Published:Updated:

கருணாநிதி அவதூறு வழக்கு:ஜெ.,நெடுமாறனுக்கு சம்மன்

Vikatan Correspondent

சென்னை, ஏப்.25,2011

முதல்வர் கருணாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோருக்கு சம்மன் அனுப்ப சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டது. ##~~##

இவ்விருவரின் மீதும் கருணாநிதி தொடர்ந்த வழக்குகள் இன்று சென்னை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஜெயலலிதாவும் நெடுமாறனும் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
 
ஜெயலலிதா ஜூன் 21-ம் தேதியும், நெடுமாறன் ஜூன் 20-ம் தேதியும் ஆஜராக வேண்டும் என அந்த உத்தரவில் நீதிபதி கூறியுள்ளார்.

முன்னதாக, ஜெயலலிதா கடந்த 13-ம் தேதி மற்றும் 14-ம் தேதி வெளியிட்ட அறிக்கைகளில் தேர்தலில் தி.மு.க. ரவுடிகளை வைத்து அராஜம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், துணை ராணுவப் படையினருக்கு கருணாநிதியின் உத்தரவின் பேரில் தினப்படி குறைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த இரு அறிக்கைகள் தொடர்பாகவும் தனித்தனியாக 2 அவதூறு வழக்குகள், முதல்வர் கருணாநிதி சார்பில் தொடரப்பட்டன.
 
பழ.நெடுமாறன் புதுக்கோட்டையில் அளித்த பேட்டியில் தேர்தல் கமிஷன் நடவடிக்கையால் தி.மு.க. தில்லுமுல்லு செய்ய முடியவில்லை என்று கருணாநிதி நினைக்கிறார் என்று கூறி இருந்தார். இது தொடர்பாகவும் கருணாநிதி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.