ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: உள்காய்ச்சல்!

மிஸ்டர் கழுகு: உள்காய்ச்சல்!

##~##

''கோமதி சீனிவாசன் படத்தை எடுத்து வைத்துக்கொள்ளும்!'' - ஆபீஸ் வாசலில் இருந்து எஸ்.எம்.எஸ். தட்டியிருப்பார் போல, மெசேஜ் படித்து நிமிர்ந்தபோது, நம்முன் கழுகார் புன்னகையுடன் இருந்தார். 

''கோமதி சீனிவாசனை இந்நாள் அரசியல்வாதிகள் யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால், அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகி​ விட்டது.

மிஸ்டர் கழுகு: உள்காய்ச்சல்!

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில், கோமதி சீனிவாசனுக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை திருச்சி நீதிமன்றம் விதித்​துள்ளது. எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் வலம் வந்த பெண் அமைச்சர்களில் ஒருவர், இந்தக் கோமதி சீனிவாசன். மொத்தம் நான்கு ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். 96 முதல் 2001 வரை எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக புகார் பதிவானது. அதில்தான், அவருக்கு மூன்று ஆண்டு மற்றும் நான்கு மாதங்கள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுஉள்ளது. பொதுவாக சொத்துக்குவிப்பு வழக்குகள் எப்படிப் போகும் என்பதற்கு உதாரணமாக இந்தத் தீர்ப்பைச் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்!''

''பெங்களூரு வழக்குடன் ஒப்பிடுகிறீர்களா?''

''ஆம். 'பெங்களூரு வழக்கை எப்படியாவது தாமதப்​படுத்த வேண்டும்’ என்று சசிகலா தரப்பு நினைக்கிறது. ஆனால், அதை விரைந்து நடத்தி முடித்துவிட வேண்டும் என்று நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவும் நினைக்கிறார்கள். நீதிபதியின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் முடியப் போகிறது என்று சொல்லி இருந்தேன். எனவே, அதுவரைக்கும் இழுக்கலாம் என்று சசிகலா தரப்பு திட்டமிடுகிறது. தமிழகத்தில் நடந்து வந்த இந்த வழக்கை, பெங்களூருக்கு மாற்றியதில் முக்கியப் பங்கு, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு உண்டு. 'தேவை இல்லாமல் வழக்கை இழுத்தடிக்கிறார்கள். எனவே விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்’ என்று அன்பழகன் மனுத்தாக்கல் செய்யத் திட்டமிட்டு உள்ளாராம்.''

''மல்லிகார்ஜூனய்யா, ஆகஸ்ட்டில் சென்றுவிடுவாரா?''

''உச்ச நீதிமன்றம் நினைத்தால் அவருக்கு பணிநீட்டிப்பு வழங்க​லாம். மாநில அரசு நினைத்தாலும் அதைச் செய்யலாம்.''

''கர்நாடக மாநில பி.ஜே.பி. அரசு அதைச் செய்யாது அல்லவா?''

''எனவேதான், விரைந்து முடிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. கோமதி சீனிவாசனைச் சிக்க வைத்த வழக்கின் மதிப்பு மொத்தமே 33 லட்சம் ரூபாய்தான். ஆனால், பெங்களூரு வழக்கு சுமார் 66 கோடி ரூபாய் மதிப்பிலானது. உள்காய்ச்சல் ஆரம்பம் ஆவதற்கு இதுதான் காரணம்!'' என்ற கழுகார், அடுத்து நடராஜன் மேட்டரைத் தொட்டார்.

மிஸ்டர் கழுகு: உள்காய்ச்சல்!

''அ.தி.மு.க-வின் அதிகார மையம், அரசியல் சாணக்கியர், மர்ம மனிதர்... என்றெல்லாம் வர்ணிக்கப்படும் நடராஜனை தமிழக போலீஸார் வறுத்தெடுத்து வருகிறார்கள். நிலஅபகரிப்பு வழக்கில் கைதான நடராஜனை கஸ்டடி கேட்டு போலீஸார் மனு போடவும், மிரண்டுபோனார் மனிதர். திருச்சி சிறையில் இருந்து தஞ்சாவூர் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரது பாதுகாப்புக்கு எஸ்.பி. வந்ததும் பெரிய விஷயமாகச் சொல்லப்படுகிறது.''

''ஏனாம்?''

''முன்பு, 'தி.மு.க-வில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்த​போது, அவர் மீது தஞ்சாவூரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போதுதான், எஸ்.பி. நேரடியாக நீதிமன்ற வளாகத்துக்கு வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்தார். அதன்பிறகு, நடராஜனுக்குத்தான் இப்போதைய எஸ்.பி. அனில்குமார் கிரி

மிஸ்டர் கழுகு: உள்காய்ச்சல்!

நேரடியாக வந்து பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்துச் சென்றார்’ என்கி றார்கள் பழைய ஆட்கள். தஞ்சாவூர் நிலஅபகரிப்புத் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் நாராயணசாமிதான் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி. குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டார். இதற்கு நடராஜன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போது, நீதிபதியைப் பார்த்து நடராஜன் பேசியதுதான் பரிதாபமாக இருந்ததாகச் சொல்கிறார்கள். 'அரசியல் தூண்டுதலின் பேரில் என் மீது வழக்கு போடப்பட்டு உள்ளது. என்னை வேவு பார்க்க உளவுத்துறை போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு உள்ளேயே வந்து விட்டனர். இவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. இப்போதெல்லாம் என்கவுன்டர் சர்வ சாதாரணமாக நடக்கிறது. போலீஸார் என்னையும் என்கவுன்டர் மூலம் கொல்ல முடிவு செய்துள்ளனர். அதனால், என்னை போலீஸ் காவலுக்கு அனுப்பினால், என் உயிருக்கு ஆபத்து ஏற்படும்’ என்று சொல்லி நீதிமன்றத்தைப் பரபரப்பாக்கினார். ஆனாலும், ஒருநாள் போலீஸ் காவலுக்கு அனுமதி கொடுத்தார் நீதிபதி.

தஞ்சாவூர் கிழக்குக் காவல் நிலையத்துக்கு மாலை 6 மணிக்கு நடராஜன் அழைத்துச் செல்லப்பட்டார். அன்று இரவு முழுவதும் நடராஜனிடம் போலீஸார் எதுவும் விசாரணை நடத்தவில்லையாம். 'இது பொய்வழக்கு என்பது அனைவருக்குமே தெரியும். என்னை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தானே போலீஸ் கஸ்டடி... பரவாயில்லை’ என்று நடராஜன் நொந்துகொண்டாராம். இரவு ஃபேன் காற்றில், மர பெஞ்சில் படுத்துத் தூங்கினார். மறுநாள் காலை நடராஜனின் வழக்கறிஞர்கள் வந்து சென்ற பிறகே, போலீஸார் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்டார்​கள்.''

''என்ன சொன்னாராம் நடராஜன்?''

''நடராஜனின் உள்நாட்டு, வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்துத்தான் கேள்விகள் இருந்தனவாம். 'சந்தர்ப்ப சூழ்நிலையால் இப்போது பிரிந்து இருக்கிறோம். மீண்டும் சேர்ந்து விடுவோம். அப்போது உங்கள் நிலைமை என்னாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்’ என்று நடராஜன் கோபப்பட்டாராம். மதியம் 2.30 மணிக்கு மீண்டும் கோர்ட்டுக்கு நடராஜனை அழைத்து வந்தனர். கோர்ட் வளாகத்தில் இருந்தவர்களிடம் சகஜமாகப் பேசிக்கொண்டு இருந்தாராம் நடராஜன். 'ஜெயலலிதாவை பொது வாழ்க்கைக்குக் கொண்டுவரக் கூடாது என்பதற்காக, முன்னாள் முதல்வர் கருணாநிதி என்மீது வழக்குப் போட்டார். இப்போது ஜெயலலிதா, 'என்னை ஏன் பொது வாழ்க்கைக்கு கொண்டுவந்து முதல்வர் ஆக்கினாய்?’ என்று வழக்குப் போட்டுள்ளார். இதை நான் சந்தோஷமாகத்தான் கூறுகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு இருந்தார். எனவே, நடராஜனின் கஸ்டடியில் பெரிதாக ஒன்றும் கிடைக்கவில்லை என்கிறார்கள்!''

''அடுத்த கைது?''

''நடராஜன், திவாகரன், ராவணன் ஆகிய மூவர் கைதுகளிலேயே மொத்தக் குடும்பமும் அடங்கிவிட்டது என்றே அதிகார மட்டத்தில் வலம் வருபவர்கள் சொல்கிறார்கள்!'' என்று சொன்ன கழுகார் அடுத்து சினிமாக்காரர்கள் மேட்டர் ஒன்றை அவிழ்த்தார்!

மிஸ்டர் கழுகு: உள்காய்ச்சல்!

''தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகிய இருவருக்கும் புதுச்சிக்கல் ஒன்று முளைத்துள்ளது. நடிகர் சங்கத்துக்குச் சொந்தமான பழங்காலக் கட்டடத்தை இடித்துவிட்டு பிரமாண்டமான மெகா மால் கட்டுவதற்கான உரிமையை பெரிய நிறுவனத்திடம் தாரை வார்த்தார்கள். அந்த நிறுவனமும் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, ஏழு மாடிக்கு மெகா மால் கட்டுவதற்கான வேலையை ஆரம்பித்தது. இதற்குப் பிறகுதான் சிக்கலே வந்தது. 'குடியிருப்புப் பகுதியில் எப்படி இம்மாதிரியான மால்கள் கட்டலாம்?’ என்று உயர் நீதிமன்றத்துக்குப் போனார்கள் அப்பகுதி மக்கள். நீதிமன்றம் இப்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுதொடர்பான எந்தத் தகவலையும் முறையாக நடிகர் சங்க உறுப்பினர்களுக்குச் சொல்லாமல் சரத்குமாரும் ராதாரவியும் மறைக்கிறார்கள் என்ற கோபமாம் பலருக்கும்!''

''ம்!''

''இவர்கள் இருவரும் எதற்காகவோ எதையோ மறைக்கிறார்கள் என்பது பெரும்பாலான நடிகர்களின் வருத்தம். ஆளும் கட்சியில் இருக்கிறார் ராதாரவி. ஆளும் கூட்டணியில் இருக்கிறார் சரத்குமார் என்பதால், பலரும் மௌனமாக இருக்கிறார்களாம். இதை உணர்ந்து, கிளர்ந்து எழுந்துவிட்டாராம் நகைச்சுவை நடிகர் குமரிமுத்து. கடந்த புதன்கிழமை இரவு ஆந்திரா கிளப்பில் நடிகர் சங்கத்தின் செயற்குழுவுக்கு அழைப்பு விடப்பட்டு இருந்தது. குமரிமுத்து, பூச்சிமுருகன் ஆகிய சிலர் கேள்வி கேட்க ஆயத்தம் ஆகிறார்கள் என்றதும், சரத்குமாரும் ராதாரவியும் 'வெளியூர் ஷூட்டிங்’ என்று, கூட்டத்துக்கு வரவில்லையாம். ஆனாலும் குமரிமுத்து, 'என்ன நடக்கிறது நடிகர் சங்கத்தில்? கட்டடம் கட்டப்போகிறீர்களா? இல்லையா? எதுவும் சொல்லாமல் எதற்கு மறைக்கிறீர்கள்?’ என்று கேட்டிருக்கிறார். 'நடிகர் சங்கத்துக்கு வராத வங்களுக்கு எந்தத் தகவலும் தெரியாது. அவர்களை உதாசீனப்படுத்துங்கள்’ என்று நடிகர் ஜெயமணி சொல்ல, 'அனைத்து நடிகர்களுக்கும் உண்மையைச் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது’ என்று பூச்சிமுருகன் சொல்ல... 'சரத்குமாரும் ராதாரவியும் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று வாகை சந்திரசேகர் சமாதானப்படுத்தினாராம். இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்

துள்ளார்களாம்!''

''சரத்குமார் இதற்கு விளக்கம் சொன்னால்தான் தெளிவு பிறக்கும்!''

''இந்தக் கூட்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்துள்ளது. 'கென்டகி கர்னல்’ என்ற பட்டம் பெற்ற மு.க.ஸ்டாலினை வாழ்த்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வாகை சந்திரசேகர் சொல்ல... உறுப்பினர்கள் பலரும் அதை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். இது சரத்குமாருக்கும் ராதாரவிக்கும் தெரிந்து இது நடந்ததா எனத் தெரியவில்லை!''

''ஸ்டாலின், மணிவிழா கொண்டாடிவிட்டாரா?''

மிஸ்டர் கழுகு: உள்காய்ச்சல்!

''பிறந்த நாளைக் கொண்டாட வேண்டாம் என்று ஸ்டாலின் வெளிப்படையாக அறிவித்து இருந்தார். ஆனாலும், வெளிப்படையாக அவரது பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டார்கள் அவரது ஆதரவாளர்கள். ஜெயலலிதாவும் தனது பிறந்த நாளை ஆர்ப்பாட்டமாக நடத்த வேண்டாம் என்று அறிவித்தார். ஆனால், ஆர்ப்பாட்டமாகத்தான் நடந்தது. அதுவும் அ.தி.மு.க. தலைமைக் கழகத்திலேயே கேக் வெட்டிக் கொண்டாடினார்கள். செய்யாதே என்றால் செய் என்பதுதான் அர்த்தமா? அல்லது நான் அப்படித்தான் சொல்வேன்... நீ செய்ய வேண்டும் என்று அர்த்தமா என்பது தெரியவில்லையே...!'' என்றபடி கிளம்பினார் கழுகார்!

படங்கள்: என்.விவேக், கே.குணசீலன், எம்.விஜயகுமார்  

வீரபாண்டி ஆறுமுகம் சிக்கல் பார்ட் டூ!

மிஸ்டர் கழுகு: உள்காய்ச்சல்!

வீரபாண்டி ஆறுமுகத்துக்கு அடுத்த சிக்கல் ஆரம்பம். வெள்ளி வியாபாரி ஒருவருக்குச் சொந்தமான 30 கோடி மதிப்பிலான சொத்தை அபகரித்துள்ளதாக ராஜேஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி ஆறுமுகம் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது.

சேலம் செவ்வாய்பேட்டையில் வெள்ளிப் பட்டறை ஒன்றின் உரிமையாளர் ராஜேஸ். இவரை, பாரப்பட்டி சுரேஷ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாணிக்கம், கந்துவட்டி சங்கர் மற்றும் சுப்ரமணி ஆகியோர் துப்பாக்கி  முனையில் மிரட்டிக் கடத்தியதாகப் புகார்.

வீரபாண்டி ஆறுமுகத்திடம் ராஜேஸை அழைத்துச் செல்ல... அவரும் மிரட்டினாராம். அப்போது ஸ்டாலினிடமும் ஆற்காடு வீராசாமியிடமும் போய் சொல்லியும், எந்தப் பரிகாரமும் நடக்கவில்லையாம். அதனால் இப்போது நீதிமன்றத்தை நாடி உள்ளார் ராஜேஸ். நீதிமன்ற உத்தரவை வைத்து வீரபாண்டி ஆறுமுகத்தை போலீஸ் எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்கிறார்கள். இளைஞர் அணி நிர்வாகிகள் தேர்வுக்காக ஸ்டாலின் வரும் 6-ம் தேதி சேலம் வருகிறார். அப்போது, வீரபாண்டி ஆறுமுகம் ஆஜராவாரா, இல்லையா என்பதுதான் சேலம் தி.மு.க-வில் இப்போதைய பட்டிமன்றம்.

மிஸ்டர் கழுகு: உள்காய்ச்சல்!