Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஜெ.கஸ்டடியில் சசி!

மிஸ்டர் கழுகு: ஜெ.கஸ்டடியில் சசி!

மிஸ்டர் கழுகு: ஜெ.கஸ்டடியில் சசி!

ழுகார் நம்முடைய டேபிள் மீது வந்து குதித்தபோது, தங்க நாற்கரச் சாலையில் பயணித்து வந்த அடையாளமான டோல்கேட் பில் அவரது சிறகுகளுக்குள் இருந்து விழுந்தது.

 ''என்ன பெங்களூருவா?'' என்றோம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

''நான் செய்தி சேகரிக்கத்தான் போனேன், வீடு பார்க்க அல்ல!'' என்று சொல்லி வணக்கம் வைத்தவர், விளக்கத்தைத் தொடங்கினார்!

''கடந்த சில தினங்களாக பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கில் அரங்கேறி வரும் அடுத்தடுத்த 'திகீர் பகீர்’ காட்சிகள், ஜெயலலிதாவின் வளையத்துக்குள் சசிகலா வந்திருப்பதை உறுதி செய்கிறது என்று சொல்ல ஆரம்பித்துள்ளார்கள் உள்விவரங்களை அறிந்தவர்கள். சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த 18-ம் தேதி ஆஜராகி, முழுக்க முழுக்க‌ ஜெயலலிதாவுக்கு ஆதரவாக விளக்கம் அளித்தார் சசிகலா. பெங்களூருவில் இருந்து வீடு போய்ச் சேருவதற்குள் கணவர் நடராஜனை கைது செய்திருந்தது காவல் துறை. ஏற்கெனவே நொந்து போய் இருந்த சசிகலாவை மேலும் நிலைகுலைய வைத்தது இந்த நடவடிக்கை. வீட்டில் நுழைந்ததும் யாரிடமும் பேசாமல், தனியாகப் போய் கண் கலங்கினாராம்''

''ம்!''

''இந்த நிலையில் ரொம்பவே மனம் உடைந்து போய் இருந்தாராம் சசிகலா. இளவரசியின் கிழக்கு கடற்கரை சாலை வீட்டில் இருந்தார் சசி. தனக்கு வேண்டப்பட்டவர்களின் பரிந்துரையின் பேரில், முழு அமாவாசை தினமான கடந்த செவ்வாயன்று இரவு 9.30 மணிக்கு இளவரசியின் மருமகன் ராஜராஜ‌னோடு திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் ச‌மாதிக்குப் போய் ஒரு மணி நேரம் வேண்டினாராம்.

அமாவாசை, பௌர்ணமி அன்று பாம்பன் சுவாமிகளின் சமாதியில் வேண்டினால் அது நிறைவேறும் என்பது அவரது நம்பிக்கை. 23-ம் தேதி பெங்களூரு கோர்ட்டில் பதில் அளிக்க வேண்டி இருந்ததால், புதன் மாலை தைரியமான மனநிலையோடு பெங்களூரு  கிளம்பினார். இம்முறை கூடவே இளவரசியும், அவரது மருமகன் ராஜராஜனும் வந்தார்கள். வழக்கமாகத் தங்கும் அட்ரியா ஓட்டலில்தான் தங்கினார்கள்.

சரியாக காலை 10.50 மணிக்கு இளவரசியுடன் கருப்பு இன்னோவா காரில் கோர்ட் வளாகத்துக்குள்  என்ட்ரி கொடுத்தார் சசிகலா. வழக்கத்துக்கு மாறாக உற்சாகத்தோடும், புதுத்தெம்போடும் தென்பட்டார். கடந்த இரண்டு முறைகளாக பெங்களூரு பக்கம் வராமல் இருந்த மன்னார்குடி சொந்தங்களும், கணவர் நடராஜனின் சொந்த ஊரான 'விளார்’ கிராமத்து உறவினர்கள் சிலரும் அவரோடு வந்திருந்தனர். உணவுக்குப் போகும் போதும், வரும் போதும் அவர்கள் சசிகலா உடனே சென்றார்கள். உறவினர்களுடன் ஒட்டி உறவாடியதை எல்லாம் தமிழகத்தில் இருந்து வந்திருந்த ஒரு டி.எஸ்.பி. தலைமையிலான ஏழு பேர் கொண்ட உளவுத்துறை, அவ்வப்போது  மேலிடத்துக்குத் தகவல்களை அனுப்பிக்கொண்டே இருந்தது!''

''இருக்காதா பின்னே?''

''வழக்கமாக கோர்ட் படி ஏற சிரமப்படும் சசிக‌லா, இம்முறை உற்சாகமாகக் காணப்பட்டதால் கோர்ட்டில் இருந்த 46 படிகளையும் ஹாயாக ஏறியதைக் கண்டு அவரது வக்கீல்களே ஆச்சர்யப்பட்டனர். அதுமட்டுமில்லாமல், சின்னதாக ஸ்டைலிஷான லஞ்ச் பேக் போன்று ஒரு பையும் கொண்டு வந்திருந்தார். இதில் ஜெயலலிதா மாதிரியே(!) நிறைய டிஷ்யூ பேப்பர்களும் ராசியான வெள்ளை நிற பேனாவும் இருந்தன. கடந்த முறை கோர்ட்டில் ரொம்பவே களைப்பாக காணப்பட்டதாலோ என்னவோ இம்முறை, காம்ப்ளான் நேச்சுரல் கலக்கிக் கொண்டு வந்திருந்தார். நீதிபதி வரும் வரை குற்றவாளிக் கூண்டில் அமர்ந்து, இளவரசியுடன் சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தார். ஆனால், நீதிபதி வந்ததும் அவரது கோபத்தைக் கிளறுவது மாதிரியான சம்பவம் நடந்தது...''

''என்னவாம்?''

''சுதாகரன் வரவில்லை. 'அவருக்கு வேறு வேலைகள் இருப்பதால் வர முடியவில்லை’ என்று அவரது வக்கீல் மூர்த்திராவ் சொன்னார். உடனே கோபமடைந்த நீதிபதி, 'என்ன ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். கோர்ட்டில் நடப்பதை குற்றவாளி தெரிந்து கொள்ள வேண்டாமா?’ என்று சீறினார். 'மதியத்துக்குள் வரச்சொல்லுங்கள்’ என்று டென்ஷனாக, 'இல்லை. நாளை வரச் சொல்கிறேன்’ என்று கெஞ்சினார் மூர்த்திராவ். அதன்பிறகு, நீதிபதிக்கு முன்னால் போடப்பட்டிருந்த நாற்காலியில் சசிகலாவை அமர வைத்தனர். கடந்த முறை 40 கேள்விகளுக்குப் பதில் அளித்த சசிகலாவிடம் இம்முறை அதிகமான கேள்விகளுக்குப் பதில் வாங்கவேண்டும் என்ற முனைப்பில் அவசர அவசரமாக கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தார் நீதிபதி மல்லிகார்ஜூனையா.  

கடந்த முறை சசிகலா பேசியது சரியாகக் கேட்காததால், இம்முறை மீடியாக்கள் சசிகலாவுக்கு அருகிலே அமர்ந்து கொண்டனர். அதனால் முன்பைவிட இன்னும் அமைதியாகப் பேசினார். முதல் கேள்வியாக, 'நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் ஆரம்பிக்க வாங்கப்பட்ட அச்சு இயந்திரங்கள் ஜப் பானில் வாங்கப்பட்டதா?’ என்று கேட்கப்பட்டது. 'அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது’ என்றார்.  இந்த ஒரு கேள்விக்கு மட்டும்தான் ஒரே வார்த்தையில் சசிகலா பதில் சொன்னார். மற்ற அத்தனை கேள்விகளுக்கும் பக்கம் பக்கமாக நீண்ட பதில் கொடுத்தார். ஒரு கேள்விக்கு அரை மணி நேரத்துக்கும் மேலாக சசிகலா சொன்ன விளக்கத் தைக் கேட்டு அரசு வக்கீல் ஆச்சார்யாவே கொந்த ளித்து விட்டார்...''

''பதிலை முழுமையாகச் சொல்ல வேண்டாமா?''

''ஆச்சார்யா கொதித்துப்போய், 'வழவழவென நீண்ட பதில்கள் சொல்லி, நேரத்தை வீணடிக்காமல் சுருக்கமாகப் பதில் அளிக்க வேண்டும். பார்த்துப் படிக்கக் கூடாது. பேங்க் அக்கவுன்ட் தொடர்பான எண்களை மட்டும் பார்த்துக் கொள்ளட்டும்’ என்று சொன்னார். அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருந்தார் சசிகலா. அதன்பிறகு, கேட்கப்பட்ட கேள்விக்கும் நீண்ட விளக்கத்தைத்தான் சசிகலா கொடுத்தார். எனவே, தனது உதவியாளர் சந்தேஷ் சவுட்டாவின் காதில் ஏதோ ஓதிவிட்டு, விருட்டென கோபத்துடன் கோர்ட்டை விட்டு வெளியேறினார் ஆச்சார்யா. அப்புற‌ம், வியாழக்கிழமை முழுக்க அவர் கோர்ட் பக்கமே வரவில்லை!''

''ஆச்சார்யாவை வெளியேற்றும் தந்திரமா இது?'' என்று நாம் கேட்டதற்கு கழுகார் மெள்ளச் சிரித்தார்.

''உள்ளே வந்ததும் ஜெயலலிதா வளையத்துக்குள் சசிகலா வந்துவிட்டார் என்பது மாதிரி ஏதோ சொன்னீரே!'' என்று எடுத்துக் கொடுத்தோம்!

''சசிகலா பதில் சொல்லும் போதெல்லாம் ஜெய லலிதாவின் வக்கீல் குமார் அருகிலேயே இருக்கிறார். சில வார்த்தைகளை அவரே சொல்லி கரெக்ஷன் போடுகிறார். சசிகலாவுக்குப் பாதுகாப்பாக வரும் பிரைவேட் செக்யூரிட்டி ஆட்கள்கூட, கார்டனால் ஏற்பாடு செய்யப்பட்டவர்கள்தானாம். தமிழக உளவுத்துறை போலீஸில் ஒரு டஜன் ஆட்கள் பெங்களூரு வட்டாரத்தில் வலம் வர ஆரம்பித்து ள்ளார்கள். சசிகலா மீதான கேள்விகள் முழுமையாக முடிப்பதற்கு இன்னும் மூன்று மாதங்கள் வரை ஆகலாம் என்கிறார்கள்''

''நிஜமாகவா?''

''கடந்த 18-ம் தேதி 40 கேள்விகளுக்குப் பதில் சொன்னார். 23-ம் தேதி 23 கேள்விகளுக்குப் பதில் சொன்னார். மொத்தம் அவருக்கு 1,434 கேள்விகள் இருக்கின்றன. சசிகலா ஒவ்வொரு கேள்விக்கும் இழுத்து இழுத்துப் பதில் சொல்வதால், நிச்சயம் சில மாதங்கள் இழுக்கும். அதனால், பெங்களூருவில் தனியாக வீடு எடுத்துத் தங்கிவிட சசிகலா திட்டமிட்டு உள்ளாராம். மல்லேஸ்வரம், ராஜாஜிநகர், ஜெயநகர் ஆகிய மூன்று இடங் களில் வீடு பார்க்கும் படலம் தொடங்கிவிட்டது. இங்கு யார் யார் இருப்பது, ஊழியர்கள் யார் என்பது வரைக்கும் கார்டன்தான் முடிவு எடுக்குமாம். இதை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது சசிகலா கஸ்டடியில் இருக்கிறார் என்றுதானே நம்ப வேண்டி உள்ளது?'' என்ற கேள்வியை விதைத்துவிட்டுப் பறந்தார் கழுகார்!

படங்கள்: சு.குமரேசன், என்.விவேக்

 இப்படியும் ஓர் இழப்பு!

'தானே’ புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்துக்கு 50,000 மின் கம்பங்களுக்கு மேல் தேவைப்படுகிறதாம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மின் கம்பங்கள் உற்பத்தி செய்யப்படாமல் போனதால், 1,000 ரூபாய்க்கு மேல் கூடுதல் விலை கொடுத்து அண்டை மாநிலங்களில் இருந்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம். அதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் தலைமைப் பொறியாளர் ஒருவர்தான் இத்தனை அலட்சியத்துக்கும் காரணம் என்று கை காட்டுகிறார்கள், மின்சார வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்கள். 

மீண்டும் அவரே(!)வா?

போக்குவரத்துக் கழகங்களில் கடந்த ஆட்சியில் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஓட்டுனர், நடத்துனர்களை நியமித்ததாக, சட்டமன்றத்தில் இப்போதைய அமைச்சர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இந்த விவகாரத்தில் சிக்கவேண்டிய ஒருவர், இப்போதும் தலைநகரில் செல்வாக்குடன் வலம் வருகிறார் என்று கார்டனுக்கும் கோட்டைக்கும் புகார்கள் குவிகின்றன. மதுரை கோட்டத்தில் இருந்து வந்த, இதிகாச நாயகன் பெயரைக் கொண்ட அவர், கடந்த ஆட்சியில் நடந்த 45,000 நியமனங்களில் கால்வாசி நியமனங்களைச் செய்தவராம். சாத்தூர்க்காரரின் பரிந்துரையின்படி சென்னையில் கடந்த ஆட்சியில் மூன்று ஆண்டுகள் வேலை பார்க்காமலே ஊதியம் (ஆன் டியூட்டி) பெற்றுள்ளார். மதுரையில் அழகிரி வீட்டுக்குப் பக்கத்தில் 80 லட்ச ரூபாயில் வீடு கட்டியுள்ளார். சென்னையில் கோடம்பாக்கம், தி.நகரிலும் கோடிகளைக் கொட்டி இரண்டு அடுக்குமாடி வீடுகளை வாங்கி இருக்கிறாராம். மார்ச் இரண்டாவது வாரத்தில் மீண்டும் ஓட்டுநர், நடத்துனர் பணிகளுக்கு ஆட்களை எடுக்க இருக்கிறார்கள். இதற்கான, வசூல் வேட்டையை இந்த ஆசாமியே ஜரூராகத் தொடங்கி விட்டார் என்பதுதான் புதுத்தகவல்.

 மரம் தருமா வரம்?

மிஸ்டர் கழுகு: ஜெ.கஸ்டடியில் சசி!

தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் 64 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. கடந்த 23-ம் தேதி தலைமைச் செயலகத்துக்கு எதிரில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் ஆலமரக் கன்றை நட்டு, இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தபோது ஜெ-வின் முகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு சந்தோஷ ரேகை. சசிகலா பிரிவைத் தொடர்ந்து மன அமைதிக்காக ஒரு பிரபல ஜோசியர் சொன்ன ஐடியாதான், இந்த மரம் நடும் திட்டம் என்று கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

மிஸ்டர் கழுகு: ஜெ.கஸ்டடியில் சசி!