என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

தலையங்கம் - விபரீத விளையாட்டு

தலையங்கம் - விபரீத விளையாட்டு

தலையங்கம் - விபரீத விளையாட்டு
தலையங்கம் - விபரீத விளையாட்டு

'எண்ணித் துணிக கருமம்' என்றான் வள்ளுவன். கடும் எச்சரிக்கையோடு தன்னால் வெளியேற்றப்பட்ட தோழி சசிகலாவை அடுத்த நூறே நாட்களில் மறுபடி தன்னோடு சேர்த்துக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா இதைத் துளியாவது எண்ணிப்பார்த்தாரா, தெரியவில்லை!

'என் பெயரைச் சொல்லித் தவறுகள் செய்கிறார்கள். கட்சிக்குத் துரோகம் செய்கிறார்கள். ஆட்சிக்கு ஊறு செய்கிறார்கள்' என்றெல்லாம் கடுமையாக அறிக்கைவிட்டு, தோழியையும் அவரைச் சார்ந்தவர்களையும் கட்டம் கட்டிய ஜெயலலிதா, தன் கட்சிக்காரர்களுக்கு விடுத்த எச்சரிக்கை அதைவிடப் பலமானது. 'நாங்கள் மீண்டும் கட்சியில் இணைந்துவிடுவோம். எங்களைப் பகைத்துக்கொண்டால் மீண்டும் கட்சியில் இணையும்போது உங்களைப் பழிவாங்கிவிடுவோம் என்று மிரட்டும் துரோகிகளுக்கு மன்னிப்பே கிடையாது' என்று கட்சியின் பொதுக் குழுவில் அவர் காட்டிய ஆவேசத்தைக் கண்டு, தொண்டர்கள் எல்லாம் சிலிர்த்துப்போனது உண்மை. அன்று மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தவர்கள் எல்லாம் இன்று அதிர்ச்சியில் உறைந்துபோய் இருப்பது அதைவிடப் பலமான உண்மை. இப்போது பச்சைக் கொடி அசைக்கப்பட்டு இருப்பது தோழிக்கு மட்டும்தானா... அல்லது, காலப்போக்கில் மற்றவர்களிடமும் 'கண்ணீர்க் கடிதம்’ வாங்கிக்கொண்டு 'பாவ மன்னிப்பு' வழங்கப்படுமா என்று அமைச்சர் தொடங்கி அடிமட்டத் தொண்டன் வரையில் குழம்பித் தவிக்கிறார்கள். கட்சிக்காரர்கள் இருக்கட்டும்... காவல் துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் நிலைமை அதைவிடப் பரிதாபம்!

மேலிடத்து உத்தரவை சிரமேற்கொண்டு, அந்த நேரத்துக் கோபத்தின் கருவிகளாக மாறி, கடும் நடவடிக்கை எடுத்தவர்கள் இப்போது கையைப் பிசைந்து, நடுநடுங்கி நிற்பது கண்கூடு.

நட்புகள் பிரிவதும் மறுபடி கூடுவதும் அவரவரின் தனிப்பட்ட விவகாரம் என்று ஒதுக்க முடியவில்லையே இதை? சட்டத்தையும் அரசு இயந்திரத்தையும் அதிகாரிகளின் விலை மதிப்பற்ற நேரத்தையும் ஒப்புக்குச் சப்பாணி ஆக்கிவிட்டல்லவா இந்த விளையாட்டு மீண்டும் மீண்டும் நடக்கிறது?!