
எஸ்.முருகேசன், திருவள்ளூர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆட்சியாளர்களிடம் உம்மைப் போன்றவர்கள் எதிர்பார்ப்பது என்ன?
மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த போது ஜோதிபாசு சொன்னதுதான் அனைவரது எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

'கிராமங்களிலும் நகரங்களிலும் வசிப்பவர்களுடைய துன்பங்களைப் போக்கி, அவர்களுடைய வாழ்க்கையில் சிறிதளவு முன்னேற்றத்தை ஏற்படுத்துவது நமது நோக்கம். அதற்கு மேல் எதையும் செய்வதற்கு நாம் ஆசைப்படவில்லை'' என்றார் பாசு.
ஆட்சியாளர்களிடம் எதிர்பார்ப்பது இதைத்தான். தேனாறும் பாலாறும் அல்ல.
எம்.சண்முகம், கொங்கணாபுரம்.

சமீபத்தில் கழுகார் ரசித்த சுவாரஸ்யம் என்ன?
##~## |
அரசியல்வாதிகளின் இன்றைய அறிக்கைகளைப் படிக்கும்போது பழையவை ஞாபகத்துக்கு வருவதுதான் சுவாரஸ்யமான அனுபவம்.
'இலங்கையில் நடந்த கொடூரக் காட்சிகளைப் பார்த்து மனம் கலங்கிப்போனேன்’ என்று கருணாநிதி இப்போது சொல்கிறார். இந்தக் காட்சிகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வெளியானபோது, 'இது உண்மையா எனப் பார்க்க வேண்டும். இப்போது எடுக்கப்பட்டதா... பழசா எனப் பரிசோதிக்க வேண்டும்’ என்று சொன்னவரும் அவர்தான். மக்களின் மறதிதானே தலைவர்களின் மூலதனம்!
த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

அரசியல்வாதிகள் இன்றுவரை தைரியமாகச் செய்யும் பணி எது?
வாக்குறுதிகளை வாரி வழங்குவதுதான்! 'ரூபாய்க்கு மூன்று படி அரிசி’ என்றார் அண்ணா. 'தபால் கார்டு விலையைக் குறைப்பேன்’ என்றார் எம்.ஜி.ஆர். 'நிலமற்ற ஏழை விவசாயிகள் அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம்’ என்றார் கருணாநிதி. 'மின் வெட்டே இருக்காது’ என்றார் ஜெயலலிதா.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைத் தைரியமாகச் சொல்வதால் தான், இவர்கள் தலைவர்களாக ஆனார்களோ?
பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

'திராவிடக் கருத்துக்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டுள்ள ஆட்சியாளர்களை மக்கள் ஒதுக்க வேண்டும்’ என்று கருணாநிதி கூறியுள்ளது பற்றி?
'திராவிடக் கருத்துக்கள்’ என்று கருணாநிதி எதைச் சொல்கிறார்? அவர் எதிர்க் கட்சியாக இருக்கும்போது சொல்லும் திராவிடக் கருத்துக்கள் வேறு. ஆளும் கட்சியாக ஆனதும் சொல்லும் திராவிடக் கருத்துக்கள் வேறு. எனவேதான் விளக்கம் தேவைப்படுகிறது!
ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்ட போது, அவரை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்தது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனார். தே.மு.தி.க.வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரிப்பதால், அடுத்து தே.மு.தி.க. ஆட்சிதான் என்று அந்தக் கட்சியினரின் கூற்றுக்கு கழுகார் உடன்படுகிறாரா?
இந்தக் கேள்வியைப் படித்தால், கம்யூனிஸ்ட்டுகள் வேண்டுமானால் சந்தோஷப்படலாம். 'நமக்கு இவ்வளவு செல்வாக்கு உள்ளதா?’ என்று. மற்றபடி, தே.மு.தி.க.வினர் நம்பிக்கை கொள்வதில் அர்த்தம் இல்லை.
விஜயகாந்த் ஒன்றும் எம்.ஜி.ஆர். அல்ல. மக்களும் அன்றைக்கு இருந்த வாக்காளர்கள் அல்ல. எம்.ஜி.ஆர் எந்தக் கட்சியில் இருந்து விலகினாரோ, அந்தக் கட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்டிவ்வாக இருந்தார். கருணாநிதியிடம் கணக்கு கேட்டு நீதிப்போர் தொடு த்துதான் தனிக்கட்சி கண்டார் எம்.ஜி.ஆர். அநீதிக்கு எதிராகக் கொதித்து எழுபவர் என்ற இமேஜும் அவருக்கு பலமாகவே, சினிமா மூலம் வேரூன்றி இருந்தது. தி.மு.க-வின் முக்கியஸ்தர்களில் பலரும் எம்.ஜி.ஆர். குரலுக்கு ஆதரவு தெரிவித்து வெளியில் வந்தது கூடுதல் பலம் சேர்த்தது. மொத்தத்தில், அவருடைய கட்சி உணர்ச்சிக் கொந் தளிப்புகளுக்கு நடுவில் தொடங்கப்பட்டது
இதெல்லாம் போக, அன்றைய ஆளும்கட்சிக்கு மாற்றாக மக்கள் முன், ஒரே சக்தியாகத் தெரிந்தவர் எம்.ஜி.ஆர். மட்டும்தான். இப்படி எத்தனையோ பாசிட்டிவ் விஷயங்கள் அன்று எம்.ஜி.ஆருக்கு பக்கபலமாக இருந்தன!
அ.குணசேகரன், புவனகிரி.

ஆ.ராசா-நடராஜன் ஒப்பிடுக!
இருவரும் தங்கள் செய்கையால் மட்டுமல்ல... வாயாலும் கெட்டார்கள். அது ஒன்றுதான் ஒற்றுமை. மற்றபடி இவர் ராசா. அவர் நடராசா. பெயர் ஒற்றுமை மட்டும்தான்!
டி.ஜெய்சிங், கோயமுத்தூர்.

தங்களுக்குப் புதிராகவே இருப்பது எது?
கடந்த காலத்தில் கைதான காஞ்சி ஜெயேந்திரர் மௌனமும்...
இப்போது விலக்கப்பட்ட சசிகலாவின் மௌனமும்!
ஆர்.பசுபதி, வாணியம்பாடி.

ஒரு காலத்தில் பயங்கரவாதத்துக்குப் பெயர் போன பஞ்சாப் மாநிலத்தில் இப்போது, அமைதியாகத் தேர்தல் நடந்து முடிந்து விட்டதே?
ஒரு காலத்தில் பஞ்சாபில் இருந்து வரும் செய்திகள் அனைத்துமே பதற்றம் வரவைப்பதாய் இருந்தன. 1988-92 காலகட்டத்தில் மட்டும் 1550-க்கும் அதிகமான போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டார்கள். பயங்கரவாதிகள் என்று 11,700 பேர் பலி ஆனார்கள். திரும்பிய பக்கம் எல்லாம் துப்பாக்கிகள், எறிகுண்டுகள், இயந்திரத் துப்பாக்கிகள்தான் வலம் வந்தன. ஆயுதக் குழுக்கள், போலீஸ்காரர்களுடன் அப்பாவிகளையும் கொன்றன. போலீஸ்காரர்கள், பயங்கர வாதிகளுடன் அப்பாவிகளையும் பழிதீர்த்தார்கள். இந்த தொடர்ச்சியான சாவுகள்தான் பஞ்சாப் மக்களை அமைதியை நோக்கித் தள்ளியது.
இலக்கு இல்லாத போராட்டங்களும் அராஜகக் கொலைகளும் எப்போது அடக்கப்பட்டன என்பதே தெரியாமல் அடக்கப்பட்டுவிடும் என்பதற்கு பஞ்சாப்... ஓர் சமீபத்திய உதாரணம்!
ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

தமிழகத்தில் நிகழும் சமீபத்திய வங்கிக் கொள்ளைகள், நகைக்கடைத் திருட்டுகள் எதைக் காட்டுகின்றன?
போலீஸாருக்கு வேறு ஏதோ வேலைகள் இருப்பதை!
எஸ்.ஈஸ்வர பிள்ளை, கொல்லம்.

தன் காலத்துக்குப் பிறகு, அ.தி.மு.க.வை வழிநடத்தக் கூடிய தலைவரை ஜெயலலிதா இப்போதே அறிவிப்பது நல்லதுதானே?
நல்லதுதான்! நல்லதை யார் கேட்பது?
வி.பரமசிவம், சென்னை.

'தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளாலும் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்பட்டது இல்லை. ஏற்படப்போவதும் இல்லை’ என்கிறாரே விஜயகாந்த்?
நன்மை பயக்கும் கட்சியை அவராவது நடத்திக் காட்டட்டும்!
