Published:Updated:

தி.மு.க-வை ஜெயிக்கவைக்குமா இருட்டு?

தொகுதி ரவுண்ட் அப் - 3

தி.மு.க-வை ஜெயிக்கவைக்குமா இருட்டு?

தொகுதி ரவுண்ட் அப் - 3

Published:Updated:
##~##

டந்த தேர்தலில் தி.மு.க-வின் பலத்த தோல்​விக்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது, மின்வெட்டு. இப்போது, அதை​யே பலமாக நம்பி, சங்கரன்கோவில் இடைத்தேர்தல் களத்தில் சுறுசுறுப்​பாக தி.மு.க. இயங்குவது காலத்தின் கோலம்​தான். 

அழகிரியும் ஸ்டாலினும் இணைந்து தேர்தல் பணி​களை தொடங்கிவைத்த காரணத்தால், இது வரை கோஷ்டிகளாகப் பிரிந்துகிடந்த தொண்டர்கள் ஒரே அணியாக உற்சாகத்துடன் வாக்கு சேகரித்து வருகிறார்கள். தொகுதியிலேயே முகாமிட்டு இருக்கும் அழகிரி, தேர்தல் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆலோசனை சொல்வதால், அத்தனை நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராமங்களில் தங்கி, முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க-வை ஜெயிக்கவைக்குமா இருட்டு?

ஆளும்கட்சிக்கு இணையாகப் பல்வேறு குழுக் களை அமைத்து தி.மு.க-வினர் மேற்கொண்டு வரும் பிரசாரம், வேட்பாளர் ஜவஹர் சூர்யகுமாருக்கு  பிளஸ். தொகுதியில் நிலவும் மின்வெட்டை மையமாக வைத்தே பிரசாரம் இருப்பதால் மக்களிடம் நன்றாக எடுபடுகிறது.  ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்றே மாதங்களில் மின்வெட்டைச் சமாளிப்போம் என் றார்கள். ஆனால், ஒரு மணி நேரமாக இருந்த மின்வெட்டை 10 மணி நேரமாக அதிகரித்து இருப்பதுதான் அ.தி.மு.க-வின் சாதனை. இந்த இடைத்தேர்தல் மூலம் ஆட்சியாளர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும்'' என்று சூர்யகுமார் மேற்கொள்ளும் பிரசாரத்தை விவசாயிகளும் விசைத்தறித் தொழிலாளர்களும் கூர்மையாகக் கவனிக்​கிறார்கள்.

வாக்காளர்களின் காலில் தொபுக்கடீர் என விழுந்து வாக்கு சேகரிக்கும், ஜவஹர் சூர்யகுமாரின் ஸ்டைலை மக்கள் நன்றாகவே ரசிக்கிறார்கள். மேலும் இவர், காங்கிரஸ் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் என்பதால் கதர் புள்ளி​கள் பலரும் ஆதரவாகத் தொகுதி முழுவதும் வலம் வருவதும் பலம்.

இந்தப் பகுதியின் பொறுப்​பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ''விவசாயிகள் வாழ்வில் வளம் பெறவேண்டும் என்பதற்காக, அப்போதைய மத்திய அரசின் எதிர்ப்பையும் மீறி இலவச மின்சாரத் திட்டத்தைக் கொண்டுவந்தவர் கலைஞர்தான். உழவர்களின் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, உழவர் சந்தை திறக்கப்பட்டது. விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் ரத்து செய்யப்​பட்டதும் தி.மு.க. ஆட்சியில்தான். அதனால், தி.மு.க-வின் கரத்தைப் பலப்படுத்த உதய சூரியனுக்கு வாக்களியுங்கள்'' என்று பேசுவதை விவ சாயிகள் கவனிக்கிறார்கள்.

இதேபோல், தொகுதியில் கணிசமாக வசிக்கும் யாதவ சமுதாய வாக்குகளைக் கவருவதற்காக, முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனைக் களம் இறக்கியுள்ளார்கள். தொகுதியில் இருக்கும் 6,000 இஸ்லாமிய சமுதாயத்தினரின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் தி.மு.க-வின் பக்கம் சேர்க்கும் பணியில் முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் ஈடுபட்டு வருகிறார். ஆட்சியில் இருந்தபோது நடந்த இடைத்தேர்தல்களில் இதே பணியை அவர் கச்சிதமாக செய்து முடித்த அனுபவம் இப்போதும் கைகொடுக்கும் என்று நம்புகிறார்கள்.

மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை அ.தி.மு.க-வில் சேர்த்து, தேர்தல் சமயத்தில் எதிர்முகாமை நிலைகுலைய வைப்பது, ஜெயலலிதாவின் வழக்கமான தேர்தல் உத்தி. ஆனால், அ.தி.மு.க-வைச் சேர்ந்த கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் 200 பேர் இப்போது தி.மு.க-வில் ஐக்கியமாகி இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் மைத்துனரான சூரன்துரை என்பவரும் தி.மு.க முகாமுக்கு அழைத்து வரப்பட்டு இருக்​கிறார். அ.தி.மு.க-வினரைத் தி.மு.க-வின் பக்கம் அழைத்து வந்த முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனின் மகனான வழக்கறிஞர் பிரபாகரனை, அழகிரி நேரில் அழைத்துப் பாராட்டினாராம்.

அ.தி.மு.க-வும் ம.தி.மு.க-வும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே பிரசாரத்தைத் தொடங்கிவிட்டதால் இரு கட்சிகளும் தேர்தல் களத்தில் முன்னிலையில் நிற்கின்றன. தேர்தல் களத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் தி.மு.க, கடைசிக் கட்டப் பிரசாரத்தில் முன்னிலை பெறும் என்பது தொண்டர்களின் நம்பிக்கை. வரும் 15-ம் தேதி சங்கரன்கோவிலில் கருணாநிதி பங்கேற்கும் பொதுக்கூட்டம், தொகுதி மக்களின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

ஸ்டாலின் மூன்று நாட்கள் தொகுதிக்குள் வலம் வருவது தி.மு.க-வுக்குப் பலம் சேர்க்கும். ஏற்கெனவே, தி.மு.க-வின் நட்சத்திரப் பட்டாளமான குஷ்பு, குமரிமுத்து, வாகை சந்திரசேகர் ஆகியோருடன் மத்திய இணை அமைச்சரான நெப்போலியனும் பிரசாரம் செய்கிறார். அரசைக் கடுமையாக விமர்சித்து இவர்கள் பேசுவதை, கிராமத்து மக்கள் ரொம்பவே ரசிக்கிறார்கள்.

ம.தி.மு.க-வுக்கு இருக்கும் ஏரியா ஆதரவு, தே.மு.தி.க. பிரிக்கப்போகும் வாக்குகள் போன்

ற​வை கவலையை உண்டாக்கினாலும், மின் வெட்டு கை கொடுக்கும் என்ற நம்பிக்கை தி.மு.க-வினரிடம் அதிகமாகவே இருக்கிறது.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism