Published:Updated:

மிஸ்டர் கழுகு: வராத மந்திரிகள்!

மிஸ்டர் கழுகு: வராத மந்திரிகள்!

மிஸ்டர் கழுகு: வராத மந்திரிகள்!

மிஸ்டர் கழுகு: வராத மந்திரிகள்!

Published:Updated:
மிஸ்டர் கழுகு: வராத மந்திரிகள்!

பெங்களூரு போய் வந்தார் கழுகார். அதில்தான் ஆரம்பமானது முதல் பாரா! 

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கின் விசாரணை நடந்து வரும்போது வக்கீல்கள் - பத்திரிகையாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை சசிகலா குருப் நன்றாகவே ரசிக்கிறது. 'ஏதாவது காரணத்தால் கோர்ட் நடவடிக்கைகள் தள்ளிப்போனால் நல்லது’ என்று சசி கலா நினைக்கிறார். மோதல் சம்பவம் நடந்தபோது இவர்களுடன் மூன்று தமிழக போலீஸ் அதிகாரிகளும் இருந்தார்கள்!'' என்றார் கழுகார்!

''யார் அந்த மூவர்..?'' என்றோம்!

''லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி-யான குணசீலன், இதே துறையைச் சேர்ந்த டி.எஸ்.பி. ஒருவர், மூன்றாவது அதிகாரி - தர்மபுரி மாவட்டத்தில் பணிபுரியும் உளவுத் துறை இன்ஸ்பெக்டர்... இந்த மூவரும் கலவரம் நடந்த அன்று மட்டும் அல்ல... அதற்கு முன்பு நடந்த விசாரணையின் போதுகூட, அங்கேதான் அமர்ந் திருந்தார்களாம். சொத்துக் குவிப்பு வழக்கு விஷயமாக பெங்களூருவில் தனித்தனி இடங்களில் தங்கியிருந்தபடி, கோர்ட் நடவடிக்கைகளை அன்றாடம் கவனித்து வருகிறார்களாம். சொத்துக்குவிப்பு வழக்கை கடந்த தி.மு.க. ஆட்சியில் கவனித்து வந்தவர் ஐ.ஜி-யான துக்கையாண்டி. அவரை மாற்றிவிட்டு, இந்த ஆட்சியில் அதே பதவியில் ஐ.ஜி-யான குணசீலனை நியமித்து இருக்கிறார்கள். இந்த மூவரையும் யாரென்று தமிழகப் பத்திரிகையாளர்களுக்கு சரியாகத் தெரியாததால், அவர்கள் கண்ணில் படாமல் தப்பித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில், திருவான்மியூரில் இருக்கும் பாம்பன் சுவாமிகள் சமாதிக்கு சசிகலா தனது பரிவாரங்களுடன் வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்!''

''அப்படியா?''

''அமாவாசை, பௌர்ணமி தினங்களில் அவரை அங்கு பார்க்கலாம். ஆனால், சுடிதாரில் வருகிறார் என்பதுதான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது!''

''ஓஹோ!''

''கொஞ்ச நாள் ஓய்ந்துகிடந்த மொட்டை பெட்டிஷன் கலா சாரம் ஐ.பி.எஸ். வட்டாரத்தில் மீண்டும் ஆரம்பித்து விட்டது. 1980-ம் வருட பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரிகள் நால்வர் தற்போது கூடுதல் டி.ஜி.பி. அந்தஸ்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு  கடந்த ஜனவரி முதல் படிப்படியாக டி.ஜி.பி. அந்தஸ்தை மாநில அரசு வழங்கி இருக்கலாம். ஆனால், ஏனோ இதுவரை வழங்காமல் இருக்கிறது. இப்போதைய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி (பொறுப்பு) மற்றும் உளவுத்துறைத் தலைவர் பதவியில் உள்ள ராமானு​ஜம் கூட இதை ஏன் செய்ய முயற்சிக்காமல் இருக்கிறார் என்பது​தான் அந்தக் கடிதத்தில் எழுப்பப்பட்டு இருக்கும் கேள்வி.''

''ஏன் அதை ராமானுஜம் செய்யவில்லை?''

''தமிழக போலீஸ் துறையில் இந்த ஆண்டு இறுதிக்குள் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள லத்திகா சரண் (மார்ச்), ஷியாம் சுந்தர் (ஏப்ரல்), விஜயகுமார் (செப்டம்பர்), ராமானுஜம் (நவம்பர்) ஆகிய நால்வரும் அடுத்தடுத்து ஓய்வு பெறப்போகிறார்கள். பொதுவாக, உயர் பதவிகளில் இருப்பவர்கள் ஓய்வு பெற ஆறு மாதங்கள் இருந்தாலே, ஜூனியர்களுக்குப் பதவி உயர்வு அளிக்கலாம். அந்த வகையில், 1980 பேட்ச் அதிகாரிகள் விஷயத்தில் மாநில அரசு அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்காததற்கு வேறு ஏதோ பாலிடிக்ஸ் இருப்பதாக ஐ.பி.எஸ். வட்டாரத்தில் பேச்சு.''

''அதில் என்ன பாலிடிக்ஸ்?''

''செப்டம்பருக்கு பிறகு சீனியாரிட்​டியில் ராமானுஜம்தான் லிஸ்ட்டில் 'டாப்'புக்கு வருவார். அப்போது, 'பொறுப்பு' என்கிற அந்தஸ்து மாறி, சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி-யாகவே அவர் அமரலாம். ஓரிருவர் இவருக்கு மேலே இருந்தாலும், மாநில அரசின் கருணைப் பார்வை ராமானுஜத்துக்கே அதிகம் இருக்கிறது. மாநில அரசு மனது வைத்தால், ராமானுஜத்தை சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி. பதவியிலேயே இரண்டு ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பும் தரலாம். அதை அவர் ஏற்றுக்​கொள்வாரா? மறுப்பாரா? என்பது வேறு விஷயம்!''      

''இதெல்லாம் நடக்குமா?''

''அது தெரியாது! மொட்டைக் கடிதங்களில் இன்னொரு விஷயமும் வருகிறது. 'எம். நடராஜன், எம். ராமச்சந்திரன், எம்.பழனிவேல் ஆகி​யோரின் பரிந்துரைப்படி நியமிக்கப்​பட்ட அதிகாரிகள் சிலர் அப்படியே இருக்கிறார்கள். மன்னார்குடி திவாகர​னுக்குக் கைது நியூஸை முன்கூட்டியே சொன்னதே இந்த அதிகாரிகள் டீம் தான். அவர்களை இன்னமும் எப்படி வைத்துக்கொண்டு இருக்​கிறீர்கள்?’ என்று கேட்கிறதாம் அந்தக் கடிதம்!''

''எல்லாவற்றுக்கும் நேர காலம் வேண்டாமா?'' என்று நாம் கேட்க, டிராக் மாறினார் கழுகார்.

''மின்வெட்டு காரணமாக ஆளும் கட்சி மீது சங்கரன்கோவில் தொகுதி மக்களிடம் இருக்கும் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த ஒவ்வொரு கட்சியும் தீவிரமாகப் பாடுபடுகிறது. சேர்ந்தமரம் பகுதியில் ம.தி.மு.க-வின் பொறுப்பாளராக செயல்பட்டு வரும் ஜோயல், அந்தப் பகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் பிளாஸ்டிக் விசிறி விநியோகித்து வருகிறார். 'இந்த ஆட்சியில் மின் விசிறி குடுத்திருக்காங்க. ஆனா, மின்சாரம் குடுக்கலை. அதனால் வெயிலின் புழுக்கத்தை சமாளிக்க இந்த

மிஸ்டர் கழுகு: வராத மந்திரிகள்!

விசிறியை வச்சுக்குங்க. மறக்காம எங்களுக்கு பம்பரம் சின்னத்தில் வாக்களியுங்கள்’ என அவர் பிரசாரம் செய்கிறார்.''

''கிண்டல் பண்றதுக்கு அரசியல்வாதிகளுக்குச் சொல்லித்தர வேண்டுமா?''

''பட்ஜெட்டுக்கு முந்தைய துறை வாரியான ஆய்வுக் கூட்டத்தை பிப்ரவரி கடைசி வாரத்தில் தொடங்கி நடத்தி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. இதில், 21-ம் தேதி நடந்த செய்தி, தமிழ் வளர்ச்சித்துறை ஆய்வுக் கூட்டத்தில் ஐந்து அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 28-ம் தேதியன்று வணிகவரித் துறை அமைச்சர் சண்முகம், மார்ச் 1-ம் தேதி பொதுப்பணி, நெடுஞ்சாலை ஆகிய துறைகளின் ஆய்வுக் கூட்டங்களில் அமைச்சர்கள் ராமலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக இருக்கும் அமைச்சர்கள் எல்லாரும், அம்மாவின் உத்தரவுப்படி மார்ச் 5-ம் தேதியன்று அமைச்சரவைக் கூட்டத்துக்காக மட்டும் சென்னைக்கு வந்தனர். அன்றே எல்லாரும் பேக்கப் டு சங்கரன்கோவில்!

அதன்பிறகு 9-ம் தேதி போக்குவரத்து, வனம் ஆகிய துறைகளிலும், 11-ம் தேதி கைத்தறித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் முதல்வர் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இவற்றில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் யாரும் பங்கேற்கவில்லை. 'அரசியல் கட்சி என்றால் தேர்தல் முக்கியம்தான், அதற்காக, இப்படியா செய்வது? தமிழக அரசு வரலாற்றில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தது இல்லை’ என்று பொருமுகிறார்கள் கோட்டை அதிகாரிகள்'' என்ற கழுகார் கடைசியாக டாக்டர் ராமதாஸ் விஷயத்தைக் கையில் எடுத்தார்.

''டாப் கியர் எடுத்து இருக்கிறது அமைச்சர் சி.வி.சண்முகத்தின் உறவினர் கொலை வழக்கு விசாரணை. இதில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸை மையமாகச் சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள்.அடுத்து யார் யாரையெல்லாம் விசாரணை வளையத்தில் சி.பி.ஐ சிக்க வைக்குமோ... சிறைக்கு அனுப்புமோ என்று பா.ம.க. வட்டாரம் பதைபதைப்பில் இருக்கிறது. கடந்த மூன்று வருடங்களாக நடக்காமல் இருந்த பா.ம.க. இளைஞர் மாநில மாநாடு, வரும் மே மாதம் 5-ம் தேதி மாமல்லபுரத்தில் நடக்க இருக்கிறது. இதுதொடர்பான பிரசாரங்கள் மாவட்டம் தோறும் இப்போது நடந்து வருகிறது. அது சம்பந்தமாக கடந்த 8-ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி சென்றிருந்த ராமதாஸ், அங்கு இருந்து அன்று இரவே சென்னை சென்று, சி.பி.ஐ. விசாரணை சம்பந்தமாக தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினாராம். '11-ம் தேதி காலை தனது கட்சித் தொண்டர் ஒருவரின் திருமணத்தை சுமார் 9 மணிக்கு முடித்துக் கொண்டு தனது மகள் வீட்டுக்கு வந்த ராமதாஸ், மகளின் காரில் டிரைவருடன் புறப்பட்டார். எப்போதுமே தனது உதவியாளர் இல்லாமல் எங்கும் செல்லாத ராமதாஸ், அன்று மட்டும் எங்கு சென்றார் என்று பரபரப்பு ஏற்பட்டது. அவர் சென்ற கார் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டு, ராமதாஸ் மட்டும் சி.பி.ஐ. போலீஸாரால் சாஸ்திரி பவனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். அங்கு வைத்து, மாலை 4 மணி வரை மருத்துவர் ராமதாஸிடம் சி.பி.ஐ. போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தி இருக்கின்றனர்.’ என்று உள் விவரங்கள் அறிந்த வட்டாரம் சொல்கிறது. ஆனால், இதை சி.பி.ஐ. மற்றும் பா.ம.க. வட்டாரங்கள் உறுதிப்படுத்தாததன் பின்னணிதான் தெரியவில்லை!'' என்று சொல்லிச் சென்றார் கழுகார்!

படங்கள்: சு.குமரேசன், என்.விவேக்

ரெய்டில் சிக்கிய பிரமோத் குமார்!

ஆயுதப்படை ஐ.ஜி-யான பிரமோத் குமாரின் சென்னை வீடு மற்றும் பீகாரில் உள்ள அவரது பூர்வீக வீடுகளில் மார்ச் 12-ம் தேதி திடீரென ரெய்டு நடத்தி இருக்கிறது சி.பி.ஐ.  

1,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடிப் புகாரில் சிக்கிய திருப்பூர் பாசி என்ற நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை முறையாகக் கைது செய்யாமல், அவர்களிடம் காசு கறப்பதில்தான் போலீஸார் குறியாக இருந்திருக்கிறார்கள். நிதி நிறுவனத்தினர் கடைசியில்  கோர்ட் படி ஏறினார்கள். கோர்ட் உத்தரவின்படி, இந்த விவகாரத்தை விசாரிக்கும் பொறுப்பு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

'முன்பு, மேற்கு மண்டல ஐ.ஜி-யாக இருந்த பிரமோத் குமார், ஒரு டி.எஸ்.பி. மற்றும் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் ஆகிய நால்வர்தான் அதிகமாகத் தொந்தரவு செய்தார்கள்’ என்று, சி.பி.ஐ. கண்டுபிடித்தது. இதனால் பெற்ற ஆதாயங்களைக் கொண்டு வாங்கப்பட்ட சொத்துக்களை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளதாம். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்த திடீர் ரெய்டு என்கிறார்கள்.

இவர்களைத் தவிர மீடியேட்டர் ஒருவரும் விரைவில் சிக்கப்போகிறார். போலீஸுக்கும் பாசி நிறுவனத்தினருக்கும் இடையே மீடியேட்டராகச் செயல்பட்டவரை, 'அண்ணாச்சி’ என்று செல்லமாக அழைக்கிறார்கள். . வெளிநாடு ஒன்றின் கௌரவத் தூதர் என்கிற அந்தஸ்துடன் தமிழகத்தில் நடமாடி வரும் இவரிடம் போலீஸ் துறை சார்பில் மாறுதல்கள், பதவி உயர்வுகள் என்று எதைச் சொன்னாலும், உடனே அந்தக் காரியம் நடக்குமாம். தமிழகத்தில் உள்ள அரசியல் வி.ஐ.பி-கள், அதிகாரிகள் என்று அனைத்துப் பிரிவிலும் ரகசியத் தொடர்பு வைத்திருந்த அண்ணாச்சியைக் காப்பாற்ற பலரும் முயற்சி எடுத்து வருகிறார்களாம்.

பாடகர் கிடைச்சாச்சு!

மிஸ்டர் கழுகு: வராத மந்திரிகள்!

மறைந்த அமைச்சர் கருப்பசாமி, எங்கு மேடை கிடைத்தாலும் ஜெயலலிதா புகழ் பாடி கலகலப்பு மூட்டுவார். அந்த இடத்தை ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் கைப்பற்றிவிடுவார் போலிருக்கிறது. கடந்த 7-ம் தேதி, தனது தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை தடபுடலாகக் கொண்டாடினார் வெற்றிவேல். நிகழ்ச்சியில், தேனிசைத் தென்றல் தேவாவின் கச்சேரியும் இருந்தது. கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்து இருந்த வெற்றிவேலை, மேடைக்கு தேவா அழைக்க மிகவும் சங்கோஜத்துடன் மேடை ஏறினார். 'உங்களுக்கு ஆடத் தெரியுமா... பாடத் தெரியுமா?’ என்று தேவா கலாய்க்க... சட்டென மைக்கை எடுத்து, 'தங்கத் தாரகையே வருக... இந்த மண்ணின் தேவதையே வருக..’ என்ற  'அம்மா’ புராணப் பாடலை முழுமையாகப் பாடிவிட்டே மேடையை விட்டு இறங்கினார்.

மிஸ்டர் கழுகு: வராத மந்திரிகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism