Published:Updated:

பிரதமரை வரவேற்க டி.ஜி.பி.க்கு அனுமதி மறுப்பு: ஜெயலலிதா கண்டனம்

பிரதமரை வரவேற்க டி.ஜி.பி.க்கு அனுமதி மறுப்பு: ஜெயலலிதா கண்டனம்
பிரதமரை வரவேற்க டி.ஜி.பி.க்கு அனுமதி மறுப்பு: ஜெயலலிதா கண்டனம்
பிரதமரை வரவேற்க டி.ஜி.பி.க்கு அனுமதி மறுப்பு: ஜெயலலிதா கண்டனம்

சென்னை: பிரதமர் மன்மோகன் சிங் திருச்சி வந்தபோது, அவரை வரவேற்க தமிழக டி.ஜி.பி அனுமதிக்கப்படாததற்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் இன்று (4ஆம் தேதி) எழுதியுள்ள கடிதத்தில், "புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ஓலைக்குடிப்பட்டியில் பெல் நிறுவன பாய்லர் திறப்பு விழாவுக்காக கடந்த 2ஆம் தேதி நீங்கள் திருச்சி வந்தீர்கள். உங்களை வரவேற்க எங்கள் அமைச்சர்களுடன் தமிழக போலீஸ் டி.ஜி.பி. வந்தபோது உங்களின் சிறப்பு பாதுகாப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் டி.ஜி.பி.யிடம் கடுமையாக நடந்து அவரை தடுத்துள்ளனர். அதுவும் கீழ்நிலை அதிகாரிகள் அந்தஸ்து கொண்ட அவர்கள் டி.ஜி.பி.யை தடுத்து அவமரியாதையாக செயல்பட்டுள்ளனர்.

உங்களை விமான நிலையத்தில் யார்? யார் வரவேற்க வருவார்கள் என்று ஏற்கனவே நான் தகவல் அனுப்பியிருந்தேன். அதில் போலீஸ் டி.ஜி.பி.யின் பெயரும் இருந்தது. அதை உறுதிசெய்து உங்கள் அலுவலகத்தில் இருந்தும் ஆகஸ்ட் 1ஆம் தேதி கடிதம் வந்தது.

இந்த நேரத்தில் இதுபோன்ற மோசமான சம்பவம் நடந்திருக்கிறது. பிரதமர் அலுவலகம் உறுதி செய்யப்பட்ட பட்டியலில் டி.ஜி.பி. இருந்தும் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரை தடுத்திருக்கிறார்கள். தமிழ்நாடு டி.ஜி.பி.யைகூட அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் இருந்தார்களா? என்று நினைக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

##~~##
தமிழகத்தின் முதன்மை போலீஸ் அதிகாரியை அதுவும் சீருடையில் இருந்த நிலையிலும் அடையாளம் கண்டுகொள்ளாமல் போனது ஏனென்று தெரியவில்லை. இந்த அதிகாரிதான் உங்கள் தமிழ்நாடு சுற்றுப்பயணத்துக்கு அனைத்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்தவர் என்பதையும் உங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இந்த விவகாரம் தொடர்பாக நீங்கள் உரிய விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற இடங்களில் பொருத்தமான அதிகாரிகளை நியமித்து இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.