ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கருணாநிதி ஆதரவு.. ஜெயலலிதா மெளனம்!

கூடங்குளம் திருப்பம்

##~##

கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசின் வல்லுநர் குழு அறிக்கையைக் கொடுத்து விட்டது. அதைத் தொடர்ந்து, கூடங்குளம் போராட்டக் குழுவினருக்கு முதல்வரைச் சந்திக்க அவசர அழைப்பு. பிப்.29-ம் தேதி மதியம் 2.40 மணிக்கு சந்திப்பு என்று சொல்லப்பட்டது. நால்வருக்கு மட்டும்தான் அனுமதி என்றதும், போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், சூழலியலாளர் புஷ்பராயன், வழக்கறிஞர் சிவசுப்ரமணியன், மக்கள் குழுவின் வல்லுநர் டாக்டர் ரமேஷ் ஆகியோர் மட்டும் முதல்வரைச் சந்திக்க முடிவானது. 

நால்வரும் ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அலுவலகத்துக்குள் அமர வைக்கப்பட்டனர். குழுவின் மற்ற உறுப்பினர்களான இடிந்தகரை கிராம பாதிரியார் அருட்தந்தை ஜெயக்குமார், மை.பா. ஜேசுராஜன், முகிலன் ஆகியோர் கோட்டையின் 10-வது வாயிலுக்கு வெளியே காத்திருந்தனர்.

கருணாநிதி ஆதரவு.. ஜெயலலிதா மெளனம்!

முதல்வரைச் சந்தித்துவிட்டு, உதயகுமாரும் மற்றவர்களும் வெளியே வந்தனர். வல்லுநர் குழுவைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ் பேட்டி கொடுக்கத் தொடங்கிய சில நிமிடங்களில், கோட்டை பாதுகாப்பு

கருணாநிதி ஆதரவு.. ஜெயலலிதா மெளனம்!

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓடிவந்து, 'சி.எம். கார் போகப்போகுது’ என்று சத்தமாகக் கூறியபடி, நிருபர்களை நெருக்கினார். 'பேட்டி யின்போது ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என மூத்த பத்திரிகையாளர்கள் கடுப்பாக, அதைக் கண்டுகொள்ளாமல் காவல்துறை உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன், 'சார் வண்டி வந்துருச்சு... கிளம்புங்க’ என்று அழுத்தம் கொடுத்தார். உடனே மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள், போராட்டக் குழுவினரை அழுத்தமாகப் பிடித்தபடி வண்டி அருகில் கூட்டிச்சென்றனர். கைதியை அழைத்துச் செல்வது போல, உதயகுமாரின் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்று காருக்குள் உட்காரவைத்த பிறகுதான், போலீஸார் நிம்மதியானார்கள். ஆனால், அவர்கள் சென்ற அரைமணி நேரத்துக்குப் பிறகுதான், முதல்வர் கோட்டையில் இருந்து கிளம்பினார்.

முதல்வருடனான சந்திப்பு பற்றி போராட்டக் குழுவைச் சேர்ந்த புஷ்பராயனிடம் பேசினோம். ''முதல்வரின் அறைக்குள் நாங்கள் நுழைந்ததும் மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். அணு உலைக்கு எதிரான கருத்துகள் அடங்கிய புத்தகங்களை அவருக்குப் பரிசாகக் கொடுத்தோம். அவற்றைப் படித்துப்பார்ப்பதாகச் சொன்னார். 'தானே’ நிவாரண நிதியாக ஒரு லட்சம் கொடுத் ததையும் ஏற்றுக் கொண்டார். ஏழு மாத காலமாக நாங்கள் நடத்தும் போராட்டத்தின் நோக்கத்தை தமிழக அரசு புரிந்துகொண்டு இருப்பதை நன்றியோடு பாராட்டினோம். போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கும் கிராம மக்கள் காந்திய வழியில் போராடுவதால் எந்த சமயத்திலும் தவறாக நடந்துகொண்டது கிடையாது என்பதைச் சொன்னோம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். முடிவில், 'எல்லாவற்றையும் சொல்லி முடித்து விட்டீர்களா?’ என்று கேட்டார். அவரிடம் பேசியதைப் பார்க்கும்போது, சீக்கிரமே அவரிடம் இருந்து நல்ல பதில் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது'' என்றார் நம்பிக்கையுடன்.

இந்த நிலையில்தான், திடீர் என்று கூடங்குளத்துக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்துப் பேசினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. போராட்டக் குழுவினரைக் கோபம் கொள்ளவைத்திருக்கும் இந்தப் பேச்சு குறித்து உதயகுமார், ''1989-ல் நாடாளுமன்றத்தில் அப்போது தி.மு.க. எம்.பி-யாக இருந்த வைகோ, 'கூடங்குளம் உலை கூடாது’ எனப் பேசினார். 98-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில், கூடங்குளம் அணு உலை கூடாது என்று குறிப்பிட்டு உள்ளார்கள். இடையில் ஓர் ஆண்டைத் தவிர, கடந்த 15 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., கூடங்குளம் அணுஉலை தொடர்பாக எந்தவிதமான நிலைப்பாட்டையும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை. அமெரிக்க அணு உடன்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து, மாநிலங்களவையில் கனிமொழியைக் கன்னிப்பேச்சில் பேசவைத்தார். திடீரென கூடங்குளம் உலையைத் திறக்குமாறு இப்போது பேசுவதில், அவருக்கு என்ன அழுத்தமோ தெரியவில்லை. எங்கள் அடித்தட்டு மக்களின் போராட்டத்தைப் பற்றிப் பேச அவருக்குத் தகுதி  இல்லை. இனியாவது, அவதூறாகப் பேசுவதை கருணாநிதி நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார் காட்டமாக.

கருணாநிதியின் பேச்சும் ஜெயலலிதாவின் மௌனமும் விரைவில் புரியும்!

- ஆண்டனிராஜ், தமிழ்க்கனல்

 ஜெர்மன் உளவாளி?

கருணாநிதி ஆதரவு.. ஜெயலலிதா மெளனம்!

அன்னிய நாட்டு உளவாளி என்று முத்திரை குத்தப்பட்டு, நாடு கடத்தப்பட்ட ஜெர்மன் நாட்டவரான ரெய்னர் ஹெர்மன் குறித்து காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தோம். ''கங்கா லாட்ஜில் ஜெர்மானிய நபர் ஒருவர் தங்கி இருப்பதாகவும், அவருக்கு கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக் குழுவினருடன் தொடர்பு இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. அதன்பேரில், தமிழக கியூ

பிராஞ்ச் அந்த லாட்ஜை  ரகசியமாகக் கண்காணித்தது. கடந்த 26-ம் தேதி, ஹெர்மனை சென்னைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அவரது லேப்டாப் மற்றும் செல்போனை சோதனை செய்ததில், அவர் சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருப்பதும் உதயகுமார் மற்றும் இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் லால்மோகன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருப்பதும் கண்டுபிடிக்கபட்டது. விசாரணை முடிந்ததும் அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்து, ஜெர்மனிக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்'' என்று சொன்னார்கள்.

போராட்டக் குழுவினருக்கு சுமார் 12 கோடி ரூபாய் இவர் மூலமாக கைமாறி இருப்பதாக தகவல் கசியும் நிலையில், ''ஹெர்மனை எனக்கு ஐந்து வருடங்களாகத் தெரியும். விஞ்ஞானி லால்மோகனுக்கும் அவர் அறிமுகமானவர். ஆனால், கடந்த ஒரு வருடமாக அவர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. கூடங்குளம் போராட்டத்துக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்கிறார் உதயகுமார்.

- பி.கே. ராஜகுமார்