பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்

பல்லவ மன்னன், நெல்லை. 

கழுகார் பதில்கள்

அம்பேத்கரை ஒரு தலித் தலைவராகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். அவரை தேசியத் தலைவராகப் பார்ப்பது இல்லையே ஏன்?

கழுகார் பதில்கள்

அம்பேத்கர், தேசியத் தலைவரே. அவரைச் சிலர் சாதிக் கண்ணோட்டத்துடன் பார்க்க, சாதிதான் காரணமாக அமைந்துவிட்டது. இந்தியாவின் எல்லாச் சாதியினரும் எந்தச் சட்டதிட்டத்துக்கு உட்பட்டு நடக்கிறார்களோ, அதை எழுதியவர் அவர்தானே? தேசியத் தலைவராக அவரை மதிக்க, சிலர் மறுக்கலாம். ஆனால் அம்பேத்கர் எழுதிய சட்டத்தை நிராகரிக்க முடியுமா? நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாவது அவரது சொல்படிதானே எல்லோரும் நடக்கிறார்கள்!

 கே.ஏ.என். சிவம், பெங்களூரு.

கழுகார் பதில்கள்

அவை நாகரிகம் என்பதை விளக்க முடியுமா?

##~##

பெரியார் ஒரு கூட்டத்தில் கலந்து​கொள்வதாக இருந்தது. கடவுள் நம்பிக்கை​கொண்டவர்கள்தான் அந்தக் கூட்டத்தை நடத்தியவர்கள். பெரியார் வருவதற்கு முன்னதாக கடவுள் வாழ்த்துப் பாடலை ஒலிக்க​வைத்துவிடலாம் என்று அவர்கள் திட்டமிட்டு இருந்தார்கள். ஆனால், அரை மணி நேரத்துக்கு முன்னதாக பெரியார் வந்து​விட்டார். கூட்டம் நடத்தியவர்களுக்கும் வேறு வழி இல்லை. கடவுள் வாழ்த்து ஒலித்தது. நாத்தழும்பு ஏறி நாத்திகம் பேசிய பெரியார் எழுந்து நின்றார். இது அவை நாகரிகம்!

பெரியாரை மேடையில் வைத்துக்கொண்டு ஜெயகாந்தன் அவரை விமர்சித்துப் பேசினார். கூட்டத்தில் இருந்து எதிர்ப்புக் குரல்கள். 'அவரை பேசவிடுங்கள். அவரது கருத்தைச் சொல்​வதற்குத்தானே அழைத்திருக்கிறோம்’ என்று சொல்லி அமைதிப்படுத்திவிட்டு... பிறகு விளக்கம் சொன்னார் பெரியார். இது அவை நாகரிகம்!

இப்படி பெரியார் வாழ்க்கையில் இருந்து எத்தனையோ நாகரிகக் கதைகளைச் சொல்ல முடியும். அதனால்தான் அவர் பெரியார் ஆனார்!

 இல.செ. வெங்கடேஸ்வரன், சத்துவாச்சேரி.

கழுகார் பதில்கள்

கழுகாருக்கு கருணாநிதியைப் பிடிக்காததற்கு நிறைய காரணங்கள் உள்ளனபோல் தெரிகிறது. ஆனால், அவரிடம் பிடித்தது என்ன?

ஒருவரைப் பிடிக்கும் பிடிக்காது என்பது அவரவர் செயலை வைத்துத்தான் முடிவு செய்யப்படுகிறது. எனவே, கருணாநிதி என்றாலே பிடிக்காது என்கிற உங்கள் கணிப்பு உண்மை அல்ல.

அரசியலில் வெற்றியோ, தோல்வியோ சளைக்​காமல் இயங்கிக்​கொண்டே இருப்பதுதான், கருணாநிதியிடம் மற்றவர்களும் பின்பற்ற வேண்டிய செய்தி!

ரியாக்ஷன் காட்டாதவன் அரசியல்வாதியே அல்ல என்பார்கள். கருணாநிதி இதுவரை கருத்துச் சொல்லாத விஷயமே இருந்தது இல்லை. மற்றவர்கள் விமர்சிப்பார்கள் என்று தெரிந்தாலும், தனது கருத்தை அவர் பதிவு செய்வார். இதுவும் பின்பற்றத்தக்கதே!

 வேல்முருகன், நாமக்கல்.

கழுகார் பதில்கள்

வீட்டோ அதிகாரம் என்றால் என்ன?

ஐக்கிய நாடுகள் சபை... அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய ஐந்து நாடுகளுக்குக் கொடுத்துள்ள அதீதமான அதிகாரம்தான் இந்த 'வீட்டோ’!

இரண்டாம் உலகப் போரின் பாதிப்புக்குப் பிறகு ஐ.நா. சபை அமைக்கப்பட்டது. அந்தப் போரின்போது இந்த ஐந்து நாடுகளும் அளப்பரிய பங்களிப்பைச் செய்ததால், இவர்கள் பாதுகாப்புச் சபையில் எந்த முடிவுகளை எடுக்கவும் கட்டுப்படுத்தவும் அதிகாரம் படைத்தவர்களாக ஆனார்கள். பாதுகாப்பு சபையில் பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் ஒரு முடிவு எடுக்கப்பட்டாலும் அதை இந்த ஐந்தில் ஒரு நாடு நினைத்தாலும் தடுக்க முடியும் என்பது அவர்களுக்குத் தரப்பட்டுள்ள அங்கீகாரம்.

இந்த அதிகாரத்தை அவர்கள் எதற்காகப் பயன்​படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துத்தான் அது வீட்டோ அதிகாரமா அல்லது வீணான அதிகாரமா எனச் சொல்ல முடியும்!

 டி.திவ்யா, வண்டல்.

கழுகார் பதில்கள்

தலைவிரித்து ஆடும் வறுமையைத் தடுப்பது எப்படி?

வறுமை என்பது அறியாமையின் குழந்தை. இரண்டையும் ஒருசேரத்தான் ஒழிக்க முடியும். அதிகமாக இருப்பவர்கள் பங்கீடு செய்வதால் ஓரளவு வறுமையைத் தடுக்க முடியும். 'ஒரு விளக்கின் வெளிச்சம், இன்னொரு விளக்கை ஏற்றுவதால் குறைந்துவிடாது’ என்பதை அனைவரும் உணரவேண்டும்.

வறுமையை ஒழிக்க இதுதான் வழி. ஆனால், 'மன்மோகன் ஆட்சிக்கு வந்ததும் வறுமை ஒழிந்து​விட்டது’ என்று திட்டக் கமிஷன் தலைவர் அலு​வாலியா சொல்வதன் அர்த்தம் எனக்கு விளங்கவில்லை!

 எஸ்.ராஜகோபாலன், சென்னை-17.

கழுகார் பதில்கள்

நேருவுக்கும் சோனியாவுக்கும் எவ்வித ஒற்றுமையும் காணோம். சொல்லப்போனால் இந்திராவின் குணங்களைக்கூட காணோம். ஆக, இனி 'நேரு குடும்பம்’ என்று சொல்வதைவிட சோனியா குடும்பம் என்று சொல்வதுதானே பொருத்தம்?

மகாத்மா காந்திக்கும் இந்திரா காந்திக்கும் எப்படிச் சம்பந்தம் இல்லையோ... அதுபோல ஜவஹர்லால் நேருவுக்கும் சோனியாவுக்கும் எந்த பொருத்தமும் கிடையாதுதான்!

 அ.குணசேகரன், புவனகிரி.

கழுகார் பதில்கள்

கூலிப் படைக் கலாசாரம்?

சமூகத்தில் புரையோடிப்போன கிரிமினல்​தனத்தின் உச்சகட்டச் செயல்பாடு. இது சில அரசியல்வாதிகளால், போலீஸ்காரர்களால் நேரடியாக வளர்க்கப்படுகிறது. சில சினிமா இயக்குநர்களால் அதற்கு கிளாமர் கூட்டப்படுகிறது. இவர்கள் மறைமுகமாக வளர்க்கிறார்கள். அந்த அடிப்​படையில் இந்த மூன்று பேரின் குழந்தை என்றே கூலிப் படையைச் சொல்லலாம்!

 கே.மகேந்திரபிரபு, சிவகாசி.

கழுகார் பதில்கள்

ஊழலுக்கு மிக முக்கியமான அடித்தளமே, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கூட்டுதான். அதனை உடைக்க முடியாதா? வெளிப்படையான நிர்வாகம் எப்போது சாத்தியம்?

எப்படிச் சம்பாதிக்கலாம் என்பதை அரசியல்வாதிகளுக்குக் கற்றுக்கொடுப்பதே அதிகாரிகள்தான். பணம் இவர்களுக்குள் பந்தம் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இந்தப் பங்கீட்டில் சிக்கல் வரும்போது மட்டும்தான் கூட்டு உடைகிறது. இதை உடைக்காத வரை வெளிப்படையான நிர்வாகம் சாத்தியம் இல்லை.

அதேபோல் கிரிமினல்களுக்கும் போலீஸ் அதிகாரி​களுக்கும் உள்ள கூட்டு உடையாத வரை சட்டம் ஒழுங்கும் சாத்தியம் இல்லை!

 கலைஞர் ப்ரியா, வேலூர்( நாமக்கல்).

கழுகார் பதில்கள்

புதுக்கோட்டை தொகுதியை அ.தி.மு.க. விட்டுக்கொடுக்குமா?

கொடுக்காது. அந்த அளவுக்கா அரசியல்வாதிகள் பரந்த மனப்பான்மைகொண்டவர்களாக மாறி​விட்டார்கள். விட்டுக்கொடுக்க வேண்டும் என்றால் யாருக்கு? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கா? அவர்கள்தான் அ.தி.மு.க. கூட்டணியிலேயே இல்லையே!

சீ.பாஸ்கர், சென்னை-44.

கழுகார் பதில்கள்

வைகோவின் பிறந்த நாளை அவரது கட்சியினர் கொண்டாடுவது இல்லையே ஏன்?

வைகோவும் கொண்டாடுவது இல்லை என்று நினைக்கிறேன்!

 ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம்.

கழுகார் பதில்கள்

இந்தியா என்கிற மரத்தில் அரசியல்வாதிகள் வேர்களா? விழுதுகளா?

இரண்டாகவும் அவர்கள் இல்லை. விளைந்த பழங்களைப் பறித்து விற்பனை செய்யும் வியா​பாரிகளாக மட்டுமே இப்போது இருக்​கிறார்கள்!

 உஷா மாப்பிள்ளை, கோயமுத்தூர்.

கழுகார் பதில்கள்

கிரிமினல் வழக்கு உள்ள 162 எம்.பி.க்கள் மீதான வழக்கையும் உடனடியாக எடுத்து தண்டனை கொடுக்கவோ/ தள்ளுபடி செய்யவோ போர்க் கால அடிப்படையில் முயற்சித்தால் என்ன?

இதை எப்படிச் செய்யவிடுவார்கள்? இதில் எத்தனை பேர் ஆளும் கட்சியோ? 'போர்க் கால அடிப்படை’ எல்லாம் புயல், பூகம்பத்துக்கு மட்டும்தான். இதற்கெல்லாம் நடக்காது சார்!

கழுகார் பதில்கள்
கழுகார் பதில்கள்

ஒரு விளக்கம்: ஜூ.வி. 28.3.12 தேதியிட்ட இதழில் சேதுசமுத்திரத் திட்டம் குறித்து வெளியான பதில், தன்னுடைய நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருப்பதாக கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு. அந்த பதிலுக்கு ஆட்சேபம் தெரிவித்து வழக்கறிஞர் எஸ்.கே.நெப்போலியன் ஏற்கனவே அனுப்பிய கடிதத்தை 4.4.12 தேதியிட்ட இதழிலேயே வெளியிட்டு இருந்தோம். குறிப்பிட்ட அந்த பதிலை வெளியிட்டதன் மூலம் டி.ஆர்.பாலுவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கம் நமக்கு இல்லை. சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் அகில இந்திய அளவில் பாலுவுக்குக் கிடைத்த கூடுதல் பிரபல்யத்தையே 'பலன்’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு