Published:Updated:

ஜெயலலிதா மீது கருணாநிதி 2 அவதூறு வழக்குகள்!

விகடன் விமர்சனக்குழு

சென்னை, ஏப்.21,2011

தனது பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்தில் பொய் அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா  2 அவதூறு வழக்குகளை முதல்வர் கருணாநிதி தொடர்ந்துள்ளார். ##~~##

ஜெயலலிதா மீது கருணாநிதி தரப்பில் சென்னை நகர குற்றவியல் அரசு வக்கீல் ஷாஜகான் 2 அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

அதில், முதல்வர் கருணாநிதி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் இருக்கிறார். 6-வது முறையாக முதல்வர் பொறுப்புக்கு வருவதற்கு மக்கள் முடிவுக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார். அவரைப் பற்றி மக்கள் மத்தியில் மிகுந்த மரியாதையும், நன்மதிப்பும் உள்ளது.

இந்த நிலையில் 13.4.11 தேதியிட்ட நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் முதல்வர் கருணாநிதி மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகளை அவதூறு செய்யும் வகையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை அச்சிடப்பட்டுள்ளது. அ

தற்கு, 'வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு அதை பயன்படுத்தி கள்ள ஓட்டுபோட மத்திய-தமிழக அதிகாரிகள் குழு, சட்டம்-ஒழுங்கை காக்கும் அதிகாரிகளே வன்முறைக்கு துணைபோவது கண்டிக்கத்தக்கது' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானதும், அடிப்படை ஆதாரமற்றதும் ஆகும். இந்த அறிக்கையால் மக்கள் மத்தியில் உள்ள அவரது நன்மதிப்பு கெடுகிறது. ஜெயலலிதாவின் அறிக்கையால், மக்கள் மத்தியிலும், அரசு அதிகாரிகள் மத்தியிலும் குழப்பத்தையும், கடமை பற்றிய சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

தேர்தலின்போது மக்கள் மத்தியில், முதல்வர் கருணாநிதியின் பெயருக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே அப்படிப்பட்ட அவதூறான குற்றச்சாட்டை வேண்டுமென்றே ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

இந்த அவதூறான அறிக்கை வெளியானதும் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் உட்பட பலர் முதல்வர் கருணாநிதியிடம் பேசி, மக்கள் மத்தியிலும், தி.மு.க.வினர் மத்தியிலும் அவப்பெயரை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். இந்த அறிக்கையாலும், அதனடிப்படையில் பலர் தெரிவித்த கருத்துக்களாலும் அவருக்கு மிகுந்த மனவேதனை ஏற்பட்டது.

பழிவாங்கும் நோக்கத்திலும் இப்படி ஒரு அறிக்கையை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். அவதூறு ஏற்பட வேண்டும் என்ற உள்நோக்கத்தின் அடிப்படையிலும், முதல்வர் கருணாநிதியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பது தெரிந்தும் விடப்பட்ட அறிக்கை அது.

எனவே இந்திய தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் ஜெயலலிதா தண்டனைக்கு உகந்தவர். இவர்மீது வழக்கு தொடர்வதற்கு தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை 19.4.11 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வழக்கை ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தி ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்க வேண்டும்.

மேலும், ஜெயலலிதா கூறிய மற்றொரு அவதூறான கருத்தும் நாளிதழ் ஒன்றில் 14.4.11 அன்று வெளியிடப்பட்டது. தேர்தல் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்கள் எந்தவொரு வேலையும் இல்லாமல் வெறுமனே நிற்பதால், அவர்களுக்கு தேர்தல் பணிக்கான தினப்படி ரூ.300 கொடுப்பது வீண் என்றும், இதை கொடுக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் தலைமைச் செயலாளர் கூறியதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக ஜெயலலிதா தெரிவித்தார் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுவும் ஆதாரமற்ற, பொய்யான குற்றச்சாட்டாகும். இதனால் முதல்வர் கருணாநிதிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கான தேர்தல் பணிக்கான படியை முதல்வர் கருணாநிதி குறைத்ததாக ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டு குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் பதிலளித்தார்.

ஜெயலலிதா கூறியதுபோல், முன்னாள் ராணுவத்தினருக்கான படியை குறைத்ததற்கு முதல்வர் கருணாநிதி காரணமல்ல. நான்தான் அந்த படித்தொகையை குறைத்த குற்றவாளி என்று அவர் பேட்டி அளித்தார். பிரவீண்குமாரின் பேட்டி தேர்தலுக்குப் பிறகு 14.4.11 தேதியிட்ட ஆங்கில நாளிதழில் வெளிவந்தது.

தேர்தலை முன்னிட்டு இதுபோன்ற அவதூறான அறிக்கைகளை ஜெயலலிதா வெளியிட்டு முதல்வர்  கருணாநிதிக்கு மக்கள் மத்தியிலும், முன்னாள் ராணுவத்தினர் மத்தியிலும் களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்த அறிக்கையால் முதல்வர் கருணாநிதி மிகுந்த வேதனை அடைந்தார்.

இந்த அவதூறான அறிக்கையை வெளியிட்டதால் ஜெயலலிதாமீது இந்திய தண்டனைச் சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, தண்டனை விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வருகிறது.