Published:Updated:

"அமைச்சருக்கு ஒரு ஆம்லேட்ட்ட்!”

சங்கரன்கோவில் கச்சேரிஆண்டனிராஜ், கே.கே.மகேஷ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

"அமைச்சருக்கு ஒரு ஆம்லேட்ட்ட்!”

சங்கரன்கோவில் கச்சேரிஆண்டனிராஜ், கே.கே.மகேஷ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

Published:Updated:

ங்கரன்கோவில் நாடார் மெஸ். அலைமோதும் கூட்டத்துக்கு நடுவே அமர்ந்திருந்தார் அமைச்சர் என்.சுப்பிரமணியன். அவரது முதுகுக்குப் பின்னால் நின்ற தொண்டர், 'அமைச்சருக்கு ஒரு ஆம்லேட்ட்' என்று கூவ, அசமந்தமாக வந்த சர்வர், 'அமைச்சர் அந்தப் பக்கம் இருக்காரு அண்ணாச்சி...' என்றார் கெக்கேபிக்கே கேலிச் சிரிப்போடு. 'யோவ்... இவரும் அமைச்சர்தான்யா. நம்ம கருப்பசாமி இருந்தார்லா... அதே ஆதிதிராவிடர் நலத் துறைதான்!'' விருட்டென்று போய் ஆம்லேட்டைக் கொண்டுவந்தவரிடம், 'இதென்ன பிரமாதம்... சுல்தான் பிரியாணிக் கடைக்குப் போனீயன்னா, எல்லா அமைச்சரையும் பார்த்துப்புடலாம்'' என்றார் இன்னொரு தொண்டர்.

"அமைச்சருக்கு ஒரு ஆம்லேட்ட்ட்!”
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'ஓவர் நைட்டில் யூனியன் பிரதேசமாகிவிட்டதோ சங்கரன்கோவில்?’ என்று சந்தேகமாக இருக்கிறது. வீதிக்கு ரெண்டு எம்.எல்.ஏ., வார்டுக்கு ஓர் அமைச்சர் என்று மாண்புமிகுக்களின் தரிசனம். தி.மு.க. முன்னாள்கள் இன்னும் பாவம். ''தொகுதியைவிட்டு வெளியே போனீங்க...'' என்று அழகிரி அவர்களை மிரட்டி வைத்திருக்கிறார். கலைத் துறையும் களம் இறங்கிவிட்டது.

''அழகா இருக்க தாயி!'' -பாலீஷ் அ.தி.மு.க!

அ.தி.மு.க-வின் பிரசார ஸ்டைல் 'அதிரடிக்கார மச்சான் மச்சான்’ பாணி! ஃபார்ச்சூன், இன்னோவா, டவேரா, ஸ்கார்பியோ, சைலோ என்று விதவிதமான கார்கள் கிராமத் துக்குள் நுழைகின்றன. அமைச்சர், பேண்டு வாத்தியம், கட்சித் துண்டை கழுத்தில் சுற்றிய மகளிர் குழுவினர், கரை வேட்டிக்காரர்கள் என்று பெரிய படைக்கு மத்தியில் வெட்கப்பட்டுக்கொண்டே நடந்துவருகிறார் வேட்பாளர் முத்துச்செல்வி.  

வாண்டுகள், தாவணிப் பெண்கள்கூட, 'போடுங்கம்மா ஓட்டு... ரெட்டலையப் பார்த்து' என்று கோஷம்போட்டுக்கொண்டே போனார்கள். மகளிர் அணிப் பெண்கள் சிலர், 'கடைக்காரரே ரெட்டைக்குப் போட்டுருங்க. கொத்தனாரண்ணே... அக்காவுக்கு ஓட்டுப் போட்ருங்க!' என்று ஆர்வமாகச் சொல்லிக்கொண்டே வந்தார்கள்.

வேட்பாளரைவிடப் பணிவாக, பவ்யமாக ஓட்டுக் கேட்டார் அமைச்சர் சித.செல்லப்பாண்டியன். பாக்கெட்டில் அம்மா படம், பேனா, மோதிரத்திலும் அம்மா படம், துண்டு, வேட்டி, கர்ச்சீப் அனைத்திலும் அ.தி.மு.க. கரை என அவர்தான் வேட்பாளரோ என்று கருதும் அளவுக்கு முழு அ.தி.மு.க. கெட்டப்பில் இருந்தார். கழுத்தில் சிலுவை டாலர் போட்டு இருந்த ஒருவரிடம், ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!'' என்று டைமிங்காக வணக்கம் வைத்து ஓட்டு வேட்டையாடினார் சீனாதானா.

கழுகுமலைப் பக்கம் அத்திப்பட்டி கிராமத்தில் ஓட்டுக் கேட்டபோது, முதியவர் ஒருவரின் கையைப் பற்றிய வேட்பாளர், 'அம்மா கொடுத்த எல்லாப் பொருளும் கிடைச்சிருச்சா?' என்று கனிவாக விசாரித்தார். 'மிக்ஸி, கிரைண்டரு, காத்தாடி, டி.வி. பொட்டி(?) எல்லாம் கிடைச்சிருச்சிப்பா... கரன்ட்டுதான் இல்ல. அம்மாகிட்ட சொல்லி கொஞ்சம் அதுக்கும் ஏற்பாடு பண்ணிடு தாயி' என்றார் அவர். 'பெரிசு நியாயமாப் பேசுதா? இல்ல, கிண்டல் பண்ணுதா?' என்று புரியாமல் வேட்பாளர் விழிக்க, 'ஏகப்பட்ட கரன்ட்டை வெளிநாட்டுல இருந்து வாங்கியாந்து வெச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் குடுக்கவிட மாட்டேங் குது. தேர்தல் முடிஞ்சதும் செழிப்பாக் குடுத்துருவோம் தாத்தா!'' என்றார் 'கிண்டல்’ தொண்டர் ஒருவர். ''எக்குத்தப்பாப் பேசாதடே... பக்கத்துல அமைச்சர் இருக்காரு...'' என்று கண்டித்தார் இன்னொரு ர.ர!

முத்துச்செல்வியின் கன்னத்தைக் கிள்ளி, ''அழகா இருக்கியே தாயி!' என்று கொஞ்சி னார் ஒரு பாட்டி. ''இன்னும் கலரா இருந்தாவ. வெயில்ல அலைஞ்சி கொஞ்சம் கறுத்துப்போயிட்டாவ!'' என்று மகளிர் அணிப் பெண் சொல்ல, வேட்பாளரின் முகத்தில் வெட்கச் சிரிப்பு. தீப்பெட்டி ஆபீஸ்களுக்குள் நுழைந்தும் ஓட்டுக் கேட்டார் முத்துச்செல்வி. அவரோடு பெரும்படையாக உள்ளே நுழைந்த கரைவேட்டிகளில் ஒருவர், தீப்பெட்டி ஒன்றைச் சுட்டு பாக்கெட்டில் போட்டுக்கொண்டார். எப்பூடி?!

தி.மு.க  வின் மிஸ்டர் பணிவு!

தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார். இந்தத் தேர்தலின் மிகப் பணிவான வேட்பாளர். தேர்தல் நேர கார்ட்டூன்களில் பார்த்திருப்பீர்களே, அப்படி ஒரு பணிவு. வயசு வித்தியாசம் இன்றிக் காலில் விழுவது, பாட்டிகளைக் கட்டிப்பிடிப்பது என்று கலங்கடிக்கிறார் மனிதர்.

"அமைச்சருக்கு ஒரு ஆம்லேட்ட்ட்!”

கலைஞர்போல் கரகர குரலில் அறிவிப்பாளர் நெல்லை முத்தையா மைக்கைக் கடிக்க, மை பூசிய தலை, பல அடுக்கு பவுடர் முகத்தோடு 'இளைஞர்கள்’ பலர் ஜீப்பைப் பின்தொடர்ந்தார் கள். சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனி முதல் தெருவில், '10 மணி நேர மின்வெட்டால் மக்கள் பரிதவிக்கிறார்கள்’ என்று வேதனைப்பட்ட 'கலைஞர்’ குரல், அடுத்த தெருவுக்குப் போனபோது, '12 மணி நேர மின் தடை’ என்று உருகியது. அதற்கடுத்த தெருவில், 'வரலாறு காணாத 14 மணி நேர மின்வெட்டு’ என்று கதற, 'காசா பணமா? சும்மா 16 மணி நேரம்னு சொல்லுய்யா...' என்று சிரித்தார்கள் உடன்பிறப்புக்கள்.

வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், மறைந்த அமைச்சர் கருப்பசாமியின் சொந்த ஊரான புளியம்பட்டிக்குப் போனபோது கரன்ட் இல்லை. செல்போன், பேட்டரி லைட் வெளிச்சத்தில் அவரை வீடுகள்தோறும் அறிமுகப்படுத்திவைத்து வாக்குக் கேட்டார் உள்ளூர்ப் பிரமுகர் ராஜையா. ''மாப்ளே... வேட்பாளர் தம்பி நம்ம சொந்தக்காரன்தான். ஏவுன வேலையைத் தட்டாமச் செய்வான். குடும்பத்தோட ஓட்டுப் போட்டுறணும் (எ)ன்ன?' என்றார். மற்றொரு வீட்டில் தனியே இருந்த தாவணிப் பெண்ணிடம், 'ஏல... ஏ... தாயி... அய்யா வீட்ல இல்லியா? சரி... வேட்பாளர் அண்ணாச்சி ஓட்டுக்கேட்டு வந்தாவன்னு சொல்லிடு... என்ன?' என்றார். அடுத்தது தி.மு.க-காரர் வீடுபோல. 'யோவ்... நான் யாருன்னு தெரியுமா? உள்ள பாரு தலைவரு, தளபதி, அழகிரி படத்தோட அண்ணா படமும் கெடக்கு. எங்க அப்பா காலத்துலயே...'' என்று சொற்பொழிவாற்றத் தொடங்க, 'நேரமாகிறதே’ என்று நெளிந்தார் வேட்பாளர். சமயத்தில் உள்ளே

புகுந்த ஒருவர், 'அவரு பரம்பர தி.மு.க- காரரு... செத்தாலும் வேற கட்சிக்குப் போட மாட்டாரு. அவர்கிட்ட போய் ஓட்டுக் கேட்டுக்கிட்டு இருக்கீயளே அண்ணாச்சி!'' என்று காப்பாற்றிக் கூப்பிட்டுப்போனார்.

அதிக எதிர்பார்ப்போடு ஒரு பெண் ஆரத்தி எடுக்க, சூடத்தைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு விருட்டென நகர்ந்துவிட்டார் வேட்பாளர். கட்சிக்காரர்களும் கண்டுகொள்ளவில்லை. ஏமாற் றத்தோடு அவர் நிற்க, சிறிது நேரத்தில் ஓடி வந்தார் ஒருவர். இரண்டு 100 ரூபாய் நோட்டை அந்தப் பெண் ணின் கையில் திணிக்க, வாடிய முகம் மலர்ந்தது. அதற்குள் தகவல் பரவி ஊர் பூராவும் ஆரத்தித் தட்டுக்கள்! புளியம்பட்டி காலனியில், மின்சாரம் இல்லாததால் சீக்கிரமே சாப்பிட்டு விட்டு சிமென்ட் தெருவில் தண்ணீர் தெளித்துத் தூங்க ஆரம்பித்திருந்தார் கள் கிராமத்து மக்கள். ''தூங்குறவங்கள எழுப்ப வேண்டாம்'' என்று சொல்லிக்கொண்டே அத்தனை பேரையும் ஆவேசமாக உசுப்பினார்கள் உடன்பிறப்புக்கள். பாயில் கிடந்த ஒரு பாட்டியை வேட்பாளர் திடீரெனக் கட்டிப்பிடிக்க, கேமராக்கள் மின்னல் வெட்டின. அரைத் தூக்கத்தில் இருந்த பாட்டி பயந்தேபோய்விட்டார்!

ம.தி.மு.க  வின் பேரன்!

ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைகுமார். குருவிக்குளம் தெற்கு ஒன்றியம் அவனிகோனேந்தல் கிராமத்தின் பிரசாரம்!

'வாருங்கள் வடம் பிடிப்போம்... வரலாற்றில் இடம் பிடிப்போம் என்று வரலாறு கண்டெடுத்த வரலாற்று நாயகன் வைகோவின் தம்பி, மக்கள் மருத்துவர் இதோ உங்கள் மத்தியில் வாக்குக் கேட்டு வருகிறார்' என்று கவித்துவமாக கம்பீரக் குரலில் ஜீப்பில் நின்றபடி உறுமுகிறார் பேச்சாளர் 'புயல் பாண்டி’. மறுபடியும் மறுபடியும் 'வைகோவின் தம்பி’ என்கிற அறிவிப்பைக் கேட்டதும், 'அப்ப... வேட்பாளர் நம்மாளுக கிடையாதாப்பா?' என்று அப்பாவியாகக் கேட்டார் ஒரு முதியவர். 'நம்ம சொந்தக்காரருதான். (குரலைத் தாழ்த்தி சாதியைச் சொல்கிறார்) நாங்க எல்லாருமே வைகோவுக்குத் தம்பின்னுதான் சொல்வோம்!'' என்று விளங்கவைத்தார் உள்ளூர் மறுமலர்ச்சி.

"அமைச்சருக்கு ஒரு ஆம்லேட்ட்ட்!”

மல்லிகா என்ற பெண்ணோ கொஞ்சம் விவரமானவர் போலும். வேட்பாளரை அறிமுகப்படுத்தியவரிடம், 'அடிக்கொருக்கா எங்க அம்மைய இவிய ஆஸ்பத்திரிக்குத்தான கூட்டியிட்டுப் போவேன். டாக்டருக்குத்தான் ஓட்டு. கவலைப்படாமப் போங்க!' என்றார் தெளிவாக. ''சரிம்மா... எந்தச் சின்னத்துல ஓட்டுப்போடுவீய?'' என்று சோதித்தபோது, 'ஆங்... பம்பரம்தான?' என்று பதில் வர, எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சி.

''வைகோ நம்ம ஊர்க்காரும்மா... அவரை நாமதானம்மா ஜெயிக்கவைக்கணும்?'' என்று கேட்டவரிடம், 'மாறி மாறி ஓட்டுக் கேட்டு வாறீய... இந்த ஊருக்கு ஒரு ரேஷன் கடை கட்டித் தர மாட்டேங்கிறீயளே!'' என்று பீடம் தெரியாமல் சாமியாடினார் அந்தப் பெண். 'புள்ளகுட்டிகள விட்டுட்டு மூணு மைல் தூரம் நடந்து போய், அரிசி, மண்ணெண்ணெ வாங்குதோம். எங்களுக்குச் செய்தவீயளுக்குத்தான் ஓட்டு. செய்யாதவீயளுக்கு ஓட்டுக் கெடையாது' என்று கோரஸ் பாடினார்கள். 'யம்மா... என்னைய செத்தோடம் பேசவுடுதீயலா?' என்று அனுமதி கேட்ட சதன், '21 வருஷம் எம்.எல்.ஏ-வா இருந்தவங்க கிட்ட கேட்காம, எங்ககிட்ட கேட்கிறீங்க. சரி பரவாயில்ல... நானும் எம்.எல்.ஏ-வா இருந்தவன்தான். ஒரு ஊர்ல 400 கார்டுகள் இருந்து, அங்கிருந்து மூணு, நாலு கிலோ மீட்டர் தள்ளி ரேஷன் கடை இருந்துச்சின்னா, அந்த ஊர்ல புதுக் கடை தொடங் கலாம்னு விதி இருக்கு. எனக்கு ஓட்டுப் போடுங்க. ஆறே மாசத்துல கடையைக் கொண்டாரேன்!'' என்று உறுதிகொடுத்தார். 'இதையும் எழுதிக்கோய்யா... அண்ணன் எம்.எல்.ஏ. ஆனதும் முத வேலையா இந்தச் சுவரைக் கட்டிப்புடுவோம்!'' என்று ஒருவர் சொல்ல, இன்னொருவர் ரொம்ப சீரியஸாக அதைக் குறித்துக்கொண்டார்.

இதை எல்லாம் தன் வீட்டு வாசலில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார் ஒருவர். மனிதர் வேறு கட்சிக்காரர்போல. எடுத்த எடுப்பிலேயே, 'உங்களால முடியாதுய்யா...' என்று அவர் குரல் கொடுக்க, ''முடியும்!'' என்று பொறுமையாக விளக்கினார்கள் சதனும் உடன் வந்தவர்களும். எல்லாத்தையும் தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டுக் கொண்டவர், 'செய்யுறது இருக்கட்டும்... முதல்ல நீங்க செவிப்பீயளா?' என்று குமைக்க, கொதித்து விட்டது மறுமலர்ச்சிப் படை. 'யோவ்... ஒரே நாள்ல 60 ஆயிரம் குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து குடுத்த கூட்டம்யா இது. நீரு வேற கட்சிக்காரர்னா பேசாமப் போயிரும். திண்டுமுண்டாப் பேசி சண்டைக்கு இழுக்காதீரும்...' என்றவர்களைச் சமரசப்படுத்தினார் சதன்.

'சரிப்பா... ஊர் ஆட்களெல்லாம் நூறு நாள் வேலைக்குப் போயிட்டாங்களாம். குளம் எந்தப் பக்கம்?' என்று சதன் கேட்க, 'மேக்காக்க போய் வடக்கானிக்குத் திரும்பணும் அண்ணாச்சி!' என்று வழி சொல்லியவாறே வண்டியைக் கிளப்பினார்கள். குளத்துக்குள் நாட்டுக்கருவை நிழலில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டு இருந்த பெண்கள், கார்களைப் பார்த்ததும் அதிகாரிகளோ என்று பதறி எழுந்தார்கள். 'சும்மா உட்காருங்க... நாங்க ஓட்டுக் கேட்கத்தான் வந்திருக்கோம்'' என்ற வேட்பாளரிடம், 'எனக்கு பென்சன் (ஓ.ஏ.பி.) வாங்கிக் குடுப்பீயளா சாமீ?' என்று கேட்டார் ஒரு பாட்டி. 'பேரனுக்கு ஓட்டுப் போடுங்க... உடனே வாங்கித் தாரோம்'' என்று வேட்பாளரை முந்திக்கொண்டு சொன்னார் ஒரு மறுமலர்ச்சி. 'யாருய்யா பேரன்?' என்று சதன் கேட்க, 'நீங்க இளைஞர்னு சொல்ல வாரேன் அண்ணாச்சி... சரிதான?' என்றார் மறுமலர்ச்சி. சிரித்துக்கொண்டே அடுத்த ஊருக்குப் புறப்பட்டது மறுமலர்ச்சிப் படை!

தே.மு.தி.கவின் ஊரைச் சுத்தும் ரோமியோ!

'நாடாளும் மக்கள் கட்சி’யின் கார்த்திக் இல்லாத குறையைப் போக்குகிறார் என்று தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமாரைச் சொல்கிறார்கள் உள்ளூர் நிருபர்கள். பிரசாரத்துக்கு வருவதற்கு ரொம்பவே சலித்துக்கொள்ளும் அவரை செல்போனில் அழைப்பவர்கள் ஆடிப்போய்விடுகிறார்கள். தலைவனின் செல்போன் ரிங்டோன் அப்படி...

"அமைச்சருக்கு ஒரு ஆம்லேட்ட்ட்!”

'வெற்றி மேல வெற்றிதான்
நம்ம கையிலே...
வெள்ளிக் காசு எப்பவும்
நம்ம பையிலே...
ஏதுமில்ல ஜோலி...
   எப்பவுமே ஜாலி...
கேள்வி கேட்க இங்கே    யாருமில்லையே...
நாங்கதானே ஹீரோ...
  ஆமா... ஆமா... ஆமா...
ஊரைச் சுத்தும் ரோமியோ...
ஆமா... ஆமா... ஆமா...'

ஒரு வழியாக சங்கரன்கோவில் உச்சிமாரியம்மன் கோயில் பகுதிக்கு அவர் பிரசாரத்துக்குப் போக, நாமும் ஆஜரானோம். பூட்டியிருந்த வீட்டின் காலிங் பெல்லை அடித்துவிட்டு, வாசல்படியில் அவர் உட்கார்ந்துகொள்ள, 'யம்மா... வருங்கால எம்.எல்.ஏ. உங்க வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்காரு. சீக்கிரமா வாங்க...' என்று உரிமையோடு கூப்பிட்டார் பத்து விரல்களுக்கும் நெய்ல் பாலீஸ், உள்ளங்கையில் மெஹந்தி வைத்திருந்த வார்டு நிர்வாகி மூர்த்தி. 'யம்மா... நீங்க டி.வி-யில பார்த்தீயதான? பால் விலை, பஸ் கட்டணத்தை உயர்த்திட்டு அந்தம்மா எப்படிச் சவால் விட்டுச்சினு. உங்களுக்காகத்தான் தலைவர் சட்டசபையில பேசுனாரு. நீங்கதான் எங்க மானத்தைக் காப்பாத்தணும்!'' என்று வாக்காளர்களின் காலில் விழுந்தார் வேட்பாளர்.

தலைக்குக் குளித்துவிட்டு, நெற்றிக்கு விபூதி வைத்து வந்த ஒரு பெண்ணிடம், ''ஏ... பாட்டி... பேரனுக்குத் துருநூறு வச்சிவிடு பாட்டி' என்று மூர்த்தி சொல்ல, ''என்னது... பாட்டியா?' என்று அதிர்ச்சியானார் அந்தப் பெண். 'சரிக்கா... துருநூறு வச்சிவிடுக்கா!' என்று கெஞ்சியதும், மகிழ்ந்துபோய் விபூதிவைத்து ஆசீர்வதித்தார் அந்தப் பெண்.

''என்னண்ணே உங்க வேட்பாளரை வெளியில பார்க்கவே முடியலை' என்று கூட்டணிக் கட்சிக்காரரான மார்க்சிஸ்ட் தோழரிடம் கேட்டோம்.

''அவங்க கட்சியில பூராப் பயலுவளும் வேலைக்குப் போயிட்டாங்கண்ணே. ஒண்ணாம் தேதி சங்கரன்கோவில் முத, ரெண்டாவது வார்டுல பிரசாரம் பண்றதா இருந்தோம். சரின்னு சொன்ன வார்டு நிர்வாகிங்க, மில் வேலைக்குப் போயிட்டாங்க. ஏரியா ஆட்கள் இல்லாம ஓட்டுக் கேட்டுப் போனா நல்லாயிருக்காதுல்லா... அதான் போக முடியலை. கேப்டன் வந்துட்டுப் போன பிறகு பாருங்க... பிரசாரம் எப்புடிச் சூடு பிடிக்குதுனு..!' என்றார் மீசையை நீவியபடி!

''இது முன்னாள் பிரதமர் கட்சிம்மா!''  பரிதாப பா.ஜ.க!

"அமைச்சருக்கு ஒரு ஆம்லேட்ட்ட்!”

சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தின் அனைத்துப் பேருந்துகளிலும் ஏறி இருக்கைகள்தோறும் துண்டுச் சீட்டுகளைப் போட்டுக்கொண்டே போனார் ஒருவர். 'வரப்போறது அவங்கதான்’ என்று பயணிகள் கணித்தார்கள். ஆனால், உள்ளே வந்தது பா.ஜ.க. வேட்பாளர் முருகன். லேகியம் விற்பவர்போல திக்காமல் திணறாமல் பேசிய அவரிடம், 'சம்சாரி கணக்கா மாட்டு வண்டியில வந்து வேட்புமனு தாக்கல் பண்ணுனியே அந்தத் தம்பியா நீ? பேப்பர்ல பாத்தேன்...' என்றார் ஒரு பெரியவர். முகத்தில் புன்னகை படர, 'ஆமாய்யா... முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கட்சி சார்பாப் போட்டியிடுறேன். மறக்காம ஓட்டுப் போட்டுருங்க' என்றார் முருகன். 'ஐயோ... எனக்குப் பக்கத்துல தென்காசி தொகுதி தம்பி. அதுக்கென்ன அடுத்த தேர்தல்ல போட்டுட்டாப்போச்சு' என்று ஆறுதல் சொன்னார் பெரியவர். அடுத்தடுத்து இதுபோன்ற பதில்களே வர, கடுப்பில் பேருந்தில் இருந்து இறங்கிய வேட்பாளர், 'இனிமே டவுன் பஸ், மினி பஸ்ல மட்டும் நோட்டீஸ் குடுய்யா!' என்று தன் தேர்தல் வியூகத்தை டபக்கென்று மாற்றி அமைத்தார்!

குஷ்புவோடு நமீதாவும் பிரசாரத்துக்கு வரவிருப்பதாகவும் வதந்தி பரவிவருகிறது. சங்கரன்கோவில் தாங்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism