ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''திராவிட உத்கல வங்கா.. இதை எழுதியது நானா?''

திராவிட விழாவில் கருணாநிதி தீட்டிய கத்தி!

##~##

மீண்டும் திராவிடக் கத்தியைத் தூக்கிவிட்டார் கருணாநிதி. 

திராவிட இயக்க 100-ம் ஆண்டுத் தொடக்க விழா கடந்த 27 அன்று அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கருணாநிதி, அன்பழகன், கி.வீரமணி, மா.நன்னன், ஓய்வு பெற்ற நீதிபதி மோகன், ஸ்டாலின், சுப.வீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்ற விழாவில், மீண்டும் 'ஆரிய’ அனல்.

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன், ''படி என்கிறது திராவிடம். இடி என்கிறது ஆரியம். தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசுபவர்கள் திராவிடக் கொள்கையை ஏற்பது இல்லை. ஏனெனில், தமிழில் இருந்துதான் அந்த மொழிகள் தோன்றின என்ற கருத்தால், அதைக் குறையாகக் கருதுகிறார்கள். கால்டுவெல் ஒப்பிலக்கணம், 'மூத்த மொழி தமிழ்’ என்று சொல்கிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்...’ என்பது திராவிடம். அதை மறுப்பது ஆரியம்'' என்று ஆரம்பித்து வைத்தார்.

''திராவிட உத்கல வங்கா.. இதை எழுதியது நானா?''

அடுத்துப் பேசிய பேராசிரியர் நன்னன், ''திராவிட இயக்கத்துக்கு என்று ஒரு தனித்தன்மை உள்ளது. அதைப் பாதுகாக்க, 'அரிமா நோக்கு ஆயம்’ எனும் குழுவை அமைக்க வேண்டும். அந்தக் குழுவில் திராவிட இயக்கம் சாராதோரும் இடம்பெற வேண்டும். 100 ஆண்டு காலத் திராவிட இயக்கத்தில் செய்தவை, செய்யத் தவறியவை பற்றி ஆலோசிக்க வேண்டும். செய்யாததைச் செய்ய முன்வர வேண்டும். அதுதான் திராவிட இயக்கத்தின் அடுத்த 100 ஆண்டுகளுக்கான கால்கோளாக அமையும்'' என்றார்.

''பெண்களுக்கு ஓட்டுரிமை, தேவதாசி முறை ஒழிப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை என எல்லாவற்றையும் செய்தது திராவிட இயக்கம்தான். 200 ஆண்டுகளில் செய்ய வேண்டிய புரட்சியை 20 ஆண்டுகளில் செய்தவர் பெரியார். ஆறாவது முறையாகவும் கலைஞர் முதல்வராக வருவார். இல்லையென்றால் நாடு நாதியற்றுப்போகும்'' என்று ஓய்வுபெற்ற நீதிபதி மோகன் பேசியது ஆச்சர்யம்.

''திராவிட உத்கல வங்கா.. இதை எழுதியது நானா?''

''உச்ச நீதிமன்றம் ஆரம்பத்தில் உச்சிக்குடுமி மன்றம் ஆக இருந்தது. 1901-ல் சென்னை சுகுண விலாச சபாவில் பஞ்சமர்களுக்கு இடம் இல்லை. அண்ணா மேம்பாலத்தின் மீது ஏறி எளிதாகச் செல்​பவர்கள் மேம்பாலம் கட்டுவதற்கு முன்பு நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அதுபோல்தான் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளைப் பின்னோக்கி யோசித்துப் பார்த்​தால், அதன் அருமை தெரியும்'' என்று தீவிரமாகப் பேசினார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி.

ஊன்றுகோலோடு வந்தாலும் உற்சாகமாகத்தான் பேசினார் க.அன்பழகன். ''அமெரிக்க விருது பெற்ற ஸ்டாலினை வாழ்த்த எனக்கு உரிமை இருக்கிறது. ஏனெனில், ஸ்டாலினுக்கு 60. எனக்கு 90. நான் படிக்கும் காலத்தில், பிராமணர்களே எனக்கு ஆசிரியர்​களாக இருந்தனர். நான் முட்டாளாக இருந்​தால், அதற்குக் காரணம் அவர்கள்தான். ஆனால், கொஞ்சம் புத்திசாலியாக நான் இருப்பதற்கு, அவர்கள் காரணம் அல்ல. நான் எதிலும் தீவிரமாகச் செயல் பட மாட்டேன். அதேசமயம், என் உறுதியை யாராலும் கரைக்க முடியாது. திராவிடர் கழகமும் தி.மு.க-வும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்​படவேண்டும்'' என்றார்.

கருணாநிதியின் பேச்சில் வழக்கம்போல் நகைச்​சுவைக்கும் புள்ளிவிவரங்களுக்கும் பஞ்சமேஇல்லை. ''தமிழன் என்று கூறாமல் திராவிடன் என்று கூறுவது ஏன் என்று கேட்கிறார்கள். நான் கூட்டங்களில் பேசும்போதும், ஏடுகளில் எழுதும்போதும், மொழி​யால் நாம் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டால் இந்தியர்கள், உலகத்தால் மனிதர்கள் என்று குறிப்பிடுவேன். தமிழ் மொழியை நாங்கள் மறந்து​விடவில்லை. அதை நம் இனம் மறக்காமல் இருக்கவே இவ்விழா. திராவிடம் என்பதுதான் தமிழினம் என்று மாறிற்று. தமிழே திராவிடம் என்பதற்கான சரித்திரக் குறிப்புகள் ஏராளமாக உள்ளன என்று திராவிட நாடு இதழில் அண்ணா எழுதியுள்ளார். 1962-ல் மாநிலங்கள் அவையில் திராவிடன் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன் என்றார் அண்ணா.  

தேசிய கீதத்தில் 'திராவிட உத்கல வங்கா’ என்று ஒரு வரி வரும். இந்தப் பாட்டை  நானா எழுதினேன்? ரவீந்திரநாத் தாகூர் எழுதினார். மாநிலக் கல்லூரி வாசலில் உள்ள உ.வே. சாமிநாத அய்யர் சிலையைத் தாங்கி நிற்கும் கல்லில் 'திராவிட வித்யா பூஷனம்’ என்று குறிப்பிட்டுள்ளது. நாளையே அந்தக் கல் காணாமலும் போகக்கூடும். திராவிடம், தமிழ், செம்மொழி என்றால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள். இந்த விழா, ஆட்சி மாற்றத்துக்காகவோ, நாங்கள் பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகவோ நடத்தவில்லை. இனஉணர்வு புதைக்கப்பட்டால், மீண்டும் எழ எவ் வளவு காலம் ஆகும் என்ற கவலையில் இந்த விழா நடத்தப்படுகிறது. திராவிடர்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயத்துக்கு முடிவு கட்டவே திராவிட இயக்கம் ஏற்பட்டது. இதையும் பறிக்க இன்று எல்லாப் பக்கத்தில் இருந்தும் பயமுறுத்தல் வருகிறது. ஒரு கருணாநிதி போனாலும் பல கருணாநிதிகள் நிச்சயம் உழைத்து, 'திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற முழக்கம் மறுபடியும் எழுந்து விடாமல் இருக்கும் வகையில் வெற்றியை ஈட்டுவோம்'' என்று முடித்தார்.

'பல கருணாநிதிகள் நிச்சயம் வருவார்கள்’ என்ற படி, ஸ்டாலினை அவர் ஒரு பார்வை பார்த்​ததை அரங்கத்தில் இருப்பவர்கள் நிச்சயம் கவனித்திருக்​கக் கூடும்.

- க.நாகப்பன், படங்கள்: வீ.நாகமணி