Published:Updated:

வைகோ ஊரில் கோபால்சாமி!

ஜெயிப்பாரா முத்துச் செல்வி?

வைகோ ஊரில் கோபால்சாமி!

ஜெயிப்பாரா முத்துச் செல்வி?

Published:Updated:
##~##

ங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மற்ற கட்சிகளுக்கு எல்லாம் நான்கு முனைப் போட்டி என்றால், ஆளும் அ.தி.மு.க-வுக்கு மட்டும் ஐந்து முனைப் போட்டி. ஏனென்றால், தனிப்பெரும் எதிரியாகப் பயமுறுத்துகிறது மின் வெட்டு. 

தமிழகத்தில் அ.தி.மு.க. படுதோல்வியைச் சந்தித்த தேர்தல்களில்கூட, சங்கரன்கோவில் சங்கடப்பட வைத்தது இல்லை. 1996-ம் ஆண்டில் முதன்முறையாகக் களம் இறங்கி வெற்றி கண்ட கருப்பசாமி, அடுத்த நான்கு தேர்தல்களிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அவரது மறைவைத் தொடர்ந்து நடக்கும் இந்த இடைத்தேர்தலில், அறிவிப்பு வருவதற்கு முன்பே,

வைகோ ஊரில் கோபால்சாமி!

முத்துச்செல்வியை வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா. 32 அமைச்சர்களுடன் 43 பேர் அடங்கிய ஜம்போ படையை பிரசாரத்துக்கு அனுப்பி இருக்கிறார். வரும் 14-ம் தேதி அவரும் தொகுதி முழுவதும் சுற்றிவரப் போகிறார். தொகு திக்குள் எந்தப் பக்கம் திரும்பினாலும், ஏதாவது ஓர் அமைச்சர் யாராவது  ஒருவரின் கையைப் பிடித்து வாக்கு கேட்டுக்கொண்டு இருப்பதைக் காணலாம். நிலைமை அ.தி.மு.க-வுக்கு சாதகமாகத் தோன்றினாலும் அதிருப்தியும் இருக்கிறது.

இந்தத் தொகுதியில் உருப்படியாகத் தொழிற்சாலை எதுவும் கிடையாது. படித்த இளைஞர்கள் வேலை இல்லாமல், கேரளாவுக்குச் சென்று கூலி வேலை பார்க்கிறார்கள். வறட்சியான இந்தப் பகுதியில் நிலத்தடி நீரை நம்பியே விவசாயம் நடக்கிறது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரை, இந்தப் பகுதிக்குத் திருப்ப சங்கரன்கோவில் வரை வெள்ள வடிநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கை.  கடுமையான மின்வெட்டு, தாறுமாறாக எகிறிய விலைவாசி, பஸ் கட்டண உயர்வு ஆகிய பிரச்னைகளால் அரசு மீது அதிருப்தியில் மக்கள் இருக்கிறார்கள். பிரசாரத்துக்குச் செல்லும் அமைச்சர்களுக்கு, இதற்குப் பதில் சொல்லிச் சமாளிப்பதே பெரும்பாடாக இருக்கிறது.  

வைகோ கொடுத்துவரும் நெருக்கடியை சமாளிப்​பதற்காக, கலிங்கப்பட்டியின் தேர்தல் பொறுப்​பாளராக ராஜபாளையம் எம்.எல்.ஏ-வான கோபால்சாமி நியமிக்க ப்பட்டு உள்ளார். வைகோவின்

வைகோ ஊரில் கோபால்சாமி!

உறவினர்கள், இவருக்கும் உறவினர்கள். இரண்டு குடும்பத்துக்கான குலதெய்வமும் ஒன்று. இதனால், கலிங்கப்பட்டியில் ஒவ்வொரு வீட்டுக்கும் உரிமையோடு சென்று பேசி வாக்கு சேகரிக்கிறார் இந்த கோபால்சாமி. இதுபோதாது என்று, கலிங்கப்பட்டியில் தேர்தல் அலுவலகம் திறந்து, வாக்குகளை மடக்கப் பார்க்கிறது ஆளும்கட்சி. கோபால்சாமியின் பிரசாரம் ம.தி.மு.க.வினருக்குக் கிலியை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மூவிருந்தாளி, சுண்டங்குறிச்சி, அச்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களின் பொறுப்பாளராக தி.மு.க. சார்பில் ஆவுடையப்பன் நியமிக்கப்பட்டு இருக்​கிறார். இவரை சமாளிக்க அ.தி.மு.க-வின் பொறுப்பாளராக உள்ளாட்சித் துறை அமைச்சர் சின்னசாமி பணியாற்றுகிறார்.

அ.தி.மு.க. வேட்பாளர் முத்துச் செல்வி, 'நல்லாட்சி நடத்தும் அம்மாவின் அரசியல், சாமான்ய மக்களுக்கு கிடைக்கும் நலத் திட்டங்களை நினைவில் கொள்ளுங்கள். இந்தத் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருந்த மறைந்த அமைச்சர் கருப்பசாமி விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்த எனக்கு வாய்ப்புக் கொடுங்கள்’ என்று தீவிரமாகப் பிரசாரம் செய்கிறார்.

சங்கரன்கோவில் தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக முக்குலத்தோர் சமுதாயம் இருக்கிறது. சசிகலா வெளியேற்றம், எம்.நடராஜன் மற்றும் அவரது உறவினர்கள் மீதான கைது நட வடிக்கைகளால் அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த இளை ஞர்கள் பலரும் அதிருப்தியில் இருந்தனர். அவர்களின் வாக்குகள் திசை மாறுவதைத் தடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் நேரடியாகக் களம் இறங்கி அந்தச் சமுதாயத்தினரை சமாதானப்படுத்தி வருகிறார்.

வைகோ ஊரில் கோபால்சாமி!

எட்டு மணி நேரத்துக்கும் அதிகமான மின் வெட்டு காரணமாக விசைத்தறி நெசவாளர்களும் விவசாயி​களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் அதிருப்தியை சமாளிக்க அமைச்சர் செங்கோட்டையன், செந்தூர்பாண்டியன் உள்ளிட்டோர், விசைத்தறி நெசவாளர் சங்கத்தினர், விவசாயப் பிரதிநிதிகளைச் சந்தித்து சரிக்கட்டி வருகின்றனர். இந்தத் தொகுதியில், 80 சதவிகிதத்துக்கும் அதிகமான இலவசத் திட்டங்களை தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே ஆளும்கட்சி நிறைவேற்றி ​விட்டது. அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க  நடிக, நடிகையர் பட்டாளம் களத்தில் இறங்கி இருக்கிறது. கூடவே, நடிகர் சரத்குமாரும் பிரசாரம் செய்கிறார்.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு, ஆளும்கட்சி மீது அதிக அதிருப்தியைக் காட்டி வந்த  டாக்டர். கிருஷ்ணசாமியை அழைத்து சமாதானம் செய்துவிட்டார் ஜெயலலிதா. எனவே, அவர் இப்போது பரமக்குடி சம்பவத்தைப் பற்றிப் பேசுவதே இல்லை.  அ.தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்த வேகத்தில் பிரசாரத்திலும் குதித்துவிட்டார் கிருஷ்ணசாமி. இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் தலித் வாக்குகளைக் கவர இவரது பிரசாரத்தை ஆளும் கட்சி பயன்படுத்திக் கொள்கிறது.  

'தேர்தல் ஆணையம் அனைத்து விதிமுறைகளையும் தீவிரமாக செயல்படுத்தினாலும் விரைவில் கரன்சி கமகமக்கும்’ என்று மக்கள் ஆளும் கட்சியின் கையை ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

தி.மு.க-வினரின் திடீர் சுறுசுறுப்பு, வைகோவின் கடும் உழைப்பு, விஜயகாந்தின் பரபரப்பு போன்றவற்றை அ.தி.மு.க. எளிதில் தோற்கடித்துவிட வேண்டு என்று எல்லா மந்திரிகளும் சாமியைக் கும்பிடுகிறார்கள். சங்கரன்கோவிலில் ஒரு எம்.எல்.ஏ. ஜெயிப்பதால் ஆட்சிக்கு எந்த ஆதாயமும் இல்லை. ஆனால், அத்தனை மந்திரிகளும் தங்களது வாழ்க்கை இதில் அடங்கி இருப்பதால் ஓடியாடி உழைக்கிறார்கள். இது ஒன்றுதான் முத்துச்செல்விக்கு இருக்கக்கூடிய முக்கியமான பலம்!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism