Published:Updated:

மிஸ்டர் கழுகு: துரைமுருகனின் ரெட்டை டம்ளர்!

மிஸ்டர் கழுகு: துரைமுருகனின் ரெட்டை டம்ளர்!

##~##

''அரசியல் கூட்டணிக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் தொடங்கி விட்டன'' - என்ற படியே உள்ளே நுழைந்தார் கழுகார். 

''2014-ல்தானே நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. அதற்குள் கூட்டணியா?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தல் நடைபெறப் போகிறது. இப்போதைய ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக் காலம் வரும் ஜூலையோடு நிறைவடைகிறது. 2014-ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெற் றாலும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்போகிறவர் இந்தப் புதிய ஜனாதிபதிதான். அந்தத் தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் போனால், ஜனாதி பதியின் ரோல் மிக முக்கியமானதாக இருக்கும். அந்த நேரத்தில் தனக்கு வேண்டப்பட்ட அல்லது தனது கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்று இப்போதே காங்கிரஸும் பி.ஜே.பி.யும் கணக்கு போட்டுக் காய்களை நகர்த்தத் தொடங்கி இருக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பவில்லை என்று பிரதீபா சொல்லி விட்டதால், வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது காங்கிரஸ்.''

மிஸ்டர் கழுகு: துரைமுருகனின் ரெட்டை டம்ளர்!

''பி.ஜே.பி. முன்னணித் தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான அருண் ஜெட்லி, ஜெயலலிதாவைச் சந்தித்திருப்பதும் ஜனாதிபதித் தேர்தலுக்காகத்தானா?''

''ம்! கடந்த 3-ம் தேதி திடீரென்று கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார். 'ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டும்’ எனச் சொல்லி பிரதமருக்கு கடந்த வாரம் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார் அல்லவா! இது, பி.ஜே.பி.யின் அட்சரசுத்தமான கோரிக்கை. அதற்காக ஜெயலலிதாவை நேரில் சென்று வாழ்த்துச் சொல்ல நினைத்ததாம் பி.ஜே.பி. தலைமை.

மிஸ்டர் கழுகு: துரைமுருகனின் ரெட்டை டம்ளர்!

அதோடு ஜனாதிபதித் தேர்தல் கூட்டணிக்கும் தேதி குறித்து விடலாம் என்று கணக்கு. ராமர் பாலத்தை வைத்து கூட்டணிப் பாலத்தைக் கட்ட நினைக்கிறது பி.ஜே.பி. ஜனாதிபதித் தேர்தலில் மாநிலக் கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதால், தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிடத் துடிக்கிறது பி.ஜே.பி. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரதீபா பாட்டிலை எதிர்த்து பி.ஜே.பி. சார்பில் ஷெகாவத் நிறுத்தப்பட்டார். ஆனால், கலாமை மீண்டும் நிறுத்த ஜெயலலிதா உருவாக்கிய மூன்றாம் அணித் தலைவர்கள் முயற்சி எடுத்துத் தோல்வி அடைந்தார்கள். அதனால், அ.தி.மு.க. எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் ஷெகாவத்துக்கு ஓட்டுப் போட் டார்கள். அந்தப் பழைய பாசம் தொடரும் என்று நினைக்கிறதாம் பி.ஜே.பி.''

''ஆமாம்... ஞாபகம் இருக்கிறது. 'எனக்குத் தெரி யாமல் என் கட்சிக்காரர்கள் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போடப் போய்விட்டார்கள்’ என்று பரபரப்பு அறிக்கை எல்லாம் விட்டாரே ஜெயலலிதா.''

''இந்த முறை அப்படி எல்லாம் நடக்காது. ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு பற்றி ஜெயலலிதா உறுதியாக எதுவும் சொல்லவில்லை. பி.ஜே.பி. மீது கொஞ்சம் பாசம் இருந்தாலும், ஜனாதிபதித் தேர்தலுக்காக காங்கிரஸ் தன்னிடம் வந்து கெஞ்சும் என்றும் நினைக்கிறார் ஜெயலலிதா. கிட்டத்தட்ட அதே நிலையில்தான் காங்கிரஸும் இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டாலும் வெற்றி பெறுவதற்கு மாநிலக் கட்சிகளின் தயவு தேவை. காங்கிரஸ் இறங்கி வரும்போது மாநிலத்துக்கான கோரிக்கைகளைக் கேட்டுப் பெறுவதோடு, மத்தியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வுக்கு, காங்கிரஸ் மூலமே செக் வைக்க நினைக்கிறாராம் ஜெயலலிதா.''

''யார் வேட்பாளர்கள்?''

''அதுபற்றி பி.ஜே.பி.யும் காங்கிரஸும் தனித்தனியே பேசிக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த முறை அப்துல் கலாமுக்கு இரண்டாவது முறையாக வாய்ப்பு அளிக்க காங்கிரஸ் மறுத்தது. அதை எதிர்க் கட்சிகள் அப்போது பிரசாரம் செய்ததால், துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரியை அறிவித்தது. இந்த முறை, ஹமீத் அன்சாரியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தலாம் என்று பேச்சு அடிபடுகிறது. அதேசமயம், குஜராத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் சாம் பிட்ராடோவை நிறுத்தவும் பேச்சு நடக்கிறது. இவர், ராஜீவ் காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். கேரளா கம் கிறிஸ்தவ லாபி சோனியாவைச் சுற்றிலும் இருப்பதால், அவர்கள் தங்களது தரப்பு ஆள் யாரையாவது உள்ளே நுழைக்க நினைக்கிறார்கள். சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலும் அதே ஆசையுடன் இருக்கிறார். கடந்த முறை ஜனாதிபதியைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்கு வகித்த கருணாநிதி இந்தத் தடவை அமைதியாக இருக்கிறார். அவரது யோசனை என்ன என்று இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஜெட்லி சந்திப்பை வைத்துப் பார்த்தால், காங்கிரஸுக்கு லேசாகப் போக்குக் காட்டிவிட்டு பி.ஜே.பி. வேட்பாளரை ஜெயலலிதா ஆதரிப்பார் என்பதே இன்றைய நிலவரம்!'' என்று சொன்ன கழுகாருக்கு, வெயிலுக்கு இதமாக தர்பூசணி ஜூஸ் வைத்தோம்.  

''சண்டையும் இல்லாமல் சாந்தமும் இல்லாமல் நடந்துகொண்டு இருக்கிறது சட்டசபை. ஆளும் கட்சிக்கு ஆதரவாகத் தொடர்ந்து சட்டசபையில் குரல் கொடுத்து வருகிறார் சரத்குமார். 'கடந்த தி.மு.க. ஆட்சியில் நிறையத் திட்டங்கள் போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததோடு சரி... திட்டங்கள் நிறைவேறவில்லை. நாங்குநேரி தொழில் பூங்கா போன்றவை செயல்படவில்லை’ என்று தி.மு.க.வுக்கு எதிராக கருத்துச் சொன்னார் சரத்குமார். இந்த விவாதம் முடிந்த பிறகு சட்டசபைக்கு வெளியே தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், 'விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம் கட்டுவோம் என்று சொல்லி, அதற்காக 2010-ம் ஆண்டு பூமிபூஜை எல்லாம் போட்டார். அதைக்கூட ஒழுங்காகக் கட்ட முடியாதவருக்கு, எங்களைப் பற்றி பேசத் தகுதி இருக்கா..?’ என்று கமென்ட் அடித்தார்கள்.''

''அது அவர் காதில் விழுந்ததா?''

''தெரியவில்லை! பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசுவதற்காக நிறைய ஹோம்ஒர்க் பண்ணி அவைக்கு வந்தார் துரைமுருகன். அவர் பேசுவதற்கு முன்பு தயாராக இரண்டு டம்ளரில் தண்ணீரை வைக்கச் சொல்லி இருந்தார். நிதிநிலை பற்றிய புள்ளிவிவரங்களை எழுதிவைத்துப் பேசினார். அந்தத் தாளைப் புரட்டுவதற்கு, தொடுவதற்காக  ஒரு டம்ளரில் இருந்த தண்ணீரைப் பயன்படுத்தினார்.  இன்னொரு டம்ளரில் இருந்த தண்ணீரைக் குடிப்பதற்குப் பயன்படுத்தினார். துரைமுருகனின் இந்த இரட்டைக் குவளை முறையை ஆளும் கட்சிக்காரர்களும் ரசித்தார்கள். துரைமுருகன் பேசும்போது அமைச்சர்கள் குறுக்கிட்டு விளக்கம் அளித்துக்கொண்டு இருந்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த துரைமுருகனைப் பார்த்து, 'கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா பேசும்போது, 35 முறை குறுக்கிட்டார்கள்’ என்றார் சபாநாயகர் ஜெயக்குமார். உடனே, பக் கத்தில் இருந்து சட்டசபைச் செயலாளர் பதறியடித்து சபாநாயகரிடம் சென்று '65 முறை’ என்று தகவல் சொன்னார். அதற்குள் ஜெயலலிதாவே எழுந்து '65 முறை குறுக்கிட்டார்கள்’ என்று டைமிங்கில் அடித்தார்.''

''ஜெயலலிதாவுக்கு ஞாபக சக்தி அதிகம்தான்.''

''குண்டு பல்புக்குப் (இழை பல்புகள்) பதிலாக 14 லட்சம் குடிசை வீடுகளுக்கு சி.எஃப்.எல். பல்புகள் வழங்குவோம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதுதொடர்பான விவாதம் சட்டசபையில் நடைபெற்றது. அதற்குப் பதில் அளித்த மின்சாரத் துறை அமைச்சர் 'குண்டு பல்புகளைத் தடை செய்ய முடியாது. அதை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி விழிப்பு உணர்வுப் பிரச்சாரம் செய்து வருகிறோம்’ என்றார். சட்டசபையில் தொங்கவிடப்பட்டு இருக்கும் அலங்கார விளக்குகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குண்டு பல்புகள்  இருக்கின்றன என்பதை எந்த உறுப்பினரும் ஞாபகப்படுத்தவில்லை!''

''உம்முடைய ஞாபக சக்தி அபாரம்தான். அதுசரி, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பே புதுக்கோட்டைக்கு இடைத் தேர்தல் நடைபெறுமா?''

''அதுபற்றி தெரியவில்லை. ஆனால், புதுக்கோட்டைக்காக சட்ட சபையில் நடந்த ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். மின் கட்டண உயர்வு குறித்துப் பேசுவதற்கு எதிர்க்கட்சிகள் எழுந்த சமயத்தில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனால், அவர்கள் வெளிநடப்பு செய்தார்கள். தே.மு.தி.க., தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பில் பங்கேற்றன. மக்கள் பிரச்னைக்குக் குரல் கொடுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் வெளிநடப்பில் பங்கேற்கவில்லை. புதுக்கோட்டைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. முத்துக்குமரன் இறந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறதாம் அந்தக் கட்சி. அதற்காகத்தான் அரசுக்கு எதிராக வெளிநடப்பில் பங்கேற்கவில்லையாம்'' என்ற கழுகார், ''பெயர்கள் வேண்டாம்'' என்றபடியே அடுத்த செய்தியை ஆரம்பித்தார்...

மிஸ்டர் கழுகு: துரைமுருகனின் ரெட்டை டம்ளர்!

''டெல்லியில் இருக்கும் முக்கிய அரசியல் தலையின் மகள் இப்போது மன உளைச்சலில் இருக்கிறாராம். காரணம். அவர் கணவர். சமீபத்தில் நடந்த தேர்தலில் அவருடைய ரோலும் இருந்தது. அதன்பிறகு, பிரசாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். இதற்கு காரணமே அந்த அரசியல் தலையின் தலையீடுதான் என்று காரணம் சொல்லப்பட்டது. இப்போது அவர் தனது மனைவியை விவகாரத்து செய்ய முடிவு எடுத்து, அதற்கான நோட்டீஸ் அனுப்பி விட்டதாக ஒரு தகவல் டெல்லியைக் கிர்ர்ர்ர்ரடிக்கிறது.''

''வீட்டுக்கு வீடு வாசப்படி!''

''நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிவிட்டு சென்டர் ஹாலுக்கு வந்த கனிமொழியிடம் சக தி.மு.க. எம்.பி.க்கள் 'பிரமாதமாகப் பேசியிருக்கிறீர்கள். ட்ரீட் எதுவும் இல்லையா?’ என்று கேட்டார்கள். உடனே அங்கேயே பால்கோவா வரவழைத்து எல்லோருக்கும் கொடுத்தார். என்ன விசேஷம் என்று வட இந்திய எம்.பி.க்கள் எல்லாம் விசாரித்தது சுவாரசியம்.''

''ஆனால், ஸ்பெக்ட்ரம் வழக்கு மறுபடியும் சூடு பிடிக் கிறதே?''

'' உச்ச நீதிமன்றம் வழங்கி இருக்கும் தீர்ப்பு, ஆ.ராசா உள்ளிட்ட வர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 122 தொலைத் தொடர்பு உரிமங்களையும் ரத்து செய்தது. இதனால், அந்த நிறுவனங்களும் அதற்கு லைசென்ஸ் கொடுத்த அமைச்சர் ராசாவும் மத்திய அரசும் அதிர்ச்சி அடைந்தது. இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யச் சொல்லி, உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டார்கள். உரிமம் பெற்ற நிறுவனங்களும் மனு போட்டன. ராசாவும் மனுத்தாக்கல் செய்தார். மத்திய அரசும் தாக்கல் செய்தது. நிறுவனங்கள் மற்றும் ஆ.ராசா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து விட்டது. மத்திய அரசின் மனுவை மட்டும் ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தப்போகிறது. இதில் என்ன தீர்ப்பு வருமோ என்று பலரும் உறைந்து கிடக்கிறார்கள். மேலும், ப.சிதம்பரத்தை உள்ளடக்கி சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த மனுவையும் சீரியஸாக விசாரிக்கப் போகிறது உச்ச நீதிமன்றம். மறுபடி மீடியாக்களில் ஸ்பெக்ட்ரம் வரும் நேரம்!'' என்று சொல்லிப் பறந்தார் கழுகார்!  

மறுக்கிறார் மகாதேவன் 

ஜூ.வி. 1-4-2012 இதழில், 'மண் குதிரையை மிதித்த யாகக்குதிரை’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு தனது வழக்கறிஞர் மூலம் விளக்கம் தெரிவித்து இருக்கிறார் டி.வி.மகாதேவன். கொடைக்கானல் அடிவாரத்தில் பூம்பாறை என்ற இடத்தில் தான் குதிரையாகம் நடத்தியதாக வெளியான செய்தி தவறானது என்றும், எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாதது என்றும் பூம்பாறை என்ற இடத்துக்கு தான் போனதும் இல்லை... அப்படி ஒரு இடம் இருப்பதும் தெரியாது என்றும் கூறியிருக்கிறார் மகாதேவன்.

மிஸ்டர் கழுகு: துரைமுருகனின் ரெட்டை டம்ளர்!