Published:Updated:

புதுக்கோட்டையில் ஆளும் கட்சி சுறுசுறு!

'7 பேர் பட்டியல் கொடுங்க...''14 பேர் பட்டியலைத் தாங்க!'

பிரீமியம் ஸ்டோரி
##~##

ங்கரன்கோவில் சடுகுடு சப்தம் குறைவதற்குள் புதுக்கோட்டை இடைத்தேர்தல் வந்துவிட்டது! 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் புதுக்​கோட்டைத் தொகுதியில் இந்தியக் கம்யூ​னிஸ்ட் கட்சியின் வேட்பாளர் முத்துக்குமரன் வெற்றி பெற்றார். மிகக்குறுகிய காலத்தில் நல்ல பெயர் வாங்கிய எம்.எல்.ஏ-க்களில் ஒருவராக வலம் வந்தார். ஆனால், எதிர்​பாராத விபத்து, அவரது மரணத்தைத் துரிதப்படுத்தி விட்டது. அதனால், தனது புதிய பிரதிநிதியைத் தேர்ந்து எடுப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கி விட்டது புதுக்கோட்டை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி முடிவு செய்யப்படும் முன்,புதுக்கோட்டைத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.கருப்பையாவை அறிவித்து இருந்தார் ஜெயலலிதா. அடுத்த நாளே இந்தத் தொகுதி, கூட்டணிக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட்டுக்கு  ஒதுக்கப்பட்டது. இதனால் முத்துக்குமரன் வேட்பாளர் ஆனார். தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளரும், அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளருமான பெரியண்ணன் அரசுவை சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.  

புதுக்கோட்டையில் ஆளும் கட்சி சுறுசுறு!

முத்துக்குமரன் இறந்த சோகத்தை மக்கள் மறப்பதற்குள், செயல் வீரர்கள் கூட்டம் நடத்தி, அதற்கு ஐந்து அமைச்சர்களையும் வரவழைத்து தேர்தல் பரபரப்பைக் கிளப்பி விட்டது ஆளும் கட்சி.

புதுக்கோட்டை அய்யா திருமண மண்டபத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், கே.பி. முனுசாமி, சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  

முன்னதாகப் பேசிய நாடாளுமன்ற உறுப்​பினர் குமார் தொடங்கி அத்தனை பேரும், ''ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும்'' என்று சூளுரை செய்தனர். அடுத்துப் பேசிய மாவட்டச் செயலாளரும், விராலிமலை எம்.எல்.ஏ-வுமான விஜயபாஸ்கர், ''இந்த மாவட்டத்துத் தொண்டர்கள் எல்லோரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக் காளைகள் போலவும், துப்பாக்கியில் இருந்து சீறும் தோட்டாக்கள் போலவும் தயாராக இருக்கிறோம். அம்மாவும் அமைச்சர்களும் இடும் கட்டளையை உடனே நிறைவேற்றுவோம்'' என்று குரல் உயர்த்தினார்.

அடுத்துப் பேசிய அமைச்சர்கள், சுப்ரமணியன், கே.பி.முனுசாமி, செங்கோட்டையன் ஆகியோர் வழக்கமான அம்மா புராணத்தைப் பாடிவிட்டு, ''அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்'' என பேசினார்கள்.

அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ''களத்தில் கதிர் விளைந்து அறுவடைக்குக் காத்திருக்கிறது. இடையில் திருடர்கள் புகுந்து திருடி விடாமல் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்போது எதிர்க் கட்சியினர் நம் மீது வைக்கும் ஒரே பிரச்னை, தற்காலிகமாக ஏற்பட்டு இருக்கும் மின்சாரப் பற்றாக்குறை மட்டும்தான். கடந்த ஆட்சியில் இருந்தவர்கள் மக்கள் மீது அக்கறை செலுத்தாமல், தனது குடும்பத்தையே ஐந்து வருடங்களாகப் பார்த்துக்கொண்டு இருந்ததால்தான், இந்த அளவுக்கு மின்சாரப் பற்றாக்குறை வந்து இருக்கிறது. இதுவும் இன்னும் இரண்டு மாதங்களில் படிப்படியாகக் குறைக்கப்படும். அம்மா அவர்களின் ஆட்சியில் கொண்டுவந்த நலத் திட்டங்களைப் பற்றி மக்களிடம் பேசுங்கள். அப்போதுதான் மின் பற்றாக்குறை பற்றி எழுப்பப்படும் பிரசாரம் எடுபடாமல் போகும்'' என்று ஐடியா கொடுத்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ''புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் 16 லட்சம் தொண்டர்​களுடன் இருந்த நமது கட்சி, இன்று 1.5 கோடித் தொண்டர்​களுடன் இருக்கிறது. அப்படி நமது கட்சியைக் கட்டிக் காப்பாற்றி இருக்கிறார் அம்மா. கடந்த சட்டமன்றத் தேர்தலில், வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து நம்முடன் சிலர் கூட்டணி வைத்துக் கொண்டனர். அவர்களுக்கு நல்ல பலனும் கிடைத்தது. அவர்கள் அடுத்த சில நாட்களுக்கு உள்ளாகவே நம்மைத் தனித்து விட்டார்கள். ஆனாலும், அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிக வெற்றிகளைப் பெற்றுக் காட்டினோம். சமீபத்தில் நடந்து முடிந்த சங்கரன்கோவில் இடைத்தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். அதேபோன்று புதுக்கோட்டையையும் அம்மாவின் கோட்டையாக மாற்ற வேண்டும்'' என்றார்.

கூட்டம் முடிந்த கையோடு அங்கேயே மதிய உணவை முடித்துக்கொண்ட அமைச்சர்கள், ரோஸ்லேண்ட் சென்றார்கள். அங்கு, 'நீங்களாகவே ஏழு நபர்களைத் தேர்வு செய்து சொல்லுங்கள்’ என்று மாவட்டச் செயலாளர் மற்றும் நிர்வாகிகளிடம் அமைச்சர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் போட்டியிட விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்ததால், '14 நபர்களின் பெயரைச் சொல்லுங்கள்’ என்று சொன்னார்கள். ஆனால், இப்போதே 25-க்கும் மேற்பட்டவர்கள் மனு கொடுத்து விட்டார்கள். விரைவில் 100 என்ற எண்ணிக்கையைத் தாண்டும் என்கிறார்கள்.

இதில், எக்ஸ் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியன், முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.சி ராமையா, 2001 தேர்தலில் ஜெயலலிதாவுக்காக புதுக்கோட்டையில் வேட்பு மனுத் தாக்கல் செய்த நகரச் செயலாளர் பாஸ்கர், முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன், தற்போதைய நகர்மன்றத் தலைவர் கார்த்திக் தொண்டைமான், முன்னாள் மாவட்டச் செயலாளர் கருப்பையா, செல்லத்துரை, நகர்மன்றத் துணைத் தலைவர் சேட், முன்னாள் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனின் மனைவி சுபத்ரா தேவி, இளைஞர் பாசறை சார்பில் ராஜசேகரன், இளைஞர் அணி சார்பில் கார்த்திக் பிரபாகரன் என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்னரே வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டுவிடும் என்பதுதான் அ.தி.மு.க-வின் இன்றைய நிலை.

அப்போ கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை?

-  வீ.மாணிக்கவாசகம்

படம்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு