Published:Updated:

சாய்பாபா மறைவு: ஜெ. உள்பட தலைவர்கள் இரங்கல்

Vikatan Correspondent

சென்னை, ஏப்.25,2011

ஸ்ரீ சத்ய சாய்பாபா மறைவுக்கு ஜெயலலிதா உள்பட தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ##~~##  

அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா: 

"அன்பையும், மனிதநேயத்தையும் மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்ய, தன் வாழ்நாளை அர்ப்பணித்த புட்டபர்த்தி ஸ்ரீசாய்பாபா அவர்கள், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

எண்ணற்ற இலவச கல்வி நிலையங்களையும், மருத்துவமனைகளையும், இன்னபிற மக்கள் நலப்பணியாற்றும் அமைப்புகளையும் உருவாக்கி, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய மக்களுக்கும், உலகெங்கும் உள்ள ஏழை, எளியோர்க்கும் அரும்பணியாற்றியவர் புட்டபர்த்தி ஸ்ரீசத்யசாய்பாபா. அவருடைய மறைவு மனித குலத்துக்கு பேரிழப்பு.

புட்டபர்த்தி ஸ்ரீசாய்பாபாவை இழந்து வாடும் அவரது பக்தர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்."

தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

"தனக்கென வாழாது, பிறர்க்காக வாழும் பெருந்தகையாளர்களால்தான் உலகம் நீடிக்கிறது என்பர். அதற்கு எடுத்துக்காட்டாக சாய்பாபா தனக்கென வாழாமல், நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பல நற்பணிகளை ஆற்றியுள்ளார். அவர் பெயரால் இயங்கும் அறக்கட்டளை மூலமாக கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் உலகமே பயன்பெறும் அளவுக்கு சேவை செய்துள்ளார் என்ற சிறப்பு, பாராட்டத்தக்க ஒன்றாகும்.

சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா ஆற்றிலிருந்து பெறப்படும் தண்ணீருக்கு பெரும் செலவில், சாய்பாபா கால்வாய் அமைத்து தந்தார் என்பதை தமிழ் நாடு என்றென்றும் மறக்காது. அந்த அளவுக்கு மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்வதில் அவர் ஆர்வம் கொண்டவர். அவரது இழப்பு நமக்கும், நம்முடைய நாட்டுக்கும் ஈடு செய்யமுடியாத இழப்பு ஆகும்.

அவரது நெடிய வாழ்நாள் முழுவதும் மனித குலம் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடையும் வகையில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பெருந்தகையாளர் ஆன்மிக குரு சத்ய சாய்பாபா மறைவு எல்லோராலும் இரங்கத்தக்க ஒன்றாகும். அவரது ஆன்மா சாந்தி அடையவும், அவரது மறைவால் துயருறும் அவர் மீது பற்று கொண்டோர் அனைவரும் ஆறுதல் அடையவும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்."

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு:

"ஆன்மிக அருள்பாலிக்கும் பகவானாக மட்டுமல்லாது ஸ்ரீசத்யசாய்பாபா உலகெங்கும் உள்ள பல நாடுகளில் ஆன்மிக மையங்கள் அமைத்து, அதன் மூலம், நலிந்த, ஏழை எளிய மக்களின் கல்வி, பொருளாதாரம், மருத்துவம் ஆகியவற்றின் உயர்வுக்கு மிகச்சிறந்த பணியை தொடர்ந்து தொய்வின்றி செய்துவந்தார்.

இந்திய திருநாட்டின் ஓர் ஆன்மிக பொக்கிஷம் என்ற அளவுக்கு வெளிநாட்டவராலும் போற்றி புகழப்பட்டுவந்த ஸ்ரீசத்யசாய்பாபாவின் மறைவு ஆன்மிகத்துக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது லட்சோப லட்சம் பக்தர்கள் அனைவரின் துயரிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கண்ணீரோடு பங்கேற்கிறது."

இதேபோல் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக்கழகம் நிறுவனர் தலைவர் டாக்டர் ந.சேதுராமன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம், பனைத் தொழிலாளர் நல வாரிய தலைவர் குமரி அனந்தன், ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய ஹஜ் கமிட்டி துணைத்தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், ஆர்.எஸ்.எஸ். தமிழக தலைவர்கள் ஆர்.வி.எஸ்.மாரிமுத்து, டாக்டர் எம்.எல்.ராஜா உள்பட மேலும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.