Published:Updated:

`தி.மு.க-வில் ஒருவர்; 12 பி.ஜே.பி எம்.பி-க்கள்!’ - 17 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ( ANI )

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறுவதை ஒட்டி உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 17 மக்களவை எம்.பி.களுக்குத் தொற்று உறுதியானது.

கொரோனா பெருந்தொற்றால் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், கடும் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி இன்று (செப்டம்பர் 14) முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை நேற்றும், இன்றும் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில், 12 பி.ஜே.பி. எம்.பி-க்கள், இரண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி-க்கள், சிவசேனா, தி.மு.க மற்றும் ஆர்.எல்.பி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்.பி-களுக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

India-China Face-Off: `எல்லையைக் காக்கும் வீரர்களுக்கு பக்கபலமாக நிற்போம்!’ - பிரதமர் மோடி

பாஜக எம்.பி சுகந்தா மஜூம்தர், தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும், மீனாட்சி லேகி, ஆனந்த் குமார் ஹெக்டே, பர்வேஷ் சாஹிப் சிங் போன்றவர்களுக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் 200-க்கும் அதிகமான எம்.பி-க்கள் 65 வயதுக்கும் அதிகமானவர்கள்.

கூட்டத்தொடருக்கு வரும் உறுப்பினர்கள், முகக்கவசம், ஃபேஸ் ஷீல்டு போன்றவை வழங்கப்படுகிறது. அதோடு அனைவரும் நாடாளுமன்றத்தில், தனிமனித இடைவெளியை கடைபிடித்து அமரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மக்களவை உறுப்பினர்கள் 17 நபர்களுக்கும், மாநிலங்களவை உறுப்பினர்களில் 13 பேருக்கும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு