ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

ஆளும் கட்சி VS மின்வெட்டு!

சங்கரன்கோவில் தேர்தல் நிலவரம்

##~##

கொளுத்தும் வெயிலைப் பொருட்​படுத்தாமல் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தில் சுறுசுறுப்புடன் இறங்கி விட்டதால், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி தகதகத்துக்கிடக்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த முறை நான்கு முனைப் போட்டி.  அ.தி.மு.க. வேட்பாளராக முத்துச்​செல்வி, தி.மு.க. சார்பில் ஜவஹர் சூர்யகுமார், ம.தி.மு.க-வின் சதன் திருமலைக்குமார், தே.மு.தி.க. சார்பாக முத்துக்குமார் ஆகியோர் முழுமூச்சுடன் சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள். 

இந்த இடைத்தேர்தலைத் தன் கௌரவப் பிரச்னையாக பார்க்கிறது, அ.தி.மு.க. தலைமை. அதனால்தான் 30-க்கும் அதிகமான அமைச்சர்கள் அடங்கிய 43 பேர் கொண்ட மெகா டீம் பிரசாரக் களத்தில் நிற்கிறது. ஜெயலலிதாவும் மூன்று நாட்கள் தொகுதி முழுவதும் வலம் வந்து வாக்காளர்களைச் சந்திக்க இருக்கிறார். அ.தி.மு.க. ஆதரவு நடிகர் பட்டாளமும் பிரசாரம் செய்யத் தயாராகி வருகிறது. ஆள் பலமும் அதிகார பலமும் இருப்பதால் ஆளும் கட்சியினர் பக்காவாக பிளான் போட்டு பிரசார வியூகம் நடத்துகிறார்கள்.

ஆளும் கட்சி VS மின்வெட்டு!

கடுமையான மின் தட்டுப்பாடும் பேருந்துக் கட்டண உயர்வும் தொகுதி மக்களிடம் கடுமையான அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. மின்வெட்டு காரணமாக சங்கரன்கோவில் பகுதியில் உள்ள விசைத் தறிகள் இயங்க முடியாத நிலையில் உள்ளதால், அந்தத் தொழிலில் ஈடுபடும் குடும்பங்கள் தவித்துப்போய் இருக்கிறார்கள். இதனால் எப்போதும் அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்கும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் கேள்விக்குறிதான்.

ஆளும் கட்சி VS மின்வெட்டு!

நெல்லை மாவட்டத்தில் உள்ள 259 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் 252 தொழிற்சாலைகள் சங்கரன்கோவில் தொகுதிக்கு உள்ளே இருக்கின்றன. மின்வெட்டு காரணமாக இந்தத் தொழிலும் நலிவடைந்து... தொழிலாளர்கள் காட்டத்தில் இருக் கிறார்கள். பகல் மட்டுமின்றி இரவிலும் மின்தடை ஏற்படுவதால், மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட, பொதுஜனம் எரிச்சலின் உச்சத்தில் இருக்கிறார்கள். மின்வெட்டுப் பிரச்னை​யை சரிக்​கட்ட முடியாமல் தடுமாறும் ஆளும் கட்சிக்கு ம.தி.மு.க. தரப்பில் இருந்தும் கடும் நெருக்கடி. சதன் திருமலைக்குமார் தொகுதிக்கு நன்கு அறிமுகம் ஆனவர் என்பதோடு, அனைத்து சமுதாய மக்களோடும் இணக்கமாகச் செயல்படக்கூடியவர் என்பது ப்ளஸ்.

ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாகச் செல்லும் வைகோ, ''உங்களை நம்பித்தான் வேட்பாளரை நிறுத்தி இருக்கேன். நானே போட்டியிடுவது போல நினைச்சு இந்தமுறை எங்களுக்கு வாய்ப்புக் கொடுத்து பம்பரம் சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்க. என்னுடைய சொந்த ஊரான கலிங்கப்பட்டியும் இந்தத் தொகுதியில்தான் இருக்கு. அதனால் நானே இந்தத் தொகுதியின் வளர்ச்சியில் தனி அக்கறையுடன் செயல்படுவேன்'' என்று மனதைத் தொடும் அளவுக்குப் பேசுகிறார்.

ஆளும் கட்சி VS மின்வெட்டு!

தேர்தல் தோல்வி, கோஷ்டிப் பூசல், தொடர் வழக்குகளால் சோர்ந்து போயிருந்த தி.மு.க-வினரை உற்சாகப்​படுத்தும் நோக்கத்தில், ஸ்டாலினும் அழகிரியும் இணைந்து செயல்வீரர்கள் கூட்டத்தைக் கூட்டினார்கள். அதில் பேசிய ஸ்டாலின், ''இந்த ஒரு தொகுதியில் நாம் வெற்றி பெற்றால், ஆட்சி மாற்றம் வந்துவிடாது. ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் செய்யும் தவறைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுக்க முடியும். அதனால், சூர்ய​குமாரின் வெற்றிக்குக் கடுமையாக உழைக்க வேண்டும்'' என்றார்.

அழகிரி பேசுகையில், ''நமது ஆட்சியின்போது நடந்த அனைத்து இடைத்தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்று இருக்கிறோம். இப்போது ஆட்சியில் இருப்பவர், 'பஸ் கட்டணம், பால் கட்டணத்தை உயர்த்திய பிறகும் நாங்கள்தான் ஜெயிப்போம்’ என இறுமாப்போடு பேசுகிறார். அதற்குப் பதில் கொடுக்க மக்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சிருக்கு. தேர்தல் வேலையில் ஈடுபடும் கட்சி நிர்வாகிகள் இடையில் ஒரு நாள், ரெண்டு நாள்கூட லீவு போடாமல் கடுமையாக உழைக்க வேண்டும். நான் இதில் கவனமாகவும் கண்டிப்பாகவும்  இருப்பேன்'' என்று எச்சரித்தார். ஆக, உட்கட்சிப் பூசல் இல்லாமல் தி.மு.க. இந்த இடைத்தேர்தலை சந்திக்கிறது.

தே.மு.தி.க-வும் தன் பங்குக்கு முத்துக்குமாரை களம் இறக்கி இருக்கிறது. அக்கட்சியின் சார்பில் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதாவின் சவாலை சமாளிக்கும் விதமாக கணிசமான வாக்குகளை அள்ளவேண்டும் என்ற பயமும் பரபரப்பும் அவர்களிடம் தென்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியினரின் ஆதரவும் கை கொடுக்கும் என்று நம்புகிறார்கள்.

புதிய தமிழகம், ஜான்பாண்டியனின் மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை இந்த இடைத் தேர்தலைப் புறக்கணித்துவிட்டன. அதனால், இந்தக்கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கு நான்கு கட்சிகளுமே மறைமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.  மின்வெட்டு இருட்டுக்குள் இருந்தபடி நான்கு கட்சிகளின் தேர்தல் களேபரத்தை எடை போடுகிறார்கள் மக்கள். விடை என்னவாக இருக்குமோ?

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்