Published:Updated:

குடும்ப முன்னேற்ற கழகமா?-காரத்துக்கு முதல்வர் பதில்

குடும்ப முன்னேற்ற கழகமா?-காரத்துக்கு முதல்வர் பதில்

சென்னை, ஏப்.21,2011

குடும்ப முன்னேற்ற கழகமா?-காரத்துக்கு முதல்வர் பதில்

திமுகவை 'குடும்ப முன்னேற்றக் கழகம்' என்று விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்துக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கம்யூனிச கொள்கை மீது என்னை கவர்ந்த அம்சங்கள் பல இருக்கிறது. இதை அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கிறேன். ஆனால் நான் வியப்படைந்து, விழி கலங்கும் நிலையில் படித்த ஒரு செய்தி, பிரகாஷ் காரத் பெயராலேயே 'தீக்கதிர்' ஏட்டில் வெளிவந்திருப்பதைப் பார்த்து, திகைத்து திடுக்கிட்டேன். ##~~##

அந்த ஏட்டில் என்னைப் பற்றியும், என் தலைமையில் உள்ள கழகத்தைப் பற்றியும் இழிமொழிகள், ஏசல் மொழிகள் வெளிவருவது வழக்கம் தான் என்றாலும், அந்த வழக்கத்துக்கு மாறாக இந்தச் செய்தியின் கர்த்தாவாக நண்பர் பிரகாஷ் காரத் இருப்பது தான் என்னை திடுக்கிட செய்த ஒன்றாகும்.

"மாநில சுயாட்சி மற்றும் மத்திய - மாநில உறவுகளுக்கு குரல் கொடுத்த கட்சிகளில் முன்னோடியாக விளங்கியது தி.மு.க. அத்தகைய பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சி மிகவும் தரம் தாழ்ந்து இன்றைய தினம் ஒரு குடும்ப முன்னேற்ற கழகமாக மாறி, கொள்ளையடித்த பணத்தை தேர்தலிலும் பயன்படுத்தி, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயல்வதைப் பார்க்கும்போது, மிகவும் பரிதாபமாக இருக்கிறது"

இந்த வரிகள் பிரகாஷ் காரத்தால் கூறப்பட்டவை. அவரது இந்த கூற்றுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்து குடுமி பிடி சண்டையில் ஈடுபட நான் விரும்பவில்லை. ஏனெனில் மூன்றாண்டுகளுக்கு முன்பு கூட அவரும், அவருடன் சில கம்யூனிஸ்ட் கட்சி தளபதிகளும் சென்னையில் என் வீட்டிற்கே வந்து கொள்கை அடிப்படையிலான பல கருத்துக்களையும், இந்திய தேசிய அடிப்படையிலான பல கருத்துக்களையும், காங்கிரஸ் கட்சியுடன் உறவு உண்டா இல்லையா - இனியும் நீடிக்குமா என்பன போன்ற பல கருத்துக்களையும், அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் போன்ற கருத்துக்களையும் மணிக் கணக்கில் உரையாடி விவாதித்திருக்கிறோம்.

ஆனால் அந்த சமயங்களில் என் இதயத்தில் நல்லதோர் இடத்தை பெற்றிருந்த அந்த நண்பர் காரத் இப்போது ஏன் இத்தகைய நச்சு நினைப்பினர் ஆனார் என்பது தான் எனக்கு புரியவில்லை. என்றாலும் நாம் கட்டிக் காத்து வரும் அண்ணா வழி, பெரியார் வழி பண்பாட்டு சங்கிலியில் ஒரு கரணை கூட தேய்ந்து அறுந்து விடாத அளவுக்கு அந்த நண்பரோடு பழகி வந்திருக்கிறேன்.

ஆனால் கம்யூனிஸ்ட் ஏட்டில் இந்த வாசகங்கள் அவர் பெயரால் வெளி வந்த பிறகு "அவரா இவர்?" என்ற கேள்விக்கு பதில் காண முடியாமல் துடித்துத்தான் போகிறேன்.

அவர் எழுப்பியுள்ள "குடும்ப முன்னேற்றக் கழகம்" என்ற குற்றச்சாட்டுக்கு அவரோடு இணைந்து இயக்க பணியாற்றும் பிருந்தா காரத்தே விடையாகவும், விளக்கமாகவும் விளங்கும்போது அந்த குற்றச்சாட்டை தவிர்த்து - "ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முயல்வதை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது" என்று அவர் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு மாத்திரம் பதில் சொல்ல விரும்புகிறேன்.

ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள கருணாநிதி முயலுவதை பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கிறது என்கிறார் அந்த நண்பர்.

கொள்கை அடிப்படையில் நானும், என் தலைமையில் உள்ள கழகமும் விடாப்பிடியாக இருந்து இலங்கை பிரச்னையிலும் - மத்திய மாநில உறவுகள் பிரச்னையிலும் - "நெருக்கடி கொடுமைக்கு ஈடுகொடுத்து இந்தியாவிலேயே சுதந்திர காற்றை சுவாசிக்கும் இடம் தமிழ்நாடு தான்" என்று தோழர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டே சென்னை கூட்டத்தில் பாராட்டிய அளவுக்கு - நானும், என் தலைமையிலே உள்ள கழகமும் நிமிர்ந்து நின்றபோது அதைப் பார்க்காமல் இருந்து விட்டாரே - அல்லது பார்த்தும் இப்போது அதை மறந்து விட்டாரே "காரத்" என்பதை நினைக்கும்போது தான் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது," என்று கருணாநிதி கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு