Published:Updated:

ஊழலுக்கு எதிராக போராட உறுதிபூண்டுள்ளோம்:பிரதமர்

புதுடெல்லி, ஏப்.21,2011

ஊழலுக்கு எதிராக போராட உறுதிபூண்டுள்ளோம்:பிரதமர்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை துணிச்சலுடன் மேற்கொள்ள மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார் பிரதமர் மன்மோகன் சிங். ##~~##

மேலும், லோக்பால் மசோதா வரும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

சிவில் சர்வீஸ் தினத்தையொட்டி, புதுடெல்லியில் ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் இன்று கலந்துகொண்டு பேசியது:

"லோக்பால் மசோதாவை உருவாக்க  அமைச்சர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழு செயல்பட்டு வருகிறது. இந்த மசோதா முழு வடிவம் பெற்று எதிர்வரும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படலாம்.

ஊழலுக்கு எதிராக மக்களிடையே சகிப்புத் தன்மை வெகுவாக குறைந்து விட்டது. ஊழலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

மக்களின் விருப்பத்துக்கேற்ப, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு உறுதியுடன் எடுத்து வருகிறது.

தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளால் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்க இயலவில்லை என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் பெரும் பங்காற்ற வேண்டும்.

நாட்டில் வேகமான வளர்ச்சிக்கு ஊழல் பெரும் தடைகல்லாக உள்ளது. இதன் காரணமாக ஏழைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை துணிச்சலுடன் எடுக்க வேண்டியது அவசியம்.

நிர்வாகத்தில் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும், வெளிப்படையான நிர்வாகம் இருக்க வேண்டும் என்ற விஷயத்தில் அண்மைக்காலமாக ஒரு விழிப்பு உணர்வு ஏற்பட்டுள்ளது," என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

மேலும், "உங்கள் உயர் அதிகாரிகளுக்கு, குறிப்பாக அரசியல் தலைவர்களுக்கு அறிவுரை வழங்குவதில் நேர்மையாகவும், அச்சமின்றியும் நடந்துகொள்ள வேண்டும்," என்று  ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.