
லட்சுமி தாராசெங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பொன்முடி, நேரு, வீரபாண்டி ஆறுமுகம் கைது - ராவணன், திவாகரன், நடராஜன் கைது என்ன தெரிகிறது?
##~## |
ஜெயலலிதாவுக்குத் தூரத்தில் இருந்தால் மட்டும் அல்ல, பக்கத்தில் இருந்தாலும் சிக்கல் எனத் தெரிகிறது.
எதிரிகள் அனைவரும் சடசடவென பெயில் வாங்கி வந்தார்கள். ஆனால் மாஜி நண்பர்கள்தான், விழி பிதுங்கி நிற்கிறார்கள்!
உமரி ப.கணேசன், மும்பை-37.

முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் இப்போது ரெய்டு நடத்துகிறார்களே... இன்னுமா மறைக்காமல் வைத்து இருப்பார்கள்?
லஞ்ச ஒழிப்பு வழக்குகளில் ரெய்டு என்பது வெறும் ஃபார்மாலிட்டி தான். ஏற்கெனவே 'அனைத் தையும்’ கண்டுபிடித்து சொத்துக் கணக்குகள் சேகரிக்கப்பட்ட பிறகுதான், ரெய்டுகள் நடத்தப் படுகின்றன.
'எங்கள் வீட்டில் எதுவும் எடுக்கவில்லை’ என்று சொல்வதாலேயே, 'எதுவும் இல்லை’ என்று அர்த்தம் ஆகாது. வழக்குப் பதிவாகும்போதுதான் உண்மை கள் வெளிச்சத்துக்கு வரும்.
ஸ்ரீ.உஷா பூவராகவன் படியூர் (திருப்பூர்).

நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் என்கிறார்களே?
சட்டப்படி பார்த்தால், மூன்று கூட்டத் தொடர்களுக்கு ஆ.ராசா வரவில்லை. சபாநாயகர் மீரா குமார் கவனிக்க வேண்டிய விஷயம் இது!
போடி.எஸ்.சையது முகமது, சென்னை-93.

2ஜி வழக்கை விசாரித்துவரும் அனைத்துத்துறை உயர் அதிகாரிகளையும், தலைமை ஊழல் கண்காணிப்புத்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது. இதன் மூலம் இந்த வழக்கின் விசாரணை தீவிரம் அடைகிறது என நம்பலாமா?
தீவிரம் அடைகிறது என்பதைவிட 'நீர்த்துப் போகவில்லை’ என்று நம்பலாம்!
சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியா புரம்.

மூன்றாவது அணி அமைக்கப்போவதாக இந்தியக் கம்யூ னிஸ்ட் ஏ.பி.பரதன் அறிவித்துள்ளது சாத்தியம் ஆகுமா?
நாடாளுமன்றத் தேர்தல் வரும் போதெல்லாம் பரணில் இருந்து இந்தக் கோஷத்தை கம்யூனிஸ்ட்டுகள் எடுப்பார்கள். அகில இந்திய அளவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் மூன்றாவது அணி உருவாக இந்த தடவை வாய்ப்பு குறைவு. தமிழகத்திலும் காங்கிரஸுடன் தி.மு.க. இருக்கப்போகிறது. பாரதிய ஜனதாவுடன் அ.தி.மு.க. போகப்போகிறது. இவை இல்லாத மூன்றாவது அணி, முன்னேற முடியாது.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.


'நாம் யாருடனும் கூட்டணி வைக்க ஏங்கியது இல்லை. அ.தி.மு.க. பிரமுகர்கள்தான் வலிய வலிய வந்து எங்களிடம் பேசினார்கள்’ என்று, பிரேமலதா விஜயகாந்த் சொல்வது உண்மையா?
ஓரளவு உண்மைதான்!
'தே.மு.தி.க.வைச் சேர்க்கவில்லை என்றால், அ.தி.மு.க. ஜெயிப்பது கஷ்டம்’ என்றுதான் ஜெய லலிதா நினைத்தார். அவரது ஆலோசகர்களும் அதைத்தான் சொன்னார்கள். எனவேதான், 41 தொகுதிகள் தர வேண்டிய அளவுக்கு ஜெயலலிதா இறங்கி வந்தார். இது உண்மை. ஆனால், அ.தி.மு.க. கூட்டணியை விட்டுவிடக்கூடாது என்று விஜயகாந்த் துடித்தார்.
ஜெயலலிதா - விஜயகாந்த் சந்திப்பு நடந்ததுமே இந்தக் கூட்டணியின் வெற்றி உறுதியாகிவிட்டது. விஜயகாந்த் கேட்ட தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்களை அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிக்கிறது. அதை வெளிப்படையாகத் தட்டிக் கேட்க விஜயகாந்த் முன்வரவில்லை. இன்று வீரம் பேசுபவர்கள் அன்று அடங்கி இருந்தார்களே!
வசந்தன், சென்னை-4.

திராவிட இயக்க நூற்றாண்டு விழாவைக் கருணாநிதி கொண்டாடுகிறாரே?
வரலாற்று அடிப்படையில் பார்த்தால், 1916-ல் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் உதய மானதில் இருந்துதான் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால், 2016-ல் தான் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட வேண்டும். ஆனால், 1912-ல் டாக்டர் நடேசன் தொடங்கிய 'மெட்ராஸ் யுனைடெட் லீக்’கை முன்னோடி இயக்கமாகச் சொல்லி, கருணாநிதி விழா கொண்டாடுகிறார். இதன்படி பார்த்தால், நடேசனாருக்கும் முன் பல இயக்கங்கள் உண்டு. குற்றாலத்திலும் கோவில்பட்டியிலும் 'திருவிடர் கழகம்’ தொடங்கிய விருதை சிவஞான யோகியின் வரலாறு 1908-ல் தொடங்குகிறது. எனவே, இந்த ஆண்டில் திராவிட இயக்க நூற்றாண்டு விழா கொண்டாடுவது என்பதே ஆய்வுக்கு உரியது.
வி.பரமசிவம், சென்னை-25.

ஈ.வி.கே.எஸ். இளங் கோவன் - திக் விஜய்சிங் ஒப்பிடுங்களேன்?

தங்கபாலு காலியான தால் இளங்கோவனின் வேகம் குறைந்துவிட்டது. மன்மோகன் இருக்கும் வரை திக் விஜய்சிங் பேசு வார். இவர்கள் இருவருக்குமே 'உள்நோக்கம்’ உண்டு.
போடி.எஸ்.சையது முகமது, சென்னை-93.

'நான் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டேன்’ என்று, தான் அரசியலுக்கு வந்தது குறித்து ப.சிதம்பரம் வருத்தப்பட்டுள்ளாரே?
சிவகங்கை மக்கள் இப்படி நினைத்தால்?
இரா.யூசுப்அன்சாரி, சென்னை-87.

சென்னையில் சாலைகளே சரி இல்லை. ஆனால் ஹெல்மெட் சட்டத்தை கடுமையாக்கி இருக்கிறார்களே... அது சரியா?
சட்டம் ஒழுங்கு கூடத்தான் சரி இல்லை. அதற்காக போலீஸ் ஸ்டேஷனை பூட்டிவிட முடியுமா என்ன?
வி.பரமசிவம், சென்னை.

சசிகலாவின் வாக்குமூலத்தை நாடகம் என்கிறாரே கருணாநிதி?
அரசியலில் எல்லாமே நாடகம் தான். அனைத்து வாக்குமூலங்களும் முன்பே எழுதப் பட்டவைதான்.
'எழுதப்படாத சில டயலாக்குகளை ஸ்டாலினும் அழகிரியும் பேசி விடுகிறார்களே’ என்ற வருத்தம் வேண்டு மானால் 'கதாசிரியர்’ கருணாநிதிக்கு இருக்கலாம்.
சி.கார்த்திகேயன், சாத்தூர்.

தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்கள் பற்றி வைகோ என்ன நினைப்பார்?
'நல்ல வேளை, 18 வருடங்களுக்கு முன்னால் தப்பித்து விட்டோம்’ என்று அவர் சந்தோஷப் படலாம்!
