Published:Updated:

சாய்பாபா மறைவு: முதல்வர் கருணாநிதி இரங்கல்

Vikatan Correspondent

சென்னை, ஏப்.25,2011

ஸ்ரீ சத்ய சாய்பாபா மறைவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். ##~~##

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "நமது அன்பிற்கும், பாசத்துக்கும் உரிய புட்டபர்த்தி அருள்திரு சத்யசாய்பாபா மறைந்துவிட்டார் என்று செய்தி கேட்டு பெரிதும் துன்புறுகிறேன். இறுதி அஞ்சலி செலுத்திட நமது துணை முதல்வர் தம்பி மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார்.

தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கிட சில மாநில அரசுகளே மறுத்த நிலையிலே கூட - நான் கேட்காமலே தானாகவே என் இல்லத்துக்கே வருகை தந்து-சென்னைக்கு குடிநீர் கிடைக்க 200 கோடி ரூபாய்க்கு மேல் உதவிசெய்து, தமிழ் மக்களின் உள்ளங்களில் எல்லாம் தக்கதொரு இடத்தை பிடித்துக்கொண்டவர் புட்டபர்த்தி சாய்பாபா. நான் ஒரு நாத்திகவாதி என்ற போதிலும், சிறந்த ஆத்திகவாதியான பாபா என்பால் மிகுந்த அன்புகொண்டிருந்தார்.

2007-ம் ஆண்டு தொடக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னையிலே நடைபெற்றபோது, அவரைப்பற்றி நான் பேசும்போது, `மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்குச் செய்யும் சேவை' என்றும், அதாவது மக்கள் நலப்பணிக்காக அரசியல்வாதியும் ஆன்மிகவாதியும் ஒன்று சேர்வதில் தவறில்லை என்றும் கூறினேன்.

இவ்வளவு விரைவில் அவர் நம்மையெல்லாம் விட்டு மறைந்துவிடுவார் என்று நான் நினைக்கவே இல்லை. அவரது மறைவால் வருந்தும் எண்ணற்ற அவருடைய சீடர்களின் துயரத்தில் நானும் பங்கேற்பதோடு, என்னுடைய தனிப்பட்ட ஆழ்ந்த இரங்கலையும் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்," என்று கருணாநிதி கூறியுள்ளார்.