Published:Updated:

மிஸ்டர் கழுகு: தப்பை உணர்ந்த தங்கை!

மிஸ்டர் கழுகு: தப்பை உணர்ந்த தங்கை!

மிஸ்டர் கழுகு: தப்பை உணர்ந்த தங்கை!
##~##

ழுகார் உள்ளே நுழையும்போதே, ''உமது பெங் களூரு நிருபருக்கு நானும் வாழ்த்துகள் சொன்னேன்!'' என்று சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இரண்டு இதழ்களுக்கு முன்பே 'மீண்டும் ஜெ-சசி நட்பு’ என்ற செய்தியை நமது பெங்களூரு நிருபர் எழுதி இருந்தார்.

''சசிகலாவின் உற்சாகம் குறித்து அவருக்கு நெருக்க மான வட்டாரத்தில் விசாரித்தோம். 'சின்னம்மா மீது அம்மாவின் கோபம் குறைந்து இருப்பதாகவே தகவல் வருகிறது. அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் மீண்டும் உறவு பூக்கக் காரணமே இந்திய அளவில் ஜோதிடத்தில் புகழ்பெற்ற மங்களூர் மஞ்சுநாத சுவாமி ஜோசியர்தான். இப்போதைக்கு அம்மா அந்த மங்களூர் ஜோதிடர் சொல்வதைத்தான் ஃபாலோ பண்றாங்க. சங்கரன்கோவில் தொகுதியில் 60 ஆயிரம் லீடிங்கில் வெற்றி என்று சொன்னதும் சின்னம்மா, 'ஹய்யோ... சூப்பர்’ என்று வியந்து சொன்னார். 'இன்னும் கூடுதலா ஓட்டு வரும்னு நான் எதிர்பார்த்தேன்’ என்றும் சொன்னார். அம்மாவும் சின்னம்மாவும் மீண்டும் வெளிப்படையாகவே இணைந்து விடுவார்கள்’ என்றும் சொன்னார்கள். சசிகலாவின் சந்தோஷத்தைப் பார்த்தால் நிஜமோ என்று நம்பத் தோன்றுகிறது'' என்று எழுதி இருந்தோம். இதைச் சுட்டிக் காட்டியே பேசத் தொடங்கினார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: தப்பை உணர்ந்த தங்கை!

''டிசம்பர் 19-ம் தேதி சசிகலாவும் அவரது உறவினர் களும் கட்சியை விட்டுக் கட்டம் கட்டப்பட்டார்கள். மார்ச் 28-ம் தேதி சசிகலாவின் புதிய அறிக்கை வெளிவந்து இருக்கிறது. இந்த மூன்றரை மாதங்களில் எவ்வளவோ சமாச்சாரங்கள் நடந்து விட்டன. இதைத் தொடர்ச்சியாக நானும் உமக்குச் சொல்லி வந்தேன். 'இந்தப் பிரிவு நிரந்தரம் ஆனது அல்ல’ என்று சொல்லும் அளவுக்கே பல சம்பவங்கள் நடந்தன. ஜெயலலிதாவும் சசிகலா மீது கொஞ்சம் சாஃப்ட் கார்னரும் அவரது குடும்பத்தினர் மீது அடக்க முடியாத ஆத்திரமும் கொண்டவராகத்தான் அப்போதும் இருந்தார். இப்போதும் இருக்கிறார்!''

''இந்த அறிக்கை எழுதப்பட்ட சூழ்நிலையைச் சொல்லும்!''

''என்னுடைய சோர்ஸ் சொல்லும் தகவல் படி, இந்த அறிக்கையே கார்டனில்தான் எழுதப்பட்டு இருக்கிறது.  கார்டனுக்கு நெருக்கமான விளம்பரக் கம்பெனி ஒன்றின் அலுவலகத்தில் பிரின்ட் எடுக்கப்பட்டு அங்கே இருந்து மீடியாக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதலில் அது ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பானது ஒன்றே சொல்லுமே... ஜெ. ஒப்புதல் இல்லாமல் இது தயாராகி இருக்க வாய்ப்பு இல்லை என்று!

