என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

முத்துக்குமரன்... தமிழகத்தின் இழப்பு!

நமது நிருபர்படம் : பா.காளிமுத்து

##~##

த்து வருடங்களுக்கு முன்... புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால், ஒரு சைக்கிளில் சிவப்புத் துண்டோடு வந்து இறங்கிவிடுவார் முத்துக்குமரன். அவரை அரசியல்வாதி எனச் சொன்னால், இன்றைய அரசியல்வாதிகள் கோபிக்கலாம். அப்படி ஓர் எளிமையான போராளி!

 கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது, புதுக்கோட்டைத் தொகுதிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக அறிவிக்கப் பட்ட முத்துக்குமரன் பிரசாரத்தில் இருந்தார். சிவப்புத் துண்டும் சிரித்த முகமுமாக ஒரு சைக்கிளில் வந்தவரிடம், ''பத்து வருசமா அப்படியே இருக்கீங்களே தோழர்?'' என்றதும்... ''இந்த சைக்கிள்கூட என்னது இல்ல... இன்னொரு தோழருடையது. பணம் காசை அள்ளி இறைச்சாதான் சட்டமன்றத்துக்குப் போக முடியும்னா, அது ஜனநாயகத்தை விலை பேசுற மாதிரி ஆகிடும். என் கட்சி என்னை அப்படி வளர்க்கலை தோழர்!'' என்றார் வெள்ளந்தியாக.

முத்துக்குமரன்... தமிழகத்தின் இழப்பு!

சர்வ எதிர்ப்புகளையும் மீறி அவர் புதுக்கோட்டையில் வென்ற போது, அது அடித்தட்டு மக்கள் ஒவ்வொருவருக்குமான வெற்றி யாக இருந்தது. முத்துக்குமரனின் மனைவி சுசீலா விழுப்புரம் நீதிமன்றத்தில் எழுத்தர். நெடுவாசலில் முத்துக்குமரன், விழுப்புரத்தில் மனைவி, புதுக்கோட்டையில் மகள்கள் என சிதறிக் கிடந்தது குடும்பம். 'அக்காவுக்கு புதுக் கோட்டை பக்கம் டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொடுத்துட்டா, குடும்பத்தோட ஒண்ணா இருக்கலாமே’ என உள்ளூர்க்காரர்கள் சொன்னபோது, 'பொண்டாட்டிக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கத்தான் என்னை எம்.எல்.ஏ. ஆக்கினாங்களா?’ என்றாராம்.

பிரசார நேரத்தில் முத்துக்குமரனுக்காகப் பெரிதும் பாடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் சி.மகேந்திரன், ''ஒரு புள்ளையப் பறிகொடுத்த மாதிரி இருக்குப்பா. முத்துக்குமரன் மீது எங்க எல்லோருக்குமே நல்ல அபிப்ராயம் உண்டு. அவருக்காக பிரசாரத்துக்குப் போனப்ப, அந்த மக்கள் அத்தனை பேரும் ஒண்ணுசேர்ந்து உழைச்சதைப் பார்த்து திகைச்சுப்போயிட்டேன். தானே களத்தில் நிக்கிற மாதிரி மாணவர்கள்ல தொடங்கி வியாபாரிகள் வரைக்கும் கஷ்டப்பட்டாங்க. உண்மையாகவே ஒரு தோழராக நான் நெஞ்சை நிமிர்த்திப் பெருமிதப்பட்ட நேரம் அது. இரண்டாம் தேதி நானும் அவரும் சென்னையில் சந்திக்கிறதாப் பேசி இருந்தோம். மணிமணியா அவர் பேசும் வார்த்தைகளை இனி கேட்க முடியாதே... சட்டமன்றத்தில் அவர் வைக்கும் வாதங்களும் கேள்விகளும் மிக அழுத்தமானவை. 24 மணி நேரம் போதாது என உழைத்த ஒரு தோழரை இவ்வளவு சீக்கிரத்தில் இழந்துவிட்டோமே!'' என் கிறார் கதறலாக.

சட்டமன்றத்தில் முத்துக்குமரனுக்கு அருகே அமர்ந்து இருந்தவர் பா.ம.க-வின் இளம் உறுப்பினர் கணேஷ். ''சட்டமன்றத்தில் புதிதாகக் கால் வைத்தபோது எனக்கு எதுவுமே புரியவில்லை. முத்துக் குமரனும் புதுமுகம்தான். ஆனால், அவர் சட்டசபை நடவடிக்கைகளில் பங்கெடுத்த விதம் பல ஆண்டுகள் அனுபவம்கொண்ட வர்போல் இருக்கும். ஆளுநர் உரை தொடங்கி வெட்டுத் தீர்மானம் வரை எப்போது, எப்படிப் பேசுவது என்பது வரை நான் கற்றுக்கொண்டது அவரிடம்தான். பொதுவான பிரச்னைகளில் பேசுவதைக் காட்டிலும், தொகுதி சார்ந்த பிரச்னைகளையே அதிகமாகப் பேசுவார். 'தொகுதிப் பிரச்னைகளை எழுதிக் கொடுத் தாலே போதுமே’ என்பவர்களிடம், 'எழுத் துக்களால் சொல்றதுக்கா நம்மளை மக்கள் எம்.எல்.ஏ. ஆக்கி இருக்காங்க. நம்ம பிரச்னைகளுக்காக நாமதான் குரல் கொடுக் கணும். தொகுதி மக்களோட கஷ்டத்தைத் தொண்டை வலிக்கச் சொல்லி, உரிய அமைச்சர்களின் கவனத்தைத் திசை திருப்பத்தான் நாம இங்கே வந்திருக்கோம்’பார். புதுக்கோட்டைத் தொகுதியில் உள்ள அத்தனை ஏரியாக்களும் இப்போதைய சட்டமன்றத்துக்கு அத்துப்படியாகத் தெரியும். அந்த அளவுக்கு தொகுதிக்காகப் பேசியவர்!'' என்கிறார் கண் கலங்க.

முத்துக்குமரனின் உடல் நெடுவாசல் கிராமத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, அதனை வைக்கக்கூட அவர் வீட்டில் இடம் இல்லை. எம்.எல்.ஏ. ஆன பிறகும் பஸ்ஸிலேயே பயணித்த முத்துக்குமரனுக்கு நெடுவாசல் கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

''தூரமாகப் பயணிக்கும்போது காரில் ஏ.சி. போட்டால், 'கண்ணாடியை ஏத்திவிட்டுக்கிட்டு ஏ.சி-யில் திரியத்தான் நான் எம்.எல்.ஏ. ஆனேனா?’ என்பாராம். சம்பவம் நடந்தபோது கார் கண்ணாடி ஏற்றிவிடப் பட்டு இருந்தால் நிச்சயம் லேசான அடியோடு தப்பி இருப்பார். ஏற்றாத கண்ணாடி வழியே தலை மட்டும் வெளி யேறி அடிபட்டதால்தான் இப்படிக் கோரமாகிவிட்டது. சாகும் வரை எளிமை யைக் கடைப்பிடிக்க நினைத்த முத்துக் குமரனின் மரணத்துக்கும் அந்த எளிமையே காரணமாகிவிட்டதே!'' என்கிறார் பட்டுக்கோட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரெங்க ராஜன்.  

பட்ஜெட் கூட்டத் தொடரில் மிகச் சிறப்பாகப் பேசிய முத்துக்குமரனை சபாநாயகர் ஜெயக்குமார் பாராட்டியபோது, ''ஒரு சட்டமன்ற உறுப்பினர் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்கு முத்துக்குமரனே ஒரு முன்மாதிரி!'' என்றார்.

இது, தமிழகத்தின் இழப்பு!