Published:Updated:

மிஸ்டர் கழுகு: போயஸ் கார்டனில் சசிகலா?

மிஸ்டர் கழுகு: போயஸ் கார்டனில் சசிகலா?

மிஸ்டர் கழுகு: போயஸ் கார்டனில் சசிகலா?

மிஸ்டர் கழுகு: போயஸ் கார்டனில் சசிகலா?

Published:Updated:
##~##

கழுகார் வந்ததும் கேள்விப்பட்ட வதந்தியைச் சொன்​னோம். 

''புதன்கிழமை போயஸ் கார்டனுக்கு சசிகலா சென்றதாக ஒரு தகவல் உலா வருகிறதே!'' என்று கேட்டதும் சிரித்தார் கழுகார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சசிகலாவுக்கு வேண்டிய வட்டாரங்​கள்தான் இத்தகைய வதந்திகளைத் திட்டமிட்டுக் கிளப்புகிறதோ என்ற சந்தேகம் போலீஸ் வட்டாரத்தில் இருக்கிறது. அன்றைய தினம் சங்கரன்​கோவில் தேர்தல் பிரசாரத்தில் இருந்தார் ஜெயலலிதா. இரவு 8 மணிக்குத்தான் சென்னைக்கு வந்தார். எனவே, போயஸ் கார்டனுக்குள் சசிகலா சென்றார் என்பது வதந்திதான்'' என்றவர், சசிகலா மேட்டரையே தொடர்ந்தார்...

''ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு உச்சக்​கட்டத்தை நோக்கி நகர்வதால், எப்படி இழுத்தடிக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்த சசி தரப்புக்கு, லட்டு மாதிரி 'பெங்களூரு கோர்ட் கலவரம்’ கிடைத்தது. இப்போது 'இழு ராசா இழு’ கதையாக வழக்கை இழுத்தடிக்கிறார்கள். கடந்த

மிஸ்டர் கழுகு: போயஸ் கார்டனில் சசிகலா?

பிப்ரவரியில் ஏழு நாட்கள் பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகி 300 கேள்விகளுக்கு நிதானமாகப் பதில் அளித்த சசிகலா, மீண்டும் கோர்ட் படி ஏறத் தயங்குகிறார். 'கோர்ட்டில் சகஜ நிலை திரும்பி வருவதால், மார்ச் 14-ம் தேதி சசிகலா உள்ளிட்ட மூவரும் கட்டாயம் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று, கண்டனக் குரலில் நீதிபதி மல்லிகார்ஜுனையா உத்தரவு போட்டிருந்தார்.

அதனால், 14-ம் தேதி கோர்ட்டுக்கு சசிகலா வந்தே தீருவார் என்ற முனைப்​பில், பத்திரிகையாளர்களும், உளவுத் துறை அதிகாரிகளும் கோர்ட்டில் மொய்த்தனர். 'இனி வேகம் எடுத்தே ஆகவேண்டும்’ என்ற முனைப்பில் விறுவிறுவென வந்தார் நீதிபதி மல்லிகார்ஜுனையா. ஆனால் சசிகலா, சுதாகரன், இளவரசி மூவருமே வரவில்லை. அவர்கள் தரப்பு வக்கீல்கள் மட்டும் வந்திருந்தார்கள். கோர்ட் ஹாலில் மூவரையும் காணாததால், நீதிபதியின் முகத்தில் கோபம் தெறித்தது.''

''ஓஹோ!''

''சசிகலா தரப்பில் ஆஜர் ஆன வக்கீல் மணிசங்கர் 'கடந்த மார்ச் 2-ம் தேதி கோர்ட் வளாகத்தில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு சசிகலாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. தவிர, சசிகலாவின் கண்ணில் பிரச்னை இருக்கிறது. இதுபற்றி உங்களுக்கு ஏற்கெனவே தெரியும். அவரது மருத்துவரும், கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுக்கும்படி கூறி உள்ளார். எனவே, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 317-ன் படி குற்றவாளி கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என்று சொன்னார். சுதாகரன், இளவரசி தரப்பும் 'உடல்நிலை சரியில்லை’ என்று சொன்​னார்கள்.''

''அன்றைக்காவது அரசு வக்கீல் ஆச்சார்யா வந்​தாரா?''

''அவர் வரவில்லை. ஆச்சார்யாவின் ஜூனியர் சந்​தேஷ் சவுட்டா, 'இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்ட இரண்டு வருடங்களில் இப்படியே 90 முறை வாய்தா வாங்கி இருக்கிறார்கள். மற்ற கோர்ட்டுகளில் எல்லாம் வழக்கம் போல வழக்கு நடக்கிறது. சில இடங்களில் மட்டும் வழக்கறிஞர்கள் கோர்ட்டைப் புறக்கணித்து இருக்கிறார்கள். ஆனால் அந்த இடங்களில்கூட குற்றவாளிகள் கோர்ட்

மிஸ்டர் கழுகு: போயஸ் கார்டனில் சசிகலா?

ஆணையை மதித்து ஆஜராகிறார்கள். இங்கு மட்டும் தலைகீழாக நடக்கிறது. குற்றவாளிகள் ஆஜராகாமல், வக்கீல்கள் ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்கள். இந்த வழக்கை விரைவாக முடிக்கும் வகையில், தினமும் வழக்கை நடத்தலாம் என, சுப்ரீம் கோர்ட் சொன்ன பிறகும், குற்றவாளிகள் ஒத்துழைக்க மறுக்கிறார்கள். இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என்று சூடாக வாதிட்டார். அப்போதும் சசிகலா தரப்பு விடவில்லை.

'பெங்களூரு நீதிமன்றங்களில் நிலவும் பதற்றமான சூழலால், வழக்கை ஒரு வாரம் தள்ளிவைக்க வேண்டும். ஏனென்றால், வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பவர்களில் இருவர் பெண்​கள். அவர்களது பாதுகாப்பைக் கருதி விலக்கு அளிக்க வேண்டும்’ என கேட்டார் சசிகலாவின் வக்கீல் மணிசங்கர். இடையே குறுக்கிட்ட‌ நீதிபதி மல்லிகார்ஜுனையா, 'வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட பிறகு, ஆண், பெண் என்று எல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. இப்போது நீதிமன்றத்தை நடத்த எந்தத் தடையும் இல்லை. எனவே, நீதிமன்றம் தன் கடமையைச் செய்ய நீங்கள் (சசிகலா தரப்பு) ஒத்துழைக்க வேண்டும். மூவரும் மார்ச் 21-ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.''

''இப்போதும் தமிழக உளவுப்போலீசார் வந்து காத்திருந்தார்களா?''

''ம்! பெங்களூருவில் சசிகலாவின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க சென்னையில் இருந்து வந்திருந்த உளவுத்துறை ஆட்களும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரும் விரக்தியோடு சென்னைக்கு ரயில் ஏறினார்கள். பெங்களூருவில் இருந்து எனக்குக் கிடைத்திருக்கும் இன்னொரு தகவல் சரியான மண்டையிடி ரகம்!''

''அது என்ன?''

''ஜெயலலிதா, சசிகலா இருவருக்கும் சிம்ம சொப்​பனமாக இருப்பவர்கள் நீதிபதி மல்லிகார்ஜுனய்​யாவும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவும்தான். அரசு வக்கீல் ஆச்சார்யாவை அந்த இடத்தில் இருந்து நகர்த்த முயற்சிகள் நடந்ததாக அவரே கொதித்தார். கர்நாடக மாநில அரசின் அட்வகேட் ஜெனரல், சிறப்பு கோர்ட் அரசு வக்கீல் ஆகிய இரண்டு பொறுப்புகளை அவர் எப்படி வகிக்கலாம் என்று சிக்கல் கிளப்பப்பட்டது. யாராக இருந்தாலும் எது பெரிய பதவியோ அதை வைத்துக்கொண்டு, சிறு பொறுப்பையே கை கழுவுவார்கள். ஆனால், அட்வகேட் ஜெனரல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சிறப்பு கோர்ட் அரசு வக்கீல் பதவியை தக்கவைத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் ஆச்சார்யா. அடுத்த முயற்சி நீதிபதி மல்லிகார்ஜுனய்யா திசை நோக்கி என்று ஒரு பேச்சு கிளம்பியிருக்கிறது.''

''சொல்லும்!''

''மல்லிகார்ஜுனய்யா,வரும் ஆகஸ்ட் மாதத்​துடன் ஓய்வு பெறப்போகிறார். அவர் நினைக்கிற வேகத்தில் போனால், அதற்குள் இந்த வழக்கின் தீர்ப்பைக் கொடுத்துவிட முடியும். ஆனால், அதற்குள் அவரை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தி, பெரிய நாற்காலி நோக்கி இடம் பெயரச் செய்ய சில காரியங்கள்நடக்க ஆரம்பித்து உள்ளனவாம். அவரது பெயரை பி.ஜே.பி. அரசாங்கம் பரிந்துரை செய்ய இருப்பதாகவும் சொல்கிறார்கள். அப்படி அவர் பதவி உயர்வைப் பெற்றால் இந்த சிறப்பு நீதிமன்றத்துக்கு வேறு ஒரு புதிய நீதிபதி வந்தாக வேண்டும். வருபவர் எப்படி இருப்பாரோ... வழக்கு ஆகஸ்ட்டுக்குள்... ஏன் அடுத்த  ஆண்டுக்குள்ளும் முடியாமல் போனால் என்னாகும்? இதைச் சொல்லி, 'எப்படி இருக்கிறது இந்த ஐடியா?’ என்று, சிலர் பெங்களூருவில் பேச ஆரம்பித்து உள்ளார்கள்.'' என்றவர் அடுத்த மேட்டருக்குத் தாவினார்.

''சசிகலா வதந்தி பற்றிக் கேட்டீரே... வீரப்பன் வதந்தி காதுக்கு வரவில்லையா?'' என்றார்கழுகார்.

''அதைச் சொல்லத்தானே நீர்!'' என்றோம்!

''வீரப்பன் பதுங்கி இருந்த காட்டுக்குள் கோடிக்​கணக்​​கான பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது என்பது ரொம்ப நாளாக உலா வரும் புதையல் பரபர! அது, அவரது மனைவி முத்துலட்சுமிக்கு மட்டும்தான் தெரியும் என்பது சிலர் கிளப்பிய கிறுகிறு. இப்போது, 'புதையலை கையில் எடுத்தாச்சு' என்றும், 'முத்துலட்சுமி புதுக்கட்சி ஆரம்பிக்கப் போகிறார்' என்றும் கிடுகிடு கிளப்புகிறார்கள் சிலர்!''

''அப்படியா?''

'' தர்மபுரி நகரம், பென்னாகரம் தாலுக்கா மற்றும் முத்துலட்சுமி வசிக்கும் மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணப்புதையல் பற்றி பேச்சு சூடாகவே காதில் விழுகிறதாம்.''

''விரிவாகச் சொல்லும்!''

''கர்நாடக சிறையில் இருந்த முத்துலட்சுமி ஒருவழியாக ஜாமீன் வாங்கி வந்துவிட்டார். இந்த சுதந்திர சந்தோஷத்தைக் கெடுப்பது மாதிரி, இரண்டு மகள்களும் அவர் பேச்சைக் கேட்காமல் போய்விட்டார்கள் என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. இந்த நிலையில்தான் முத்துலட்சுமியை புதுக்கட்சி ஆரம்பிக்கச் சொல்லி பலரும் வலியுறுத்தி இருக் கிறார்கள். தொடர்ந்து, சென்னையிலும் மேட் டூரிலும் ரகசியமாக சில ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளார். அப்போது, கட்சி தொடங்கி நடத்த நிறையப் பணம் தேவைப்படும் என்று பேச்சு வந்ததாம். இது இப்படியிருக்க... 'வீரப்பன் சுடப்படுவதற்கு கொஞ்ச நாட்கள் முன், காட்டுக்குள் மறைத்து வைத்து இருந்த பல  கோடி ரூபாய் இருக்கும் இடத்துக்கான வழியை, சில சங்கேத பாஷைகள் மூலம் அனுப்பி இருந்தார். போலீஸ் கெடுபிடி மற்றும் மன உளைச்சல்கள் காரணமாகத்தான் அந்தத் தகவல்கள் அப்போது கண்டுகொள்ளப்படவில்லை. இப்போது, புதுக்கட்சி திட்​டம் வந்தபின் மீசைக்காரர் வைத்து விட்டுப் போன புதையலைத் தேடி

மிஸ்டர் கழுகு: போயஸ் கார்டனில் சசிகலா?

எடுக்கவேண்டும் என்று சிலர் வலியுறுத்தினார்கள். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தாலும், கடைசியில் சம்மதம் பிறந்தது. உடனே, ஒரு குழு காட்டுக்குள் இறங்கி, பணம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டது. இதனால் ஏற்படக்கூடிய சட்டச் சிக்கல்களை எதிர்​கொள்ள சட்ட நிபுணர்களை நாடி இருக்கிறார்கள்' என்று சுற்றுகிறது ஒரு குபீர்!''

''நம்பும்படி இல்லையே! வீரப்பனை சுட்டுக் கொன்றபோதே, போலீஸார் பெரும் பணத்தை எடுத்ததாகச் சொல்வார்களே?''

''முத்துலட்சுமி தரப்பிலும் அப்படித்தான் சொல்​கிறார்கள். 'என் நிம்மதியைக் கெடுக்க என்னதான் வதந்தி கிளப்புவது என்று வரைமுறை இல்லையா? காட்டுக்குள் போய் பணத்தை எடுத்ததாகச் சொல்வது எல்லாம் மனசாட்சியே இல்லாமல் கிளப்பும் வதந்திகள். என் குடும்ப விவகாரங்களிலேயே நான் நொந்துபோய் இருக்கேன்’ என்று முத்துலட்சுமியும் மனம் நொந்து சொல்கிறாராம். 'மலைவாழ் மக்கள் இயக்கம்’ என்ற ஓர் அமைப்பை அவர் ஏற்கெனவே நடத்தி வருகிறார். அதையே கட்சியாக மாற்றப்போகிறாரா என்று உளவுத்துறை போலீஸ் குடைய ஆரம்பித்துள்ளது!'' என்றபடி, எஸ்கேப் ஆனார் கழுகார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism