Published:Updated:

ஈழம்.. அதிமுகவுடன் திமுகவை ஒப்பிடாதீர்: கருணாநிதி

Vikatan Correspondent

சென்னை, ஏப்.25,2011

ஈழம்.. அதிமுகவுடன் திமுகவை ஒப்பிடாதீர்: கருணாநிதி

இலங்கைப் பிரச்னையில் அதிமுகவுடன் திமுகவை ஒப்பிடக்கூடாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார். ##~~##

இதுகுறித்து சென்னையில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியது:

இலங்கை பிரச்னை குறித்து ஐ.நா. நியமித்த விசாரணைக் குழு அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது. அதற்குள் இது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே உள்ள பரஸ்பர விஷயமாகக் கருதப்பட்டு அறிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றனவே? என்று கேட்கிறீர்கள்.

இலங்கைப் பிரச்னை பெரிய பிரச்னை. இதை திமுக பிரச்னை, அதிமுக பிரச்னை என்று கருதி விட்டு விடாதீர்கள். ஏனென்றால் அதிமுக பிரபாகரனை கைது செய்து இங்கே அழைத்து வர வேண்டுமென்று தீர்மானமே சட்டப் பேரவையில் நிறைவேற்றும். ஒரு நாள், பிரபாகரனை தியாகி என்று அதிமுக பாராட்டும். இன்னொரு நாளைக்கு இலங்கை அதிபரைத் தாக்கிப் பேசும். ஒரு நாளைக்கு தாங்கிப் பேசும்.

அதனால் இலங்கைப் பிரச்னையில் எங்களுக்கும், அதிமுகவுக்கும் கருத்து வேறுபாடு என்று சொல்லாதீர்கள். அவர்களுக்கு இலங்கைப் பிரச்னை என்ன வென்றே தெரியாது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை இலங்கைப் பிரச்னை அவருக்குத் தெரியும்.
 
இந்தச் சூழ்நிலையில் இலங்கைப் பிரச்னையில் திமுகவுக்கு அதிகப் பொறுப்பு இருக்கிறது. எனவே டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இலங்கைப் பிரச்னையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று கேட்கிறீர்கள்.

மத்திய அரசை இலங்கைப் பிரச்னையில் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம், வற்புறுத்திக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப் போனால் எங்கள் அணியில் உள்ளவர்கள் போராட்டமே நடத்தியவர்கள். இலங்கைப் பிரச்னையிலே சட்ட மன்றத்தில் தீர்மானம் போட்டவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியும்.
 
விடுதலைப் புலிகளையெல்லாம் கைது செய்து நீதி மன்றத்திலே நிறுத்த வேண்டு மென்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும். பிரபாகரனைக் கொண்டு வந்து நிறுத்த வேண்டுமென்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும். போர் என்றால் பொது மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான் என்று சொன்னது யார் என்று உங்களுக்குத் தெரியும்.
 
இலங்கைப் பிரச்னையில் நாங்கள் அவர்களை விடத் தீவிரமான ஆதரவாளர்கள். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழர்களுக்கு தி.மு. கழகத்தைப் பொறுத்த வரையில் தீவிரமான ஆதரவு என்றைக்கும் உண்டு. ஆனால் அவர்கள் தான் எங்களை விட்டு விட்டு வேறு ஆதரவைத் தேடிப் போய் அதனால் நஷ்டம் அடைந்தார்கள். அதற்காக நாங்கள் அவர்களை கை விட்டு விட முடியாது. மத்திய அரசை வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களுடைய சுதந்திரத்தைக் காப்பாற்ற - அந்தத் தீவில் தமிழர்களும், சிங்களவர்களும் சம உரிமைப் பெற்று வாழ தொடர்ந்து குரல் கொடுப்போம்," என்றார் கருணாநிதி.
 
ராஜபக்ஷேயை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கருத்தினை ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். உங்கள் அணியில் அவர் இருக்கிறார். இதிலே உங்கள் கருத்து என்ன? என்று கேட்டதற்கு, "இதிலே ராமதாஸ் கருத்திலிருந்து நான் வேறுபடவில்லை. அந்தக் கருத்தை எப்போது எந்தவிதமாக வலியுறுத்துவது என்பது தான் இதிலே முக்கியமே தவிர ராமதாஸ் கருத்திலிருந்து நான் வேறுபடுகிறேனா என்று கேட்டு, கருணாநிதியும் ராமதாசும் கருத்து வேறுபாடு என்று தலைப்பு போட்டு விட வேண்டாமென்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

ராஜபக்ஷேவுக்கு ஆதரவான நிலையை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறதே? என்றதற்கு, "இவையெல்லாம் சர்வதேச அளவில் - சர்வதேச நிலையையொட்டி விவாதிக்க வேண்டிய விஷயங்கள். இந்தியாவின் பாதுகாப்பை ஒட்டியும் நல்லுறவு எப்படி யெல்லாம் வளர்க்கப்பட வேண்டும் என்பதையொட்டியும் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள். உங்களின் ஒரு கேள்வியிலும், என்னுடைய ஒரு பதிலிலும் இந்த விஷயங்களை அடக்கி விட முடியாது," என்றார் அவர்.

தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டே போகிறது, சென்னையில் ஒரு மணி நேரம் மின் வெட்டு இருக்கிறதே? என்றதற்கு, "மின்சாரப் பற்றாக்குறை இந்தியா முழுவதும் இருக்கிறது. ஜெயலலிதா முன்பு ஐந்தாண்டு காலம் ஆட்சியிலிருந்தபோது, மின்சாரத் துறையில் எதையுமே செய்யாததால்தான் இப்போது இந்த விளைவுகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்," என்றார் முதல்வர் கருணாநிதி.