Published:Updated:

இப்போ 10 இனிமே 20

பயமுறுத்திய விஜயகாந்த்

பிரீமியம் ஸ்டோரி
##~##

மிழ்நாடு சட்டசபையில் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திருவண்ணா​மலையில் தீப்பந்தமாக வெளுத்து வாங்கிவிட்டார் விஜயகாந்த். ''இப்படி ஒவ்வொரு ஊரா போய் கேப்டன் பேசினாலே போதும்... கட்சியை வளர்த்துடலாம்'' என்று அவரது கட்சித் தொண்டர்களை துள்ளி எழவைத்துவிட்டது விஜயகாந்த்தின் ஆர்ப்பாட்டம்! 

பால், பஸ் மற்றும் மின் கட்டணங்களை வாபஸ் பெறக் கோரி, தே.மு.தி.க. சார்பில் திருவண்ணாமலையில் கடந்த சனிக்​கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு வரவேண்டிய விஜயகாந்த், இரண்டு மணி நேரம் லேட். வந்த உடனேயே மைக் பிடித்து விட்டார்.

''இந்த ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலைக்கு மட்டும் அல்ல... தமிழ்நாடு முழுவதும் நிலவும் பவர்கட்டுக்கான ஆர்ப்​பாட்டம். பவர் கட் என்றால் அவங்களோட 'பவர் கட்’ இல்லை, கரன்ட் கட். எனக்கும் சிவன் ஸ்தலங்களுக்கும் சம்பந்தம் இருக்கு. நான் மதுரையில் பிறந்தேன். அங்கே மீனாட்சி சுந்தரேஸ்வரர். இரண்டாவதா, நான் அரசியல் வாழ்க்கை ஆரம்பிச்சு எம்.எல்.ஏ. ஆனது விருத்தாசலத்தில். அங்கே விருத்தகிரீஸ்வரர். மூணாவதா, இப்ப எம்.எல்.ஏ. ஆனது ரிஷிவந்தியம். அங்கே அர்த்தநாரீஸ்வரர். அதுவும் சிவஸ்தலம். இந்த ஆர்ப்​பாட்டம் நடக்கிற இடமும் அண்ணா​மலையார் இருக்கிற இடம். சிவஸ்தலம். ஆக்கல், காத்தல், அழித்தல் கடவுள்களில், அழிக்கும் கடவுள் சிவன். மக் களை ஏமாற்றினால், சிவன் அழிப்பார்.

இப்போ 10 இனிமே 20

100 யூனிட் மின்சாரத்துக்கு 70 ரூபாய் என்று இருந்ததை, 130 ரூபாயாக மின்சார ஒழுங்கு​முறை ஆணையம் உயர்த்தி இருக்கு. சட்டசபையில் நாங்கள் கவன ஈர்ப்புத் தீர் மானம் கொண்டுவந்ததும், 10 ரூபா குறைச்சுட்டேன்னு ஜெயலலிதா சொல்றாங்க. அதாவது 10 ரூபாய் மானியமாத் தர்றோம்னு சொல்றாங்க. மந்திரிங்க... அவங்க அப்பா பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுக்கப்போறீங்களா? அதை மக்களிடம் வேற ஏதோ ரூபத்தில வரியா வசூலிச்சு கொடுக்கப் போறீங்க.

ஏன் கரன்ட் ரேட்டைக் குறைக்க முடியாதா? நாங்க 10 வருஷங்களாக்  கூட்டவே இல்லைன்னு சொல்றாங்க. 10 வருஷமாக் கொள்ளை அடிச்சதைத் திருப்பிக் கொடுப்பீங்களா? ஊழல் செஞ்சதைத் திருப்பிக் கொடுப்பீங்களா? கோடிக் கோடியா எவ்வளவு கொள்ளை அடிச்சீங்க? அதைத் திருப்பிக் கொடுங்க. மக்களும் இந்த விலை ஏற்றத்தைப் பற்றி பேச மாட்டாங்க. சரின்னு கஷ்டத்தோட கஷ்டமா எல்லாத்தையும் சுமப்பாங்க.

ஏழை எளியவங்க, குழந்தை குட்டிங்க, பெரியவங்க, நோயாளிங்க குடிக்கிறது பால். பஸ்ல போகாதவங்க யார் இருக்கா? கரன்ட் இல்லாம வீட்டுல உக்கார முடியுமா? மனுசனுக்கு ரத்தம் மாதிரிதான் கரன்ட்டும் முக்கியம். இதை சட்டசபையில பேச விட மாட்டேங்கிறாங்க. அவங்களைப் புகழ்ந்து புகழ்ந்து பேசுறவங்களை மட்டும் அனுமதிக்கிறாங்க. அதைக் கேட்கவா நாங்க சட்டசபைக்கு வர்றோம்? இத்தனை வருஷங்களா வரி போடலைன்னு சொல்லிட்டு இப்ப ஏன் 1,500 கோடிக்கு வரி போடுறீங்க? 40 வருஷக் கட்சியா இருந்துக்கிட்டு, சங்கரன்கோவில் தேர்தலில் ஏழு வருஷக் கட்சிக்குப் பயந்து ஓடுனீங்களே, அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம். பென்னாகரத்தில் அவங்க டெபாசிட் போனதைப் பத்திப் பேசினா பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க, இது என்னய்யா நியாயம்?

இவங்க மின்சார உற்பத்திக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கலை. இன்னமும் காற்றாலை, புனல் மின்சாரத்தையே நம்பி இருக்காங்க. இப்ப 10 மணி நேரம் கரன்ட் கட் பண்ணுறாங்க, அது, 20 மணி நேரமாக்கூட ஆகும். கரும்பு விவ சாயிங்களை அழ விடுறாங்க.. நெசவாளர்களை நசுக்குறாங்க.. இவங்களா மக்களைக் காப்பாத்தப் போறாங்க? அண்ணாமலையார் சத்தியமாச் சொல்றேன், காப்பாத்தப்போறது இல்லை.

சட்டசபையில பேச விட மாட்டாங்க. அதனாலதான் மக்கள் மன்றத்தி​லேயே பேசிடுவோம்னு பேசுறேன். கோர்ட்ல கேஸ் போட்டிருக்கேன். எதுக்காகப் போட்டிருக்கேன்னா... நான் எம்.எல்.ஏ-வா மக்களுக்குச் சேவை செய்யணுமா கூடாதானு கேட்டிருக்கேன். அதுக்கு நான் சென்னை லாயரைத்தான் வச்சிருக்கேன். அவங்க பயந்துக்கிட்டு டில்லி, மும்பைன்னு தேடி லாயரைப் பிடிச்சிருக்காங்க. மடியில கனம் இருந்தால்தான், வழியில பயம் இருக்கும்'' என்று ஆக்ரோஷமாகப் பேசினார்.

விஜயகாந்த் பேசப்பேச விறுவிறுவெனக் குறித்துக்கொண்டு இருந்தனர் உளவுத் துறை போலீஸார். ஆளும் மேலிடத்துக்கு அப்படியே அனுப்பினால் விஜயகாந்த் மீதான கோபம் இன்னும் அதிகரிக்கும் என்றே அந்தப் போலீஸார் சொல்லிக் கொண்டார்கள்!

விஜயகாந்த் வேகம் எடுக்கிறாரா என்று பார்ப்போம்!

- கோ.செந்தில்குமார், படங்கள்: பா.கந்தகுமார்

ஒரு பேனருக்காகவா?

இப்போ 10 இனிமே 20

விஜயகாந்த் ஆர்ப்பாட்டத்தை முடித்த நேரத்தில், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய தே.மு.தி.க. துணைச் செயலாளர் குமார், திடீரென தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார். பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார், அவரைத் தடுத்து, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி தீக்குளித்ததாகப் பரபரப்பாக சொல்லப்​பட்டது.

ஆனால் அவரோ, ''விஜயகாந்த் வருகைக்காகப் பேனர் வச்சிருந்​தேன். அதில் சில நிர்வாகிகள், 'தங்கள் பெயரை ஏன் போடவில்லை’ என்று என்னிடம் சண்டை போட்டு அந்தப் பேனரைக் கிழித்துவிட்டனர். என்னை யாரும் மதிக்கவில்லை. அதற்கு நியாயம் கேட்டுத்தான் விஜயகாந்த் முன்பு நெருப்பு வைத்துக்கொண்டு சாக முயற்சித்​தேன்'' என்றார்.

கூட்டம் காட்டுவதில் மட்டுமல்ல கோஷ்டி பூசலையும் காட்டி விட்டது திருவண்ணா​மலை ஆர்ப்பாட்டம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு