Published:Updated:

மிஸ்டர் கழுகு: ''அவங்க ரெண்டு பேரையும் விடாத... பிடி!''

மிஸ்டர் கழுகு: ''அவங்க ரெண்டு பேரையும் விடாத... பிடி!''

மிஸ்டர் கழுகு: ''அவங்க ரெண்டு பேரையும் விடாத... பிடி!''

கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதில் கழுகார் சமர்த்தர். சொல்லி விட்டுப்போன மாதிரியே வந்தும் சேர்ந்தார். அப்போது கொட்டியதும் அக்கா - தங்கை கதைதான்! 

##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''சசிகலா அறிக்கை வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன், வேறு கட்சியில் இருக்கும் முன்னாள் எம்.பி. ஒருவரைப் பார்க்க அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் வந்தார்கள். கார்டன் அனுமதியோடு வந்த அவர்கள் சொன்ன விஷயம்... மீண்டும் கார்டனுக்கு வாருங்கள் என்பதுதான். 'அம்மாதான் உங்களை அழைத்து வரச் சொன்னார்கள். பழைய விஷயங்களை எல்லாம் அம்மா மறந்து விட்டார். உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. உங்களை விரட்டியவர்கள் எல்லாம் வெளியே சென்றுவிட்டார்கள். அதனால் வாருங்கள்’ என்று சொன்னார்களாம். 'இல்லை... மீண்டும் அங்கே வர விருப்பம் இல்லை!’ என்று சொல்லி இருக்கிறார் அந்தப் பிரமுகர். அடுத்தநாள், அமைச்சர் ஒருவரே அவரைத் தேடி வந்து, 'கார்டனுக்கு வாருங்கள்’ என்று வற்புறுத்தி இருக்கிறார். ஆனாலும், அந்தப் பிரமுகர் பிடிகொடுக்கவில்லை. பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக ஆலோசனை பெறவே அவரை கார்டன் வட்டாரம் பயன்படுத்த நினைக் கிறதாம். அதனால்தான் அன்பான வற்புறுத்தல்கள். 'சசிகலாவால்தான் அவர் கார்டனைவிட்டு விலகினார். அப்படிப்பட்டவரை மறுபடியும் அழைக்கத் தூதுவிட்டு... சசிகலாவையும் சேர்த்துக்கொள்வது எந்த விதத்தில் சரியானது?’ என்று என்னுடைய சோர்ஸ் கேட்டார். பதிலை நான் எப்படிச் சொல்ல முடியும்?'' என்ற கழுகார் தொடர்ந்தார்.

மிஸ்டர் கழுகு: ''அவங்க ரெண்டு பேரையும் விடாத... பிடி!''

''சசிகலாவின் அறிக்கையில் இருக்கும் எழுத்துக்கள் அப்படியே 'நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழில் வரும் எழுத்துகளைப்போலவே இருக்கிறது. நமது எம்.ஜி.ஆரில் வள்ளுவன் தமிழ் ஃபான்ட்டைப் பயன்படுத்துகிறார்கள். அதே ஃபான்ட்டில்தான் சசிகலாவின் அறிக்கையும் உருவாகி இருக்கிறது. எனவே அனைவரும் இதனை, அம்மாவின் பார்வையில் தயாரானது என்றே சொல்கிறார்கள். ஆளும்கட்சி வட்டாரம் அடைந்த அதிர்ச்சியைச் சொன்னேன் அல்லவா? போலீஸ் வட்டாரமும் ஆடியது. காவல் துறையின் பவர் புள்ளிகளுக்கே படபடத்து விட்டதாம்.  இதற்கிடையில், டெல்டா மாவட்டங்களில் நாளரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எம்.நடராஜன், திவாகரன் உள்ளிட்டவர்கள் மீது போடப்படும் வழக்குகளை சற்றே நிறுத்தி வைக்கச் சொல்லி அந்த மாவட்ட போலீஸ் அதிகாரி களுக்கு வாய்மொழி உத்தரவு போடப்பட்டதாம். அந்த நேரத்தில் கார்டனில் இருந்து போலீஸ் பவர் புள்ளிக்கு போன். 'அவங்க இரண்டு பேர் மேலயும் ஒழுங்கா ஆக்ஷன் எடுத்துக்கிட்டு இருக்கீங்களா... அதை அப்படியே மெயின் டெய்ன் பண்ணுங்க. அவங்களுக்குப் பண ரீதியா யார் சப்போர்ட் பண்ணினாலும் அவங்களையும் வழக்கில் சேருங்க’ என உத்தரவு வந்ததாம். ஒரு பக்கம் சமாதானம்... அடுத்த பக்கம் ஆப்பு என அம்மையார் காட்டிய அதிரடியில் போலீஸ் அதிகாரிகளுக்குப் பைத்தியம் பிடிக்காததுதான் பாக்கி!''

''சசிகலாவும் ஜெயலலிதாவும் பேசிக்கொண் டார்களா?''

''கார்டனில் இப்போதும் செல்வாக்காக வலம்வரும் சிலர்,  அம்மாவும் சின்னம்மாவும் அடிக்கடி போனில் பேசிக்கிறாங்க. சிறுதாவூர் பங்களாவில் சந்திப்பு நடந்த உடனேயே இருவருக்கும் இடையில் இருந்த எல்லாவிதமான மன வருத்தங்களும் க்ளியராகி விட்டன. பெங்களூரு கோர்ட் விஷயங்களையும் போனிலேயே சின்னம்மா, அம்மாவிடம் அனுதினமும் சொல்லியபடிதான் இருக்கிறார்’ என்கிறார்கள்.''

''ஓஹோ...''

''சசிகலாவோடு சமாதானம் என்பது மட்டும் அல்ல... கார்டன் தரப்பில் உறவுக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கின்றன. சசிகலாவின் தம்பி திவாகரனுக்கும் எம்.நடராஜனுக்கும் மன்னிப்பே கிடையாதாம். அவர்கள் இருவருடனும் நெருக்கம் பாராட்டிய 120 நிர்வாகிகளின் பட்டியல் இப்போது முதல்வர் கையில். மாவட்டச் செயலாளர்களையும் எம்.எல்.ஏ-க்களையும் ஒருசேர அழைத்த முதல்வர் அந்தப் பட்டியலைக் காட்டி சகட்டுமேனிக்குத் திட்டினாராம். 'நட்பு பாராட்டக் கூடாது என நான் சொன்ன பிறகும் இப்படி நடக்கலாமா? 120 நிர் வாகிகளிடமும் ராஜினாமா கடிதங்கள் வாங்குங்கள்’ எனக் கறாராகச் சொன்னாராம். அத்தனை மாவட்டச் செயலாளர்களும் அமைதியாகத் தலையாட்ட, தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளரும் வீட்டு வசதித் துறை அமைச்சருமான வைத்திலிங்கம் மட்டும், 'அம்மாவின் பேச்சை மீறி யாரும் அவர்களோடு நட்பு பாராட்டவில்லை. சில நிர்வாகிகளைப் பழிவாங்கும் விதமாக அறிக்கை கொடுக்கப்பட்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது’ எனத் தயங்கியபடி சொன்னாராம். 'நான் கையில் வைத்திருப்பது உளவுத்துறை கொடுத்த பட்டியல். இதில் தவறு இருக்க வாய்ப்பே இல்லை. வேண்டுமானால் மறுபடியும் அவர்களை விசாரிக்கச் சொல்கிறேன். ஆனாலும், 120 பேரிடமும் ராஜினாமா கடிதங்களை வாங்கிவையுங்கள்’ என்றாராம். அதனால், அம்மாவின் உக்கிரம் இப்போதைக்குக் குறையாது என்கிறார்கள். இந்தக் கெடுபிடிகள் எல்லாம் திவாகரனுக்கும் நடராஜனுக்கும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் தானாம்!''

''சசிகலாவின் அண்ணன் மகனான மகாதேவன் மீதும் வழக்குப் போடப்பட்டு இருக்கிறதே?''

''அதில் போலீஸ் அதிகாரிகள் மண்டை காய்ந்த கதையைக் கேட்டால் உமக்கே கிறுகிறுத்துவிடும். ஆர்வக்கோளாறில் மகாதேவன் மீதும் தஞ்சை மாவட்ட போலீஸார் வழக்குப் போட்டனர். இதில் பயந்துபோன மகாதேவன் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்தார். விஷயம் தெரிந்து காக்கி வட்டாரத்தை வறுத்து விட்டாராம் அம்மையார். 'யாரைக் கேட்டு மகாதேவன் மீது வழக்குப் போட்டீர்கள்? மகாதேவனை எப்போது என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். எக்காரணம் கொண்டும் அவரை கைது செய்யாதீர்கள்’ எனத் தாளித்து விட்டாராம். சசிகலாவின் இன்னொரு அண்ணன் மகனான டாக்டர் வெங்கடேஷ் விஷயத்திலும் ஆரம்பத்தில் படுதீவிரமாக இருந்த போலீஸ் இப்போது சைலன்டாகிவிட்டது. 'வெங் கடேஷ் மீது வழக்கு வேண்டாம்’ என கார்டனில் இருந்தே சொல்லப்பட்டதாகவும் கிசுகிசுக்கிறார்கள். இதற்கிடையில், 20 நாட்களுக்கு முன் வெங்கடேஷ், கார்டனில் தென்பட்டதாகவும் செய்தி. மொத்தத்தில் சசிகலாவுடன் சமாதானம்... மகாதேவனுக்கு மன்னிப்பு... டாக்டருக்கு வரவேற்பு... திவாகரனுக்குத் திண்டாட்டம்... நடராஜன் மீது நடவடிக்கைகள் தொடரும் என ஒவ்வோர் உறவுக்கும் தனித்தனி உத்தரவுகளாம்!''

''ராவணன்?''

''கொடநாடு விஷயத்தில் அவர் ரொம்பவே விளையாடியதுதான் கோபம் குறையாததற்குக் காரணம். இதுபற்றி கொடநாடு மானேஜரிடமும் விசாரணை நடந்திருக்கிறது. 'உங்களை யார் கொடநாட்டில் சேர்த்தது?’ என முதல்வர் கேட்க, 'நீங்கள்தான் அம்மா என்னை வேலைக்குச் சேர்த்தீர்கள். நான் ஹைதராபாதில் இருந்தபோது, உங்களைப் பார்த்தேன். நீங்கள்தான் என்னை இங்கு அனுப்பினீர்கள்.’ எனச் சொன்னாராம் அந்த மானேஜர். அதில் திருப்தியான முதல்வர், அவரிடம் சொன்ன வார்த்தைகள்தான் கவனிக்கத்தக்கவை. 'கொடநாடு நிர்வாகத்தை நீங்கள் தொடர்ந்து கவனிக்கலாம். கணக்கு வழக்குகளை சசிகலாவிடமே சமர்ப்பியுங்கள்!’ என்றாராம் முதல்வர். சசிகலா மீண்டும் ஸ்ட்ராங்காக கால் ஊன்றப்போகிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தில்!''

கழுகாருக்குத் தூதுவளை அடை எடுத்து வைத்தோம். ''தொண்டைக்கு இதமாக அன்பைப் பொழிகிறீர்களே...'' என்றவர் மீண்டும் சரவெடி செய்திகளை ஸ்டார்ட் செய்தார்...

''சசிகலா அறிக்கை வந்த அன்று, அறந்தாங்கி ராஜநாயகம், சீர்காழி சக்தி, அரியலூர் மணிவேல் உள்ளிட்ட 10 எம்.எல்.ஏ.க்களுக்குத் தனி அழைப்பாம். உதறலோடு உள்ளே போனவர்களுக்கு செம டோஸ் விழுந்ததாம். 'உங்களின் எம்.எல்.ஏ. பதவியைப் பறிக்க முடியாது என நினைக்காதீர்கள். உங்களைப் பற்றிய கம்ப்ளீட் ரிப்போர்ட் என்னிடம் இருக்கிறது. உங்களிடம் ராஜினாமா கடிதத்தை வாங்கவேண்டிய விதத்தில் வாங்கி, 10 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவும் நான் தயங்க மாட்டேன். கட்சி என்றால் நான்தான். மன்னார்குடி உறவுகளை நீங்கள் இனியும் கைகழுவாவிட்டால், என் முடிவு அதிரடியாக இருக்கும்’ என சீறித்தள்ளினாராம் முதல்வர். புதுக் கோட்டை மாவட்ட நிர்வாகிகளை அழைத்த முதல்வர், குறிப்பிட்ட ஓர் இளைய தலைமுறைப் பொறுப்பாளரைக் காட்டி, 'இவர்தான் மிக நேர்மையாகவும் உண்மையாகவும் இருக்கிறார். ஆனால், வேறு நிர்வாகிகள் யாரும் கட்சிக்கு விசு வாசியாக இல்லை’ என்றாராம். 'அவருடைய 1-ம் எண் கொண்ட கார் வாரத்துக்கு மூன்று தடவை மன்னார்குடியே கதியெனக்கிடந்தது எல்லாம் அம்மாவுக்குத் தெரியாமப்போச்சே...’ எனப் புலம்பு கிறார்கள் இதர நிர்வாகிகள். சேலம் மாவட்ட நிர்வாகிகளுக்கு வித்தியாசமான உத்தரவு வந்தது. 'இனி மன்னார்குடி உறவினர்களோடு எக்காரணம் கொண்டும் நட்பு வைக்க மாட்டோம்’ என எழுதி வாங்கச் சொல்லி இருக்கிறார்களாம்!''

''அரவணைப்பு ஒரு பக்கம்... அதிரடி இன்னொரு பக்கமா?''

''சரியாகச் சொன்னீர். பட்ஜெட் கூட்டத் தொட ருக்குப் பிறகு களையெடுப்பு நடக்க இருக்கிறது எனப் பல நாட்களாக செய்தி பரபரக்கிறது. ஆனால், சசிகலாவுடன் சமாதானம் கைகூடி இருக்கும் இந்த நேரத்தில் களையெடுப்பு நடந்தால் உறவுகளுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்ட நிர்வாகிகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். மாவட்டச் செயலாளர்கள் மாற்றமும் நிச்சயம் இருக்குமாம். மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் பொறுப்பில் இருந்து செந்தில்நாதனை நீக்கி இரண்டு மாதங்களுக்கும் மேலாகிறது. ஆனாலும், அந்தப் பொறுப்புக்கு ஆள் நியமிக்கப்படவில்லை. உளவுத் துறை தேர்ந்தெடுத்துக் கொடுத்த நான்கு பேர் பட்டியலில் அம்மையாருக்கு ஒருவருமே உடன்பாடு இல்லையாம். அதற்கும் சீக்கிரமே ஆள் நியமிக்கப்படலாம் என்கிறார்கள்!'' என்ற கழு காருக்கு வித்தியாசமான ரிங்டோனில் கால்.

வணக்கம் வைத்து விட்டு விடை பெற்றார்!

வேலூர் சிறையில்  நடந்தது என்ன?

மிஸ்டர் கழுகு: ''அவங்க ரெண்டு பேரையும் விடாத... பிடி!''

ராஜீவ் கொலை வழக்குக் கைதிகள் வேலூர் சிறையில் இருந்தனர். முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் தூக்குத் தண்டனைக் கைதிகள். ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், நளினி ஆகியோர் ஆயுள் தண்டனைக் கைதிகள். கடந்த மார்ச் 27-ம் தேதியன்று திடீரென வேலூரில் இருந்த ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் சென்னை புழல் சிறைக்கு மாற்றினர் அதிகாரிகள்.  

இதுபற்றி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, ''நாங்கள் விசாரித்த வரையில், இரண்டு விதப் பிரச்னை களைச் சொல்கிறார்கள். ஒன்று, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட கைதிகளுக்கும்... தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கைதிகளுக்கும் இடையே புகைச்சல். இன்னொன்று, தூக்குத் தண்டனைக் கைதிகளுக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. இதனால், இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொண்டார்களாம். 15 நாட்கள் முன், இவர்கள் போட்ட சண்டையைப் பார்த்து மிரண்டு போனார்களாம் ஜெயில் அதிகாரிகள். இதுபற்றி, சென்னையில் உள்ள சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி-யான டோக்ராவுக்குத் தகவல் சொல்லி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய இருவரையும் மாற்றி விட்டனர்'' என்கிறார்கள்.