Published:Updated:

மலையகத் தமிழர்களின் இரு நூற்றாண்டு சோகம்..கண்டுகொள்ளுமா தமிழக‌ அரசு?

மலையகத் தமிழர்களின் இரு நூற்றாண்டு சோகம்..கண்டுகொள்ளுமா தமிழக‌ அரசு?

மலையகத் தமிழர்களின் இரு நூற்றாண்டு சோகம்..கண்டுகொள்ளுமா தமிழக‌ அரசு?

மலையகத் தமிழர்களின் இரு நூற்றாண்டு சோகம்..கண்டுகொள்ளுமா தமிழக‌ அரசு?

மலையகத் தமிழர்களின் இரு நூற்றாண்டு சோகம்..கண்டுகொள்ளுமா தமிழக‌ அரசு?

Published:Updated:
மலையகத் தமிழர்களின் இரு நூற்றாண்டு சோகம்..கண்டுகொள்ளுமா தமிழக‌ அரசு?
மலையகத் தமிழர்களின் இரு நூற்றாண்டு சோகம்..கண்டுகொள்ளுமா தமிழக‌ அரசு?

தோழர் பெ.முத்துலிங்கம் - இலங்கையின் மிக முக்கிய அரசியல் விமர்சகர். தமிழ்,ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகளிலும் அரசியல், சமூகம், இலக்கியம் குறித்து மூன்று தசாப்தங்களாக‌ எழுதி வரும் வர்க்க எழுத்தாள‌ர். ஆய்வரங்க பேச்சாளர். சமூக செயற்பாட்டாளர். 18-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் தலை விரித்தாடிய பஞ்சத்திற்கும் ,சாதிய கொடுமைகளுக்கும் அஞ்சி பரதேசிகளாய் கடல் கடந்து இலங்கையின் தேயிலைக் காடுகளுக்கு தொழிலாளிகளாக போன லட்ச கணக்கான அடிமைத் தமிழர்களின் துயர‌ வாழ்வை 'தேயிலைத் தோட்ட தொழிலாளர் அருங்காட்சியகம்' என்ற பெயரில் இலங்கையில் 'புஸால்லவ' நகரத்தில் அரும்பாடு பட்டு உருவாக்கி இருக்கிறார்.

உலகிலே தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் முதல் அருங்காட்சியகம் இதுதானாம்.தேயிலை செடிகளுக்கு அடியிலே புதைக்கப்ப‌ட்ட மலையகத் தமிழர்களின் சிக்கல்களை, இலங்கை தீவை தாண்டி உலகின் பார்வைக்கு கொண்டு செல்லும் முத்துலிங்கம், சமீபத்தில் பெங்களூரு வந்திருந்தார். ஓர் பனி விழும் இளங்காலை பொழுதில் சந்தித்தேன். பனிக்காடு எரிந்தது!

ஓர் நடுநிலையான அரசியல் விமர்சகராக சொல்லுங்கள். இலங்கை எப்படி இருக்கிறது?

''காங்கேசன் துறையில் ஆரம்பித்து காலி வரை இலங்கை முழுவதும் ராணுவமே வியாபித்திருக்கிறது. எங்கெங்கும் ராணுவ உடைகளும் துப்பாக்கிகளும் காட்சியளிப்பதாலே ஒருவித அச்ச உணர்வு மக்கள் மத்தியில் விதைக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏற்றம், வறுமை, வேலையில்லா திண்டாட்டம் இனம் மொழி பாகுபாடில்லாமல் ஒட்டுமொத்த இலங்கையரையும் வாட்டி வதைக்கிறது. ராஜபக்சேவின் சகோதரர்கள், மகன்கள் என ஒட்டுமொத்த குடும்பமும் அரசியலை ஆக்கிரமித்து இருப்பதால் சர்வமும் அவர்கள் விருப்பப் ப‌டியே நடக்கிறது. 'பயங்கரவாதம்' என்று சொல்லி சொல்லி இனவாதத்தை திட்டமிட்டு வளர்க்கிறார்கள்.

'எந்நேரமும் எதுவும் நடக்கலாம்' என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் இயல்பான ஒன்றாகி விட்டது. இது போதாது என்று தமிழக அரசியல்வாதிகள் விடுதலை புலிகள் குறித்து கட்டவிழ்த்து விடும் புரட்டுகளை தமிழ் மக்கள் நம்புகிறார்களோ இல்லையோ, சிங்கள இனவாதிகளும், பௌத்த பிக்குகளும் உடும்புப் பிடியாக பிடித்து கொள்கிறார்கள். இதனையே காரணம் காட்டி சிங்கள மக்களை மீண்டும் தமிழர்களுக்கு எதிராக திருப்பி விடுகிறார்கள்.''

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களின் இன்றைய வாழ்க்கை நிலை எப்படி இருக்கிறது?

''இலங்கை தீவில் வாழக்கூடிய  மற்ற இன மக்களை காட்டிலும் எம்மக்கள் இன்னமும் பின் தங்கிய நிலையிலே தேயிலை பெருந்தோட்டங்களில் அட்டை கடிகளுக்கு மத்தியில் அவதிப்படுகிறார்கள். 180 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட 8 க்கு 8 அடி அளவுடைய பொத்தலான 'லயன்' வீடுகளிலே வாழ்கிற அவலம் இன்றும் தொடர்கிறது. முறையான கல்வி வசதி, போக்குவரத்துவசதி, கழிப்பிட வசதி.. ஏன் சில தோட்டங்களில் கல்லறை கூட இல்லாமல் தவிக்கிறார்கள். ஏறத்தாழ 180 ஆண்டுகளுக்கு மேலாக தோட்டங்களில் வேலை செய்தாலும் இன்னமும் கூலிகளாகவே நடத்தப்படுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் கடும் பனியிலும், குலவி கடியிலும், அட்டை கடியிலும் கஷ்டப்படும் எம் மக்களுக்கு முறையான கூலி கூட தோட்ட நிர்வாகங்கள் வழங்குவதில்லை. நாட்டின் அபிவிருத்தியில் தேயிலையின் மூலமாக மட்டும் 60% அந்நிய செலாவணியை ஈட்டி தரும் எம்மக்களுக்காக பட்ஜெட்டில் 10% சதவீத பணம் கூட ஒதுக்குவதில்லை. இதனால் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் மற்ற இன மக்களை காட்டிலும் மூன்று தலைமுறைகள் பின் தங்கியவராக இருக்கிறார்கள். இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக சிலர் படித்து, தோட்டங்களை விட்டு வெளியே வேலைகளுக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலை மாற இன்னும் இரண்டு தசாப்தங்கள் தேவைப்படலாம்!"

'ஏறத்தாழ 200 ஆண்டுகளாக இலங்கையில் குடிமக்களாக வாழும் மலையகத் தமிழர்களிடம் இந்தியா குறித்த சிந்தனைகள் இன்னமும் இருக்கிறதா?

''இந்தியா குறித்த சிந்தனைகள் இல்லாமல் இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் பார்த்தால் முன்பை காட்டிலும் இப்போது குறைந்து இருக்கிறது. அதற்கு காரணம் 'ஈழத்தின் பெரியார்' என்று அழைக்கப்பட்ட நாவலர் இளஞ்செழியன்தான். 'இலங்கை தான் உன் நாடு. இங்கு இருப்பவர்கள்தான் உனக்கு தலைவர்கள். அண்ணாவும், கருணாநிதியும் மட்டும் தலைவர்கள் அல்ல'' என இலங்கை திமுக கூட்டங்களில் அழுத்தமாக  பதிவு செய்திருந்தார். நான் சிறுவனாக இருந்த போதெல்லாம் எல்லா வீடுகளிலும் அம்பேத்கர், நேரு, சுபாஷ் சந்திர போஸ், காந்தி உள்ளிட்ட தலைவர்களின் படங்கள் இருக்கும். இப்போது அதெல்லாம் இல்லை. ஆனால் வயதான மலையக தமிழர்கள் மத்தியில் சாவதற்கு முன் ஒரு முறையாவது அன்னை பூமியான தாய்த் தமிழகத்தையும், அங்குள்ள அவர்களது இரத்த உறவுகளையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆச்சர்யமாக சில இடங்களில் இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததற்காக கொண்டாட்டங்களில் ஈடுபட்டு சிங்களவனிடம் அடிவாங்கிய சம்பவங்களும் இருக்கவே செய்கிறது!"

உரிமைக்காக போராடும் வடகிழக்கு தமிழர்கள்,உணவிற்காக போராடும் மலையகத் தமிழர்கள் இரு வேறுபட்ட தமிழர் சிக்கலை இலங்கை அரசு எப்படி பார்க்கிறது?

''இலங்கை அரசும், சிங்களவர்களை பொறுத்த வரையும் ஒட்டுமொத்தமாக அனைவரையும் தமிழர்களாக பார்க்கிறார்கள். இனவாதம், பாகுபாடு, ஒடுக்குமுறை, மாற்றாந்தாய் மனப்பாங்கு மலையக தமிழர்கள் மீதும் திட்டமிட்டு பாய்ச்சப்படுகிறது. காடாய் இருந்த இலங்கையை எஸ்டேட், ரயில் பாதை, பாலங்கள், அணைகள் என தங்களின் உழைப்பால் நாடாக்கிய எங்கள் மூதாதையரை நாடவற்றவர்களாக்கி, இந்தியாவிற்கு ஏதிலிகளாக அனுப்பியது. இந்திய அரசும் தாயகம் திரும்பிய எங்களது உறவுகளை பாதுகாக்க தவறியது. இன்றைக்கும் கோத்தகிரி, கூடலூர் பகுதிக்கு போனால் ரத்த கண்ணீரே வந்து விடுகிறது.

வடகிழக்கில் உரிமைக்காக போராட ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை அவர்கள் மீதுள்ள கோபத்தை சிங்கள மக்கள் மத்தியில் வாழும் எம்மக்களைதான் குறி வைத்து தாக்குவார்கள். கறுப்பு ஜூலையில் ஆரம்பித்து இதுவரை இலங்கையில் அத்தனை இன கலவரத்திலும் மலையகத்தமிழர்களே அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மலை மீது வாழ்ந்தாலும் எங்களது ஓலக் குரல் இன்னமும் உலகின் செவிகளுக்கு போய் சேரவே இல்லை!''

'நீங்கள் உருவாக்கி இருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர் அருங்காட்சியக உருவாக்கத்தில் நீங்கள் சந்தித்த சவால்களை பற்றி சொல்லுங்கள்?

''தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக உலகத்திலே முதல்முறையாக உருவாக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் இது தான். கிட்டத்தட்ட 20 ஆண்டின் கடும் உழைப்பு இதன் உருவாக்கத்தில் இருக்கிறது. 'இந்தியாவில் இருந்து அடிமைகளாக எம்மக்கள் எப்படி கொண்டு வரப்பட்டார்கள், அவர்கள் கடந்து வந்த பாதை, அனுபவித்த வலிகள், பயன்படுத்திய பழைய பித்தளை பொருட்கள், இசைக் கருவிகள், அணி கலன்கள், உள்ளிட்ட அனைத்தும் ஆவணங்களாக்கப்பட்டிருக்கிறது. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் எம்மக்கள் புலம்பலோடு வாழ்ந்த 'லயன்' வீட்டிலே முழுவதையும் அமைத்திருக்கிறோம். பல நாடுகளில் இருந்தும் வரும் பார்வையாளர்கள் பார்த்து விட்டு, உடல் சிலிர்த்து கண்ணீரோடும், கனத்த இதயத்துடனுமே செல்கின்றனர். இதன் உருவாக்கத்தில் என்னுடைய உழைப்பு, தியாகம் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த மலையக மக்களின் தியாகமும்,அர்ப்பணிப்பும் கலந்து இருக்கிறது!''

மலையகத் தமிழர்கள் தமிழக அரசிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

''காலங்காலமாக இந்தியாவிடமும்,இலங்கையிடமும் கையேந்தி எவ்வித பலனையும் பெறாத எம்மக்கள் இப்போது விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார்கள்.200 ஆண்டுகளாக கண்ணை மூடிக்கொண்டு இருந்த த‌மிழ்நாடு அரசு,இனிமேலாவது கண்டுகொள்ளுமா என்பது பெரிய கேள்வி குறியே.வடகிழக்கு மக்களுக்காக வாய்க்கிழிய பேசும் தமிழ் அமைப்புகள் கூட எம்மக்களுக்களின் விடயங்களின் வாயை மூடிக் கொண்டிருப்பது பெரும் வருத்தத்தை தருகிறது.ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய வேண்டும் என யோசித்தால், 'புலம்பெயர்ந்து போன தமிழர்களுக்காக தனி அமைச்சகத்தை உருவாக்கி அதன் மூலம் மலையகத் தமிழர்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழர்களுக்கும் தமிழ் நாடு அரசாங்கம் உதவுலாம்''

'தமிழகத்தில் ஈழத்திற்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகளை கொல்ல இலங்கை அரசு மலையகத் தமிழர்களை பயன்படுத்துவதாக செய்திகள் வருகின்றனவே?

''இது முற்றிலும் பொய்யான, கற்பனையான‌ செய்தி. இது போன்ற நாச வேலைகளுக்கு மலையகத் தமிழர்கள் ஒரு போதும் சோரம் போக மாட்டார்கள். இன்றளவும் தமிழகத்தையும், இந்தியாவையும் பெரிதும் நேசிக்கும் அப்பாவி உழைக்கும் வர்க்கம் அவர்கள். இருநூறு ஆண்டுகளாக இலங்கை அரசாலும், இந்திய அரசாலும் வஞ்சிக்கப்பட்டு வரும் மலையகத் தமிழர்களுக்காக எவரும் பேசுவதில்லை. ஆனால் அவர்கள் மீது தொடர்ந்து சேற்றை வாரி இறைக்கும் செயலை ஒரு சில சுயநல விஷமிகள் பரப்புகிறார்கள். இது போன்ற அவதூறுகளை சகிக்க முடியவில்லை!'' என சூடாக விடை கொடுத்தார்.

-இரா.வினோத்