மிஸ்டர் கழுகு: தப்பை உணர்ந்த தங்கை!

இரண்டு மூன்று நாட்களாகவே இதற்கான அடிப்படை  வேலைகள் நடந்தன. 'மிடாஸ்’ மோகனை போலீஸ் அள்ளிக்கொண்டு போனது ஞாயிற்றுக்கிழமை. அதே தினத்தில் தஞ்சாவூரில் மகாதேவனைத் தேடியும் போலீஸ் போனது. அதற்கு இரண்டு நாட்கள் கழித்துத்தான் இப்படி ஓர் அறிக்கை சசிகலாவிடம் இருந்து வருகிறது என்றால், சந்தேகம் வலுக்கத்தானே செய்கிறது!''

''என்ன சந்தேகம்?''

''இப்படி ஓர் அறிக்கையே கட்டாயத்தின் அடிப் படையில் எழுதி வாங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள் நெருக்கமான விஷயங்களை அறிந்தவர்கள். 'சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் கட்சிக்கும் எனக்கும் துரோகம் செய்து விட்டார்கள்’ என்று ஜெயலலிதா சொல்லி வந்தார். இதன்படி எம்.நடராஜன், திவாகரன், ராவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு வெளியே வரத் தெரியாமல் உள்ளேயே இருக்கிறார்கள். இவர்கள் சதிகாரர்கள்தான், நல்லவர்கள் அல்ல என்று சசிகலா மூலமாகவே சொல்ல வைத்தது ஜெயலலிதாவுக்கு ப்ளஸ்தானே!

'என்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர், நான் அக்காவுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததை அடிப்படையாக வைத்து எனது பெயரைத் தவறாகப் பயன்படுத்தி சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டனர். என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு அக்காவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்’ என்கிறது அந்த அறிக்கை. ஜெயலலிதா எடுத்து வரும் கைது நடவடிக்கைகளுக்கு சசிகலாவே கிரீன் சிக்னல் காட்டிவிட்டார் என்றே சொல்கிறார்கள்!''

''சசிகலா கார்டனுக்கு வந்து விடுவாரா?''

''அதற்கான வாய்ப்பு குறைவுதான். 28-ம் தேதி அறிக்கை வந்த அன்று காலை யிலேயே அவர் கார்டனுக்கு வந்துவிட்டார் என்று, மீடியாக்கள் போயஸில் குவிந்தன. கார்டனுக்கும், தி.நகருக்கும், கொட்டிவாக்கம் பகுதிக்குமாக மீடியேட்டர் அலைந்து அறிக்கையில் கையெழுத்து வாங்கினாரே தவிர, கார்டனுக்கு சசிகலா வந்து செல்லவில்லை என்கிறது ஒரு குரூப். சசிகலாவுக்குப் பிரத்யேக அறை இருந்ததும், அதில் இருந்த அவரது பெற்றோர் புகைப்படங்கள் உள்பட அனைத்தும் அப்புறப் படுத்தப்பட்டதையும் முன்பு நான் சொல்லி இருந்தேன். 15 நாட்களுக்கு முன்னால் இளவரசி ஒரு முறை கார்டனுக்குள்  வந்து போய் உள்ளார். அவரை ரிசப்ஷன் அறையில் உட்கார வைத்து விட்டார்கள். அவர் கார்டனுக்குள் நிரந்தரமாக வந்த காலம் முதல் ஒருமுறை கூட ரிசப்ஷனில் உட்கார்ந்ததே இல்லையாம். ஆனால், தன்னை இப்படி உட்கார வைத்து விட்டார்கள் என்று, வருத்தப்பட்டதாகவும் சொல்கிறார்கள். எனவே, சசிகலா நிரந்தரமாக மீண்டும் கார்டனுக்குள் வந்து விடுவாரா என்று இப்போது சொல்ல முடியாது!''

''கார்டனின் இப்போதைய நிர்வாகம்?''

''ஜெயலலிதாவின் வயதான சித்தி இருக்கிறார். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமன் மகள் தீபாவும் மகன் தீபக்கும் அடிக்கடி வந்து போகி றார்கள். 'சசிகலா இல்லாமல் மூன்றரை மாதங்கள் இருந்துவிட்டார். அவர் இல்லாமல் வாழப் பழகிக் கொண்டார். சசிகலாவின் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்டதன் மூலமாக அவரை மட்டும் மன்னிக்கத் தயார் ஆகிவிட்டார் ஜெயலலிதா. இது மட்டுமே உண்மை’ என்று சொல்கிறார்கள்!''

''சசி குடும்பத்தினர் ரியாக்ஷன்?''

''எப்படியாவது சைலன்ட் ஆகிவிட வேண்டும் என்றே அந்தக் குடும்பத்தினர் துடிக்கிறார்கள். 'சேர்த்து வைத்த பணத்தைப் பாதுகாத்து நிம்மதியாக காலத்தை ஓட்டிவிட வேண்டும்’ என்றே அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள் கிறார்கள். ஜெயலலிதா பற்றி அவ

தூறான கமென்ட் அடித்தவர்கள் மட்டுமே இப்போது சிறை வைக்கப்பட்டு உள்ளார்கள். சசிகலாவை மன்னித்தாலும் இவர்களை மன்னிக்க ஜெயலலிதா தயாராக இல்லை'' என்ற கழுகார், சிறிது இடைவெளிவிட்டு அடுத்துச் சொன்னதும் அதிர்ச்சி ரகம்!

''எம்.நடராஜன், திவாகரன், ராவணன் ஆகிய மூவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத் தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டு உள்ளார்களாம். அந்த நடவடிக்கை நிச்சயம் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தும். 'ஜெயலலிதா செய்தது சரிதான்’ என்று சசிகலாவே ஒப்புக்கொண்ட இந்த அறிக்கை அதற்கு நிச்சயம் உதவும் அல்லவா? அதற்காகவும் அவசரஅவசரமாக எழுதி வாங்கப்பட்டது என்கிறார்கள். இதில், ஜெயலலிதாவும் சசி கலாவும் தவிர மற்றவர்கள் எல்லோருமே மூளை குழம்பிப் போயிருக்கிறார்கள். குறிப்பாக... அ.தி.மு.க.வினர் அரண்டுபோய்க் கிடக்கிறார்கள்!''

''சசிகலா குடும்பத்தினர் இருந்தாலும் தொந்தரவு, இல்லாமல் போனாலும் தொந்தரவு என்று அவர்கள் நினைப்பார்களே?''

''இந்த அறிக்கை டி.வி.க்களில் ஃப்ளாஷ் நியூஸாக ஓடிக்கொண்டு இருந்தபோது சட்டசபை நடந்துகொண்டு இருந்தது. எதுவுமே தெரியாதது மாதிரி கம்மென்று வந்து உட்கார்ந்தார் முதல்வர். அவர் வீட்டில் இருந்து கிளம்பும்போதே அறிக்கை 'ஃபைனல்’ ஆகி ஜெயா டி.வி.க்குப் போய்விட்டதால்... அவரது முகத்தில் அதிகப்படியான சந்தோஷம் தெரிந்ததாம். மு.க.ஸ்டாலினுக்கு சவால்விட்டுப் பேசினார். அமைச்சர் கே.பி.முனுசாமியிடம் சைகை காட்டி ஏதோ பதில் சொல்லச் சொன்னார். ஜெய லலிதாவை ஆத்திரப்படுத்தி எதிர்க்கட்சியினர் சிலர் பேசியபோதும் அமைதியாக இருந்தார். 11.30 மணி வாக்கில் டீ குடிக்க கேன்டீன் வந்த எம்.எல்.ஏ.க்களுக்குத்தான் சசி அறிக்கை விவரம் தெரிய ஆரம்பித்தது. பலருக்கு டீ உள்ளே இறங்கவே இல்லை.  நிருபர்களுக்கு அருகில் வந்து, 'நெஜமா?’ 'உண்மையாவா?’ என்று கேட்டுக்கொண்டு இருந்தனர் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள்!''

''பதற்றம் வருவது நிஜம்தானே!''

''கொஞ்சம் சுகர், பிபி உள்ளவர்களின் கண்கள் சிவக்க ஆரம்பித்து விட்டனவாம். 'கார்டன்லதான் சின்னம்மா இருக்காங்களாம்’ என்று ஒரு தகவல் வர, இன்னும் உஷ்ணம் எகிறியது. அதுவரை 'சசிகலா அறிக்கை விட்டாராமே’ என்று சொன்ன எம்.எல்.ஏ.க்கள், 'சின்னம்மா’ என்று சொல்ல ஆரம்பித்தார்கள். சபைக்குள் யாருக்கும் இருப்புக் கொள்ளவில்லை. சபை நடவடிக்கை முடிந்ததும் மந்திரிகளின் அறைக்குச் சென்று அனெக்ஸ் ரூம்களில் உட்கார்ந்து அம்மா மூவ்களை அலச ஆரம்பித்தார்கள். மொத்தத்தில் யாருக்கும் எதுவும் புரியவில்லை. ஆனால், ஜெயலலிதா சந்தோஷமாக இருந்தார்!''

''இருக்கத்தானே செய்யும்!''

''அவர் கடந்த திங்கள்கிழமை முதல் அப்படித்தான் இருக்கிறார். 26-ம் தேதி தலைமைக் கழகத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலேயே ஜெ. ஜாலி மூடில் இருந்ததாகவும் சொல்கிறார்கள். 'இது சட்டசபை. இங்கு நாகரிகமாக நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். பேப்பரைத் தூக்கி வீசக்கூடாது. சின்னச்சின்னத் தவறுகள் நடந்தாலும் பொதுமக்களுக்கு உடனுக்குடன் போயிடுது. தி.மு.க.காரங்கன்னாலே....ன்னு பப்ளிக் நினைக்கிறாங்க. அந்த மாதிரியான கெட்ட பெயரை நம்ம ஆட்கள் வாங்கிடக் கூடாது. நிறையப் படிங்க. எல்லாத்துக்கும் நானே பதில் சொல்வேன்னு நினைக்கக் கூடாது. நான் பதில் சொன்னா, பத்தி ரிகையில் பெருசாப் போடுறாங்க. அதனால், கேள்வி கேட்டவங்க பெரியஆளா ஆகிடுறாங்க. முக்கியமானதுக்கு மட்டும் நான் பதில் சொல்கிறேன். மற்ற சில விஷ யங்களுக்கு கே.பி. முனுசாமி பதில் சொல்வார்’ என்று கேஷ§வலாகப் பேசினாராம் ஜெயலலிதா. இங்கும் திவாகரன் மேட்டர் வந்துள்ளது. 'சில எம்.எல்.ஏ.க்கள் அவர்களோடு தொடர்பு வைத்திருந்தால் சிக்கலை அனுபவிப்பீர்கள்!’ என்று சொல்லி  எச்சரிக்கையும் செய்துள்ளார்!'' என்று சொன்ன கழுகார்,

''இரண்டு மூன்று சோர்ஸ்களை சந்தித்து விட்டு மீண்டும் வருவேன். பார்ட் - 2வுக்கு இடம் காலி செய்து வையும்'' என்று ஆர்டர் போட்டு விட்டுச் சென்றார்!

மிஸ்டர் கழுகு: தப்பை உணர்ந்த தங்கை!