Published:Updated:

`துளைத்த 13 பெல்லட் குண்டுகள்; துரத்திய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்?' - காஷ்மீரில் உயிரிழந்த சிறுவன்

கடந்த திங்கள்கிழமை முதல் தற்போதுவரை காஷ்மீர் முழுவதும் அமைதியில் மூழ்கியுள்ளது

காஷ்மீர்
காஷ்மீர் ( AP )

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டை ஆட்சி செய்த எந்தவொர அரசும் செய்யாத ஒரு விஷயத்தைத் தற்போது ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான அரசு செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைமுறையிலிருந்த 370, 35A சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு, மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என இருந்தது. இனிமேல் காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக இயங்க இருக்கின்றன.

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்
சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்
AP

`இந்த விவகாரம் தெரிந்தால் காஷ்மீர் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கக் கூடும், பாகிஸ்தான் அத்துமீறலாம்' என்ற காரணங்களால் மசோதா தாக்கல் செய்யும் நொடி வரையில் இது தொடர்பான எந்த விஷயமும் வெளியில் கசியவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக காஷ்மீர் மாநிலம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். மசோதா தாக்கல் செய்யப்பட்ட திங்கள்கிழமை நள்ளிரவு முதல் மாநிலத்தின் பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் தொலைபேசி, இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டன. அங்குள்ள அரசியல் தலைவர்களும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர். இதற்கிடையில் 370 தடை மசோதா தாக்கல் செய்யப்பட்ட அதேநாளில் ஒரு சோகமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

ஸ்ரீநகர் பல்போரா பகுதியைச் சேர்ந்த ஒசைப் அல்டஃப் என்ற 17 வயதுச் சிறுவன் கடந்த 5-ம் தேதி தன் நண்பர்களுடன் இணைந்து அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.

மாதிரி புகைப்படம்
மாதிரி புகைப்படம்
AP

அங்கு வந்த சில சி.ஆர்.பி.எஃப் படை வீரர்கள் விளையாடிய சிறுவர்களைத் துரத்தியுள்ளனர். வீரர்களுக்குப் பயந்து சிறுவர்கள் ஓடியுள்ளனர். அருகிலிருந்த ஆற்றுப் பாலத்தின் மீது ஓடும்போது பாலத்தின் இரண்டு திசையிலும் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் மறித்துள்ளனர். இதனால் என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்த சிறுவர்கள் ஆற்றில் குதித்துள்ளனர். அவர்களில் 2 பேரை மணல் அள்ளும் தொழிலாளர்கள் காப்பாற்றியுள்ளனர். சிறிது நேரத்துக்குப் பிறகு ஒசைப் அல்டஃப்பின் உடல் மட்டும் ஆற்றோரத்தில் மிதந்துள்ளது.

சட்டப் பிரிவுகள் 370, 35ஏ! - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இழப்பால் நடக்கப் போவது என்ன?

இந்தச் சம்பவத்தை அடுத்து காப்பாற்றப்பட்ட இரண்டு சிறுவர்களும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே மருத்துவமனையில் உயிரிழந்த சிறுவனின் பிரேதப் பரிசோதனையும் நடைபெற்றது. பரிசோதனை முடிவில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒசைப்பின் உடலில் 13 பெல்லட் குண்டுகளின் காயங்கள் இருந்ததாகவும் பெரும்பாலான காயங்கள் கண்களுக்கு அருகிலிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள மருத்துவர்கள், அரசு மற்றும் பாதுகாப்புப் படைகள் குறித்த வன்முறைச் சம்பவங்கள் பற்றி ஊடகத்தினரிடம் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் ஹஃப்போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்
சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்
AP

சிறுவன் உயிரிழப்பு குறித்துப் பேசிய அவரது தந்தை முகமது அல்டஃப் மஸாரி, `பாதுகாப்புப் படை வீரர்களால் சுற்றிவளைக்கப்பட்ட என் மகன் வேறு வழியின்றி ஆற்றில் குதித்துள்ளான். அவனுக்கு நீந்தத் தெரியாது. அதனால் 20 நிமிடங்கள் போராடிவிட்டு உயிரிழந்துவிட்டான். காஷ்மீரில் 370 சிறப்புச் சட்டம் ரத்து செய்யப்படவுள்ளது உள்பட எந்த விஷயமும் என் மகனுக்குத் தெரியாது. அவன் விளையாடச் செல்லும்போது எங்கள் பகுதியில் தடை உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.

ஒசைப் 11-ம் வகுப்புதான் படிக்கிறான். கிரிக்கெட் மீது அதிகக் காதல் கொண்டவன். சட்டப்பிரிவை ரத்து செய்தற்கு முன்னதாகவே ஸ்ரீநகரில் தொலைக்காட்சி, ரேடியோ போன்றவை துண்டிக்கப்பட்டன. அதனால் மத்திய அரசின் அறிவிப்பு பற்றி எங்களுக்கே தெரியாது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதா என்பது தெரியவில்லை. என் மகனின் இறப்புக்கு நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையும் இல்லை’ எனக் கண்ணீருடன் பேட்டி அளித்தார்.

சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்
சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்

சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் நடக்கும் சர்ச்சை, உயிரிழப்பு, படுகாயம் குறித்து அதிகாரபூர்வமாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை. ஸ்ரீ மகாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் மட்டும் 8 பேர் துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் பெல்லட் குண்டுகள் தாக்குதலால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ” என் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும் போது சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் என் மீது பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தினர். நான் மயங்கி கீழே விழுந்துவிட்டேன். பிறகு என்ன நடந்தது, மருத்துவமனைக்கு எப்படி வந்தேன் போன்ற எதுவும் தெரியாது” என்று நவா காடல் என்பவர் தெரிவித்துள்ளார்.

News Credits : HuffPost India