Published:Updated:

பழ.நெடுமாறன் மீது கருணாநிதி அவதூறு வழக்கு

சென்னை, ஏப்.21,2011

தனது பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் பேசியதாக, பழ.நெடுமாறன் மீது முதல்வர் கருணாநிதி அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார். ##~~##

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது நேற்று 2 அவதூறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், பழ. நெடுமாறன் மீது முதல்வர் கருணாநிதி சார்பில் சென்னை நகர குற்றவியல் வழக்கறிஞர் ஷாஜகான் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு பேட்டியளித்த செய்தி கடந்த 17-ம் தேதி காலை நாளிதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. அந்த செய்தியில், தேர்தல் ஆணையத்தை முதல்வர் தொடர்ந்து வசைபாடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது.
 
தேர்தல் ஆணைய நடவடிக்கையை எல்லோரும் பாராட்டுகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுவதால், தில்லுமுல்லு எதுவும் செய்ய முடியாத கோபத்தில் முதல்வர் வசை பாடுகிறார் என்று கூறி உள்ளார்.
 
பழ.நெடுமாறனின் இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரம் இல்லாதது. வேண்டும் என்றே திட்டமிட்டு முதல்வர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
 
பொதுமக்கள் மத்தியில் மக்களுக்கு உள்ள நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக அவரது பேச்சு அமைந்துள்ளது. தேர்தல் முடிவு வெளி வருவதற்கு முன்பு மக்கள் மத்தியில் முதல்வரை பற்றி ஒரு தவறான எண்ணத்தை உண்டாக்கும் வகையில் பழ.நெடுமாறன் உள்நோக்கத்துடன் பேசி உள்ளார்.
 
தமிழக அரசு நிர்வாகத்தின் முதன்மையானவர் முதல்வர் என்பதை மறந்த நிலையில் நெடுமாறன் பேசி உள்ளார். இது அரசுக்கும், முதல்வருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே பழ.நெடுமாறனை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.