Published:Updated:

மிஸ்டர் கழுகு: சசிகலா கையில் டேஞ்சர் கடிதங்கள்!

மிஸ்டர் கழுகு: சசிகலா கையில் டேஞ்சர் கடிதங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் கழுகு: சசிகலா கையில் டேஞ்சர் கடிதங்கள்!

''நலந்தானா?'' என்று நாம் கேட்டதும், கழுகார் முகத்தில் புன்னகை. 

##~##

''போயஸ் கார்டனுக்குள் சசிகலா வசித்தபோது இருந்த அறை இன்னமும் அவருக்காகத் தயார் ஆகவில்லை என்பதால், தற்காலிகமாக வேறு ஓர் அறையில் இருக்கிறார். இந்த இடைப்பட்ட காலத்தில், ஆன்மிக ஈடுபாடு முன்பு இருந்ததைவிட இன்னும் அதிகம் ஆகிவிட்டது. எப்போதும் பக்திப் பாட்டுப் புத்தகங்களுடன்தான் இருக்கிறார் சசிகலா.  முன்பெல்லாம் மந்திரிகள், அதிகாரிகள் வந்தால் அவர்களைப் பார்ப்பது சசிகலாவின் வழக்கம். இப்போது அந்த மாதிரியான காட்சி​கள் குறைந்து விட்டன. 'கார்​டனுக்குள் எனக்கு உதவி செய்வதற்குத்தான் வந்துள்ளார். அதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதும் இல்லை... அவரது உத்தரவுகளைப் பின்பற்ற வேண்டியதும் இல்லை’ என்று, அமைச்சர்களுக்கு முதல் அமைச்சர் கட்டளை இட்டுள்ளதால், மந்திரிகள் தரப்பில் பதற்றம் நிறைந்த சூழ்நிலை இல்லை. ஆனால்..?''

''ஆனால் போட்டாலே... சிக்கலாச்சே?''

''கோட்டை மற்றும் மந்திரிகள் வட்டாரத்தில் பீதியைக் கிளப்பிய சங்கதி ஒன்று உண்டு. அதைத்தான் சொல்ல வந்தேன்...

சசிகலாவும் அவரது சொந்தங்களும் கட்சியை​விட்டுக் கல்தா செய்யப்பட்ட மறுநாள் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஒரு கட்டளை போட்டாராம். 'என்னுடைய பெயரைப் பயன்படுத்தி சசிகலா உறவினர்கள் என்ன உத்தரவுகளை உங்களுக்குப் போட்டார்கள். அதில் நீங்கள் எதைச் செய்து கொடுத்தீர்கள்? அதில் விதிமுறை மீறப்பட்டது என்றால், எந்த வகையில்? என்பதை எல்லாம் விளக்கமாக எழுதி எனக்குத் தாருங்கள்’ என்று கேட்டாராம். அதைத் தொடர்ந்து பல அமைச்சர்களும் சில அதிகாரிகளும் முதல்வருக்கு சீக்ரெட்டாகக் கடிதங்கள் அனுப்பி வைத்தார்களாம். சுமார் 56 கடிதங்கள் முதல்வர் கைக்குப் போய்ச் சேர்ந்ததாகச் சொல்கிறார்கள். அதைப் படித்துப் பார்த்து நிறுத்த வேண்டிய முடிவுகளை முதல்வரே நிறுத்தி வைத்தார் என்று, அப்போதே தகவல் பரவியது. இந்தக் கடிதங்கள் போயஸ் கார்டனுக்குள்தான் பத்திரமாக வைக்கப்பட்டன. கார்டனுக்குள் வந்த சசிகலா அந்தக் கடிதங்களை வாங்கிப் படித்துவிட்டதாக ஒரு தகவல் பரவி உள்ளது. 'சின்னம்மா பத்தி யார் யாரெல்லாம் போட்டுக் கொடுத்தாங்களோ... அவங்க கடிதம் எல்லாத்தையும் படிச்சுட்டாங்களாம். இன்னைக்கு இல்லைன்னாலும், என்னைக்காவது நம்மளைப் பழிவாங்க மாட்டாங்களா?’ என்ற புலம்பல் கோட்டை வட்டாரத்தில் அதிகமாகக் கேட்கிறது!''

''ஐயோ... பாவம்!''

''இன்னொரு தரப்பில் வேறு ஒரு சமாதானம் சொல்கிறார்கள். 'சசிகலாவைவிட அவரது பெயரைப் பயன்படுத்தி அவரது சொந்தங்கள் செய்த காரியங்கள்தான் அதில் அதிகம் சொல்லப்பட்டுள்ளது. இதில் பல விஷயங்கள் சசிகலாவுக்கே புதுசாக இருந்தன. அக்காவுடன் அமைதியாகக் காலத்தைக் கழித்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார். எனவே இனிப் பழிவாங்கும் படலத்துக்கு வாய்ப்பு இல்லை’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். சசிகலா உள்ளே நுழைந்தது அவரது குடும்பத் தரப்பினர் பலருக்கும் அதிர்ச்சி. குறிப்பாக, உறவுப் பெண்கள் இன்னும் வருத்தத்தில்தான் இருக்கின்றனர்!''

''ஏனாம்?''

''எம்.நடராஜன், திவாகரன் ஆகிய இருவர் மீதும் மேலும் மேலும் வழக்குகள் பாய்வதை அவர்கள் ரசிக்கவில்லை. 'நாம ஏதோ கோடிக்கணக்குல சம்பாதிச்சுட்டோம்னு கொச்சைப்படுத்திட்டு சசி அக்காவை மட்டும் சுத்தமானவர்னு கூப்பிட்டுப்பாங்களா?’ என்பது அவர்களின் வருத்தம். திருவான்மியூர் பகுதியில் இருந்துகொண்டு, 'நான் 96-ம் வருஷம் எவ்வளவு சொத்து வெச்சிருந்தேன். 2001-ம் வருஷம் என்ன வெச்சிருந்தேன். இன்னைக்கு எவ்வளவு சொத்து வெச்சிருக்கேன்னு வெளிப்படையா சொல்லத் தயாரா இருக்கேன். அப்ப முதலமைச்சரால் எந்தப் பதிலையும் சொல்ல முடியாது’ என்று  ஒரு பெண்மணி தனது சொந்தங்களை அணி திரட்ட ஆரம்பித்த பிறகுதான், ஜெயலலிதா லேசாக இறங்கி வந்து ஒருவிதமான சமாதானப் படலக் காட்சிகளை அரங்கேற்றினார் என்றும் சொல்கிறார்கள். ஆனால், சசிகலா குடும்பத்தில் இருக்கும் முக்கியமான ஆண் வாரிசு  'சின்னம்மா கார்டனுக்குள் செல்வதுதான் நல்லது’ என்று நினைத்தாராம். இப்படி அந்தக் குடும்பத்துக்குள் மித்ர பேதம் ஏற்பட்டது! ''

''நடராஜனின் கமென்ட்?''

'' அவர் சசிகலாவின் அறிக்கையைப் படித்ததுமே, 'இது சுயநினைவுடன் எழுதப்பட்டதுதானா? இது சசிகலா கையெழுத்துதானா?’ என்று கேட்டுவிட்டுத்தான் மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தாராம்!''

''ம்!''

''ஜோதிடர்கள் வட்டாரத்தில் ஒரு விஷயம் சொல்லப்படுகிறது. 'சசிகலாவுக்கு அஷ்டமத்துச் சனி, கடந்த டிசம்பர் மாதம் ஆரம்பம் ஆனது. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்துச் சனி என்பார்கள். அப்படிப்பட்டவர்களின் பக்கத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாகப் பாதிக்கும். எனவேதான், மூன்று மாதங்கள் பிரிந்து இருக்கலாம் என்று சிலர் பரிகாரமாகச் சொன்னார்கள். அந்த அடிப்படையில் இந்தப் பிரிவு நாடகம் நடந்தது. இதில் சசிகலா தவிர மற்றவர்கள் செய்து வரும் காரியங்கள், முதல்வருக்கு உடன்பாடு இல்லாதவை. அவர்களை மொத்தமாக விலக்கிவைத்து நடவடிக்கை எடுக்க, சசிகலாவும் தனது அருகில் இல்லாமல் இருப்பது நல்லது என்று நினைத்தார்’ என்று சொல்கிறார்கள். அவர்களே இன்னொன்றையும் சொல்கிறார்கள். 'மே 17 முதல் ஜெயலலிதாவுக்கு 10-ல் குரு வக்ரம் அடைகிறார். அதனால் அவருக்கு சில இடையூறுகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது’ என்கிறார்கள்!''

''இதைச் சொல்பவர்கள்தான் பரிகாரமும் சொல்லி இருப்பார்களே!'' என்றோம் நாம். அடுத்த சப்ஜெக்ட்டுக்குத் தாவினார் கழுகார்!

மிஸ்டர் கழுகு: சசிகலா கையில் டேஞ்சர் கடிதங்கள்!

''தி.மு.க. ஆட்சியில் நம்பர் ஒன் அதிகார மைய அதிகாரியாக இருந்தவர் அசோக்வர்தன் ஷெட்டி. அவரை நிம்மதியாகப் பதவியில் இருக்கவும் விடாமல்... ராஜினாமா செய்யவும் விடாமல் அதிகாரிகள் சிலரே விளையாடத் தொடங்கி இருக்கிறார்கள்!'' என்றார் கழுகார்.

''அதை விரிவாகச் சொல்லும்...''

''கடந்த தி.மு.க. ஆட்சியில் துணை முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலினின் பக்கத்தில் இருந்து, நகராட்சி நிர்வாகம், ஊராட்சித் துறைகளில் செயலாளராகப் பணியாற்றியவர், அசோக்வர்தன் ஷெட்டி. ஆட்சி மாறியவுடன், இவரை டம்மி பதவியாகக் கருதப்படும் ஆவணக் காப்பக சிறப்பு ஆணையர் பதவிக்குத் தூக்கி அடித்தார்கள். அதை அடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி, விருப்ப ஓய்வுக்கான நோட்டீஸ் கொடுத்தார் ஷெட்டி. அவருக்கு எதிராக 'புலனாய்வு அமைப்பு விசாரணை நிலுவையில் இருக்கிறது. எனவே, நோட்டீஸை ஏற்க முடியாது’ என, அவரது நோட்டீஸ் காலம் முடிவதற்கு இரு நாட்களுக்கு முன், கடந்த டிசம்பர் 7-ம் தேதி அன்று,  தலைமைச் செயலாளர் சாரங்கி, உத்தரவு ஒன்றை வெளியிட்டார். இதை எதிர்த்து, மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்த அசோக்வர்தன், வெற்றியும் பெற்றார். மத்தியத் தீர்ப்பாயம் பிப்ரவரி 27-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், சாரங்கியின் உத்தரவை ரத்து செய்ததுடன், மூன்று மாதங்களுக்குள் அசோக்வர்தனுக்கு ஓய்வூதியப் பலன்களை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனாலும் அதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.''

''போகிறவரை விட வேண்டியதுதானே?''

''ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வட்டாரத்தில் இந்த இழுத்தடிப்பு பெரும் கவலையை எழுப்பி உள்ளது. 'விருப்ப ஓய்வுக்கான 16(2) என்கிற விதியின்படி, சம்பந்தப்பட்ட அதிகாரி, 30 வருட அனுபவம் பெற்றவராகவோ அல்லது 50 வயது கடந்தவராகவோ இருக்க வேண்டும்.  நோட்டீஸ் காலமான மூன்று மாதங்கள் முடிந்தால், அவர் ஓய்வு பெற்றவர் ஆகி விடுவார். '16(2)ஏ’ எனும் பிரிவானது, 20 வருட அனுபவமும் 50 வயதுக்குக் குறைவானவர்களுக்கும் உரியது. 54 வயதான அசோக்வர்தனுக்கு 28 வருட அனுபவம் உள்ள நிலையில், 16(2) பிரிவின்படி மூன்று மாத நோட்டீஸ் கொடுத்துள்ளார். ஆனால், தலைமைச் செயலாளர் சாரங்கியோ சம்பந்தமே இல்லாமல், 16(2) ஏ பிரிவின்படி அவருடைய நோட்டீஸை ஏற்க முடியாது எனக் கடிதம் அனுப்பி இருக்கிறார். இதில் என்ன காமெடி என்றால், 16(2) பிரிவின்படி விருப்ப ஓய்வு பெற மத்திய அல்லது மாநில அரசின் ஒப்புதலே இதற்குத் தேவை இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ஊழல் வழக்கு விசாரணை நடந்தாலும், இடைநீக்கம் இல்லாதபட்சத்தில், அவர் மூன்று மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் கொடுத்தாலே போதுமானது. மத்தியப் பணியாளர் நலத்துறைச் செயலாளர் தரப்பில் இதை எல்லாம் தெளிவாகச் சொன்னதை ஏற்றுக்கொண்டுதான், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் அசோக்வர்தனின் விருப்ப ஓய்வுக்கு ஆவணசெய்ய உத்தரவிட்டது. அதன் பிறகும், மேல் முறையீடு செய்திருப்பது, அரசுக்குக் கெட்ட பெயரைத்தான் ஏற்படுத்தும்’ என்கிறார்கள்.''

''அப்படியா?''

''அசோக்வர்தன் மீது அதிமுக்கிய அதிகாரி ஒருவர் கொண்டுள்ள  வெறுப்புதான், இந்த அளவுக்கு பிரச்னை இழுப்பதற்குக் காரணம் என்று பேச்சு. 'பொதுப்பணித் துறைச் செயலாளராக இருந்த ராமசுந்தரம், கடந்த ஆட்சியிலேயே விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு போனபோது, ஸ்டாலின் துறையிலேயே வலம்வந்த அசோக்வர்தனும் ரொம்பவும் எளிதாக அப்படிப் போயிருக்க முடியுமே. எந்த ஆட்சி வந்தாலும் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நினைத்து, இந்த ஆட்சியிலும் பணியாற்றக் காத்திருந்தவரை, வெறும் ஈகோவால், வேலையைவிட்டே வெளியேறும் அளவுக்கு குடைச்சலைக் கொடுப்பதா? இப்படி இருந்தால், எந்த ஆட்சி வந்தாலும் நன்றாக செயல்படக்கூடிய அதிகாரிகள் என்னதான் செய்வது?’ என்று புலம்பித் தவிக்கிறார்கள், நடுநிலை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.''

''முதல்வர் கவனிக்க வேண்டிய விஷயம்தான்!''

மிஸ்டர் கழுகு: சசிகலா கையில் டேஞ்சர் கடிதங்கள்!

''முதல்வர் உன்னிப்பாக ஒரு விஷயத்தைக் கவனிக்க ஆரம்பித்து இருக்கிறார். அதுதான் பல்கலைக்கழகங்களின் செயல்பாடு. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக கல்யாணி மதிவாணன் நியமிக்கப்பட்டு உள்ளார். நாவலர் நெடுஞ்செழியனின் மருமகள் இவர். 'இந்தப் பல்கலைக்கழகத்தை வைத்துக்கொண்டு முறைகேடு செய்தவர்கள் பட்டியலைக் கொடுத்து விசாரணை நடத்தி புகார் தயார் செய்யச் சொல்லி இருக்கிறாராம். சமீபத்தில் நடந்த நியமனங்களில் ஏராளமான பணம் விளையாடி உள்ளதாம். மதுரை நிருபரை உஷார்ப்படுத்தும்'' என்று உத்தரவு போட்டுவிட்டு, வானம் பார்த்துப் பறந்தார் கழுகார்!

அட்டை மற்றும் படங்கள்: சு.குமரேசன்

மிஸ்டர் கழுகு: சசிகலா கையில் டேஞ்சர் கடிதங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு