை உண்மையான வார்த்தைகள் என்பது இன்று தெரிகிறது. இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களுக்கு ஆளாகும் நம் மீனவர்கள், அன்று முதல் இன்று வரை கண்ணீர் விட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.

தமிழக மீனவர்களின் 39 வருட கண்ணீரை துடைக்க, கச்சத்தீவை மீட்டெடுக்குமா நமது அரசுகள்?

- இரா.மோகன்


படங்கள்: உ.பாண்டி