Published:Updated:

தலையங்கம்: இருட்டுத் தமிழன்!

தலையங்கம்: இருட்டுத் தமிழன்!

தலையங்கம்: இருட்டுத் தமிழன்!

தலையங்கம்: இருட்டுத் தமிழன்!

Published:Updated:
தலையங்கம்: இருட்டுத் தமிழன்!

'தமிழ்நாட்டுத் தொழிற்சாலைகளுக்கு இனி 40 சதவிகிதம் மின் வெட்டு; சென்னை நகருக்குள் 2 மணி நேரம் பொது மின் வெட்டு; மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு 4 மணி நேரம் மின் வெட்டு!' என்று மாநில அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தவுடன், இந்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அதை வரவேற்று இருக்கிறது.

'என்ன தண்டனை, எப்போது தண்டனை' என்று சொல்லாமல், தினம் தினம் ஒருவனை சிறுகச் சிறுக சித்ரவதை செய்துகொண்டே இருந்துவிட்டு, திடீரென ஒரு நாள், 'உன்னை மாறுகால் மாறுகை வாங்கப்போகிறோம்' என்று அறிவித்தால், கைதிக்கு எப்படி இருக்கும்? 'அப்பாடா! தீர்ந்தது மன உளைச்சல். இதுதானே தண்டனை... அனுபவிக்க என்னைத் தயார்படுத்திக்கொள்கிறேன்!' என்று துக்கத்திலும் ஒரு நிம்மதி பிறக்குமே... அதே அவல நிம்மதிதான் இதுவும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது பொதுத் தேர்வு நேரம் என்பதால், மாணவர்கள் மீது தமிழக அரசுக்கு அளவில்லா 'கரிசனம்'. பள்ளிக்கூடங்களுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என்று சொல்லி இருக்கிறது. 'படிப்பதற்கு மின்சாரம் இல்லாவிட்டாலும், பரீட்சை எழுதவாவது கொடுத்தீர்களே...' என்று மனம் நெகிழ்ந்து மாணவர்களும் அறிக்கைவிடுவார்களோ என்னவோ?!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின் தேவையைப் பூர்த்திசெய்துகொள்வதில் தமிழ்நாட்டைவிட மிகவும் பின்தங்கி இருந்த ஆந்திரம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் இன்று சமாளித்துக் கரை ஏறிவிட்டன. குஜராத்திலோ 100 சதவிகித மின் தேவை பூர்த்தி ஆகி, பிற மாநிலங்களுக்கும் கொடுக்கும் அளவுக்கு உபரி முன்னேற்றம். தமிழகத்துக்கு மட்டும் ஏன் இந்தப் பின்னடைவும் சோதனையும்?

மாறி மாறி இங்கே ஆளும் கட்சிகள், அடுத்த கட்சியை நோக்கிப் போடாத கூச்சல் இல்லை... சுமத்தாத குற்றச்சாட்டு இல்லை... 'நாங்கள் வந்துவிட்டால் ஒளிமயமான தமிழகம்தான்' என்று அடுக்காத வாக்குறுதியும் இல்லை. ஆனால், இருள்தான் நீங்கவே இல்லை!

'கஞ்சி குடிப்பதற்கிலார் - அதன் காரணங்கள் இவை என்னும் அறிவும் இலார்' என்று அன்றைய அடிமை தேசத்தில் நெஞ்சு பொறுக்க முடியாமல் பாரதியார் பாடியது, இன்றைக்கும் நம் மக்களுக்கு என்னமாய்ப் பொருந்துகிறது?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism