Published:Updated:

மிஸ்டர் கழுகு: முத்துச் செல்வி... வெற்றிச் செய்தி...

மிஸ்டர் கழுகு: முத்துச் செல்வி... வெற்றிச் செய்தி...

##~##

''சங்கரன்கோவில் கும்பாபிஷேகம் யாருக்கு? என்று நீர் சொன்னது அப்படியே அட்சர சுத்தமாக நடந்து விட்டதே!'' என்று வந்ததும் வராததுமாக நமக்கு பாராட்டுப் பத்திரம் வாசித் தார் கழுகார்! 

''அ.தி.மு.க-வுக்கு வெற்றிக் கோட்டைத் தொடுவதற்கு எந்த தடங்கலும் இல்லை. இரண்டாவது இடத்தை ம.தி.மு.க. அடையும் நிலை முதலில் இருந்தது. அதன்பிறகு தி.மு.க. உஷாராகி விட்டது. தே.மு.தி.க.வுக்கு வலுவான செல்வாக்கு எதுவும் இல்லை என்பது எமது நிருபர் படை திரட்டிய தகவல். அதை அப்படியே வாசகர் களுக்குத் தந்தோம்!'' என்றோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஜெயலலிதா மிக அதிக சந்தோஷத்தில் திளைக் கிறார். சங்கரன்கோவில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் அன்று மங்களகரமான மணவிழா நிகழ்ச்சியில் இருந்தார் ஜெயலலிதா. அ.தி.மு.க. தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் அக்னீஸ் முகுந்தன், பால்வளத் துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தியின் மகன் தமிழரசன் உட்பட ஏழு குடும்பங்களின் திருமணங் களை

மிஸ்டர் கழுகு: முத்துச் செல்வி... வெற்றிச் செய்தி...

சென்னை வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்திப் பேசும் வைபவம் நடைபெற்றபோது ஒரு பாலிடிக்ஸ்...  ஜெயலலிதாவின் இரண்டு பக்கங்களில் மூர்த்தியும் தனபாலும் அமர வைக்கப்பட்டதோடு மேடையில் பேசவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் ஏனோ பொள்ளாச்சி ஜெயராமனுக்கு ஸீட்டும் இல்லை. பேசவும் வாய்ப்பு தரவில்லை. மற்ற மணமக்களின் உறவினர்கள் பின் வரிசையில் அமர்ந்தபோது அங்கே பொள்ளாச்சி ஜெயராமன் உட்கார வைக்கப்பட்டார். கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தும் குழுவில் இடம்பெற்று இருந்த ஜெயராமனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் மன்னார்குடியின் கைங்கரியம். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடந்த ஜெயராமன் மகள் அபிராமியின் திருமணத்தை பொள்ளாச்சிக்கே வந்து நடத்தி வைத்தார் ஜெய லலிதா. 'ஜெயராமன் மீது எந்தக் காலத்திலும் நம்பிக்கை வைக்க முடியும். அந்த அளவுக்கு நம்பிக் கைக்கு விசுவாசமானவர்’ என்று ஜெயராமனைப் பற்றி திரும ணத்திலேயே ஜெயலலிதா உருகிப் பேசினார். ஜெயலலிதா பேசிவிட்டுப் போன பிறகு ஆனந்தக் கண்ணீரோடு படபடப்பும் ஏற்பட்டதால், ஜெயராமனுக்கு லேசான நெஞ்சு வலியே ஏற்பட்டது. அப்படிப் பட்ட ஜெயராமனுக்கு, இன்று மேடையில் ஸீட் இல்லை. ஆனாலும், இதை அவர் தரப்பினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.''

மிஸ்டர் கழுகு: முத்துச் செல்வி... வெற்றிச் செய்தி...

''அரசியலில் இது எல்லாம் சகஜம்தானே?''

''பொள்ளாச்சி ஆட்களிடம் விசாரித்தால், 'புரொட்டோகால்படி முதலில் அமைச்சர், அதன் பிறகு துணை சபாநாயகர் இல்லத் திருமணங்களை நடத்தி முடித்துவிட்டுத்தான் எம்.எல்.ஏ.வான பொள்ளாச்சி ஜெயராமன் இல்லத் திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அம்மா முதலில் நடத்தி வைத்த திருமணமே ஜெயராமன் மகன் திருமணம்தான். அந்த சந்தோஷம் போதும்’ என்று சொல்லிச் சமாளிக்கிறார்கள்.''

''ம்!''

''இந்தத் திருமண வைபவத்தில் தம்பிதுரை எம்.பி.யின் மகள் லஷ்யாவின் திருமணமும் நடந்திருக்க வேண்டும். வேலூர் தொகுதி முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஞானசேகரனின் மகன் நவீனும் லஷ்யாவும் காதலித்து வந்தார்கள். அம்மாவின் அனுமதியோடு திருமணத்தை நடத்தி வைப்பதாகச் சொல்லி வந்தாராம் தம்பிதுரை. அனுமதி கிடைப்பதில் காலம் ஓடிக்கொண்டே இருந்ததால், 15 நாட்களுக்கு முன், திருப்பதியில் அந்தத் திருமணம் நடந்து முடிந்து விட்டது.''

''வாழ்க மணமக்கள்!''  

''மேடையில் முதல்வர் இருந்தபோதுதான் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நிலவரம் வர ஆரம்பித்தது. துண்டுச் சீட்டில் தரப்பட்ட எண்ணிக்கையைப் பார்த்துச் சிரித்தபடி இருந்தார். 'அ.தி.மு.க. அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறது. மணமக்களாகிய உங்கள் வாழ்க்கையின் ஆரம்பமே வெற்றியில் தொடங்கி இருக்கிறது.’ என்று பேசத் தொடங்கிய ஜெயலலிதா, 'மணமக்களாகிய நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு; ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தாமல் அன்பைச் செலுத்தி வாழ வேண்டும்’ என்றார். 'ஆதிக்கம் செலுத்தாமல் அன்பைச் செலுத்துங்கள்’ என்ற வார்த்தையை இரண்டு மூன்று முறை ரொம்ப அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் ஜெ. இந்த விழாவுக்கு ஜெயலலிதா வந்து சேருவதற்கு முன்பே, 'நிருபர்களைக் காத்திருக்கச் சொல்லுங்கள்’ என்ற தகவலும் வந்து சேர்ந்தது. 'மற்றவர்கள்விட்ட சவாலுக்கு மக்கள் பதிலடி கொடுத்துவிட்டனர்’ என் பதைச் சொல்வதற்காகவே நிருபர்களை இருக்கச் சொன்னது மாதிரி இருந்தது.''

''ஓஹோ! விஜயகாந்த்துக்கு விட்ட கிண்டலா?''

மிஸ்டர் கழுகு: முத்துச் செல்வி... வெற்றிச் செய்தி...

'' தேர்தல் பிரசாத்தின்போது ஜெயலலிதா, 'தி.மு.க வேட்பாளரை இந்த தொகுதி மக்கள், டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்’ என்று ஆவேசமாகக் கேட்டுக் கொண்டதை  வாக்காளர்கள் நிறைவேற்றிக் காட்டி விட்டார்கள். தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. என அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்களும் டெபாசிட் இழந்து விட்டார் கள். ஆனால், 68 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வித்தியாசம் இருக்கும் என்பதைத்தான் யாரும் எதிர்பார்க்கவில்லை. 32 அமைச்சர்கள், 11 எம்.பி-க் கள், 100-க்கும் மேலான எம்.எல்.ஏ-க்கள் என எங்கே திரும்பினாலும் ரத்தத்தின் ரத்தங்கள். ஹெலிகாப்டரில் வந்து இறங்கி தொகுதியில் ஐந்து மணி நேரம் மட்டுமே வேன் பிரசாரம் செய்த ஜெயலலிதா, தி.மு.க வேட்பாளரின் நிலமோசடி பற்றி விளாசியதோடு, வைகோவுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் பகுதியில் தெலுங்கில் பேசி எதிர்க்கட்சியினரை நிலைகுலைய செய்தார். 'விரைவில் மின்பற்றாக்குறையைச் சமாளிப்பேன்’ என மக்களிடம் அவர் கொடுத்த உறுதிமொழியை மக்கள் ஏற்றுக்கொண்டதையே தேர்தல் முடிவு பிரதி பலித்து விட்டது.''

''வைகோ?''

''வைகோவைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல் அவருக்குக் கௌரவமான தோல்வி. பிரசாரக் களத்தில் ம.தி.மு.க-வினர் காட்டிய வேகத்தை பார்த்து அனைத்துக் கட்சிகளுமே மிரண்டு போயிருந்தன. தேர்தலில் தோற்றாலும் வைகோவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்து விட வேண்டும் என்பதிலேயே தி.மு.க-வினர் குறியாக இருந்தனர். இதற்காக அழகிரி தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் அணிவகுத்து நின்றனர். 'பல இடங்களில் தி.மு.க.வே பணம் கொடுத்தது’ என்றும் சொல்லப்படுகிறது. அது நடக்காமல் போயிருந்தால், தி.மு.க. நிலைமை சங்கடமாகப் போயிருக்கலாம்!''

''அப்படியா?''

''முதல்வரைப் போலவே சந்தோஷமாக இருப்பது தமிழக உளவுத் துறை அதிகாரிகள்தான். 'சங்கரன்கோவிலில் 48 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. ஜெயிக்கும்’ என்றும் 'இரண்டாவது இடத்தில் தி.மு.க., ம.தி.மு.க. ஆகிய இரண்டில் எது வந்தாலும் அவர்களுக்குள் வித்தியாசம் 2,000தான் இருக்கும்’ என்றும் இவர்கள் முதல்வருக்கு ஒரு நோட் வைத்தார்களாம். அது நடந்ததில் உளவுத் துறை மார்தட்டிக்கொள்கிறது!'' என்ற கழுகார், விமான நிலையத்தில் நடந்த சம்பவம் ஒன்றைச் சொன்னார்...

''எந்த ஆட்சி வந்தாலும், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடைய ஜால்ராக்கள் போடும் ஆட்டம் குறைவதே இல்லை. அதை நிரூபிக்கும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் ஒரு சம்பவம்...

சென்னை விமான நிலையத்தின் உள்ளேயே 'தாரா’ என்ற பெயரில் சொகுசு மதுபான பார் இயங்கி வருகிறது. விமானப் பயணிகளின் வசதிக்காக இயங்கும் அந்த பாரில் கடந்த 19-ம் தேதி இரவு கடும் ரகளை. மூன்று பெண்களுடன் வந்த இரண்டு பேர் மது அருந்திக்கொண்டு இருந்தார்கள்.

அந்தச் சமயத்தில் அங்கே இருந்த வேறு பெண்களை இவர்கள் கிண்டல் செய்துள்ளனர். இதனால், இரண்டு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. அன்று இரவுப் பணியில் இருந்த விமான நிலைய போலீஸ் எஸ்.ஐ. இக்பாலும், பல்லாவரம் எஸ்.ஐ. கலையரசனும், சம்பவ இடத்துக்குச் சென்று, தகராறு செய்தவர்களை எச்சரித்துள்ளனர். இதில், கடுப்பாகிப்போன இரண்டு பேரும் சப் இன்ஸ்பெக்டர்களுடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டு விட்டுத் தப்பி ஓடி உள்ளனர். அவர்களை காவல் துறையினர் விரட்டிச் செல்வதைப் பார்த்த டாக்ஸி டிரைவர்களும், ஆட்டோ டிரைவர்களும் ஓடிப்போய் மடக்கிப் பிடித்துள்ளனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்ட பிறகும் அவர்கள் அடங்கவில்லை. 'உங்க யூனிஃபார்மைக் கழட்டாம விட மாட்டோம். மேலிடத்துல எங்களுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கு தெரியுமா?’ என்று கூச்சல் போட்டுள்ளார்கள். இதில் ஒருவர், சென்னை தி.மு.க.வில் செல்வாக்குப் பெற்ற ஒருவரின் மச்சான். . தி.மு.க.காரர், அ.தி.மு.க. ஆட்சியைத் தனக்கு ஆதரவாகக் காட்டி மிரட்டியதுதான் இதில் ஹைலைட்!''

''அரசியல் செல்வாக்கு அந்த அளவுக்குப் போய் விட்டதா?'' என்ற நம் அதிர்ச்சியைக் கண்டு கொள்ளாமல், கழுகார் பறந்தார்!

படம்: பொன்.காசிராஜன் 

முல்லை தொல்லை ஓயுமா?

இடைத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கே சாதகமாக அமையும் என்ற விதி (?) கேரளாவுக்கு மட்டும் விலக்கா என்ன! அங்கேயும் ஆளும் காங்கிரஸ் கூட்டணியே இடைத்தேர்தலில் வென்றுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் பிரவோம் தொகுதிக்கு சமீபத்தில் இடைதேர்தல் நடத்தப்பட்டது. கடந்த பொதுத்தேர்தலில் இந்தத் தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டி.எம்.ஜேக்கப். இவர் கேரள காங்கிரஸ் (ஜேக்கப்) பிரிவைச் சேர்ந்தவர். உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் அமைச்சராக இருந்த இவர், கடந்த அக்டோபர் மாதம் மரணம் அடைந்தார். இதனால் பிரவோம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மறைந்தவரின் வாரிசான அனூப் ஜேக்கப்பையே வேட்பாளர் ஆக்கியது காங்கிரஸ் தரப்பு. இவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் சார்பில் எம்.ஜெ.ஜேக்கப் களம் இறங்கினார். இதில் காங்கிரஸ் வென்று விட்டது.

இந்தத் தேர்தலில் ஜெயிப்பதற்காகத்தான் முல்லைப் பெரியாறு விஷயத்தை அந்த இரண்டு கட்சிகளும் விவகாரம் ஆக்கியது. இனிமேலாவது சும்மா இருப்பார்களா என்று பார்ப்போம்!

மிஸ்டர் கழுகு: முத்துச் செல்வி... வெற்றிச் செய்தி...