Published:Updated:

மிஸ்டர் கழுகு: முன்னே... ஜெ. பின்னே... மு.க.

மிஸ்டர் கழுகு: முன்னே... ஜெ. பின்னே... மு.க.

பிரீமியம் ஸ்டோரி
##~##

''ஜெயலலிதாவின்கார் அணிவகுப்பில் கருணா​​நிதி​​யின் கார் சேர்ந்து வந்தால் எப்படி இருக்கும்?'' - குறும்பாகக் கேட்டார் கழுகார் 

''கற்பனை நிஜம் ஆகாது'' என்றோம்.

''நிஜம்தான் சொல்கிறேன்'' - சிரித்தார்  மீண்டும்.

மிஸ்டர் கழுகு: முன்னே... ஜெ.  பின்னே... மு.க.

''அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, கடந்த 10-ம் தேதி முதன்முறையாக சட்டசபைக்கு வந்தார் கருணாநிதி. வழக்கம் போல கையெழுத்துப் போட்டுச் சென்றுவிட்டார்!

எம்.எல்.ஏ-வாக ஆனதும் சபாநாயகர் அறையில் பதவியேற்றுக்கொண்டதோடு சரி. அன்றுமுதல் அவை நடவடிக்கைகளில் கருணாநிதி கலந்துகொள்ளவே இல்லை. ஆனால், விஷயம் அதில் இல்லை.

கருணாநிதி கையெழுத்துப் போட வந்தபோது ஆச்சர்யமான சில சம்பவங்கள் நடந்தன. சட்ட​சபைக்குள் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் நுழைவதற்காக தனியாக ஒரு வாசல் உண்டு. அந்த வாசல் அருகே இருக்கும் போர்டிகோவில்தான் முதல்வர் ஜெயலலிதாவின் கார் வந்து நிற்கும். இந்த போர்டிகோவுக்கு மிகவும் அருகில் இன்னொரு போர்ட்டிகோ உண்டு. இதன் வழியாகதான் பிற கட்சித்தலைவர்கள் சட்ட​சபைக்குள் போவார்கள். அன்று, கருணாநிதி​யைப் பார்க்க மொத்த மீடியாவும் திரண்டு நின்றன. திடீரென்று போலீஸ் படை, மீடியா ஆட்களை ஓரங்கட்டி தடுத்து நிறுத்தினார்கள்.

'கருணாநிதி வருகைக்கு போலீஸ் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறது?’ என்று முனங்கியபடியே நின்றனர். கருணாநிதியை வரவேற்க ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாசலில் காத்திருந்தார்கள். மறுபடியும், போலீஸ் பரபரப்பு காட்டியது. என்னவென்று பார்த்தால், கறுப்புப்பூனைகள் சூழ காரில் வந்து சேர்ந்தார் முதல்வர் ஜெய லலிதா. மெதுவாக ஊர்ந்து சென்ற காரில் இருந்தபடியே, மீடியா ஆட்களைப் பார்த்துச் சிரித்தபடியே ஜெயலலிதா கை கூப்பினார். ஐந்து வினாடிகள்கூட கடந்திருக்காது. அடுத்த காரில் கருணாநிதி சிரித்தபடியே வந்தார். ஜெயலலிதாவின் கார் முதல் போர்டிகோவில் நிற்க... கருணாநிதி கார் அடுத்த போர்டிகோவில் நின்றது. கிட்டத்தட்ட இருவருமே ஒன்றாக வந்து சேர்ந்தார்கள்!''

மிஸ்டர் கழுகு: முன்னே... ஜெ.  பின்னே... மு.க.

''கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்​குமே!''

''அது மற்றவர்களுக்குதான், ஜெயலலிதாவுக்கு அல்ல. மீடியா ஆட்களை எல்லாம் போலீஸ் வளையம் போட்டது கருணாநிதிக்காக அல்ல... ஜெயலலிதா வருகைக்காக என்பது பிறகுதான் புரிந்தது. போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதா கான்வாய்க்கு முன்பாகவே கருணாநிதியின் கார் கோட்டையை நோக்கி முன்னேறிக்கொண்டு இருந்தது.

இந்தத் தகவலை ஜெயலலிதாவின் கான்வாயில் பாதுகாப்புக்கு வரும் போலீஸுக்கு உடனே பாஸ் செய்தார்கள். அதனால், கருணாநிதியின் காரை முந்திக்​கொண்டு ஜெயலலிதாவின் கார் கோட்டைக்குள் நுழைந்து விட்டது.''

''கருணாநிதியின் கார் முதலில் வந்திருந்​தால் என்ன செய்து இருப்பார்களாம்?''

''இந்தப் பதற்றம் போலீஸுக்கு இருக்கவே செய்தது. கருணாநிதியின் கார் முந்தி விட்டால், முதல் போர்டிகோவில் வந்து நின்று விடும். அதனால், முதல்வர் ஜெயலலிதாவின் கார் உள்ளே நுழைய முடியாத சூழல் உருவாகி விடும் என்று பயந்துபோய் காக்கிச் சட்டைகள் வியர்த்துக் கொட்டினார்கள். நல்ல வேளையாக ஜெயலலிதாவின் கார் முதலில் நுழைந்தது. கறுப்புப் பூனைகள் புடைசூழ வந்த கருணாநிதியின் காரை போலீஸ் அதிகாரிகளால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதால், ஜெயலலிதாவின் காரைத் தொடர்ந்தே அவரது காரும் வந்து சேர்ந்தது.  

''ஓஹோ!''

''இவ்வளவு விஷயமும் ஜெயலலிதாவுக்​குத் தெரியாது. தன்னைப் பார்க்கத்தான் பத்திரிகையாளர்கள் காத்திருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாராம். இறங்கி உள்ளே சென்ற பிறகுதான் விஷயத்தைக் கேள்விப்பட்டாராம். சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதிக்கும் கூடுதல் போலீஸ் கமிஷனர் தாமரைக் கண்ணனுக்கும் டோஸ் விழுந்ததாகக் கிசுகிசுக்கிறது கோட்டை சோர்ஸ்!''

''பின்னே இருக்காதா?''

''தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று கடந்த ஆட்சியில் சட்டம் போட்​டார் கருணாநிதி. எல்லாவற்றையும் மாற்றி வரும் ஜெயலலிதா, சித்திரை ஒன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று இந்தச் சட்டத்தையும் மாற்றி விட்டார். 'தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு அறுசுவை விருந்து போடப்பட்டு இரண்டாவது பசுமைப் புரட்சிக்கு வழி காண உழவர் பெருவிழா நடத்தப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். தை முதல் நாளில் உழவர் திருநாள் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் உழவர் திருநாள் கொண்டாட்டத்தை அறிவித்து இருப்பது கருணாநிதிக்கு எரிச்சல் ஊட்டத்தானாம்.''

''பொங்கல், தீபாவளியையும் மாற்றிவிடக் கூடாது!''

''அது ஒன்றும் கருணாநிதி தேதி குறித்தது அல்லவே'' என்ற கழுகார், அடுத்து ஸ்டாலின் மேட்டரை எடுத்தார்.

''ஸ்டாலின் மீதான புகாரில் சுபம் போட்டுவிட்டார்கள் பார்த்தீரா?'' என்று கேள்வியைக் கேட்டு, அவரே பேச ஆரம்பித்தார்.

மிஸ்டர் கழுகு: முன்னே... ஜெ.  பின்னே... மு.க.

''ஸ்டாலின் மீது வீடு அபகரிப்புப் புகார் வந்தது. 'துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, சென்னை ஆழ்வார்பேட்டையில் அவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் எனது வீட்டை அபகரித்துக்கொண்டார்’ என்று என்.சேஷாத்ரி குமார் போலீஸில் புகார் கொடுத்து இருந்தார். இந்த வழக்குத் தொடர்பாக மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, ஸ்டாலினின் நண்பர்கள் வேணுகோபால் ரெட்டி, சுப்பா ரெட்டி மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீது, போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குக்கு இப்போது எதிர்பாராத முடிவு கிடைத்திருக்கிறது.

'முதலில் 5.54 கோடி கொடுத்துவிட்டு என் வீட்டை வேணுகோபால் ரெட்டி பெயருக்குப் பத்திரப் பதிவு செய்து கொண்டனர். இப்போது மேலும் 1.75 கோடி கொடுத்து விட்டனர். எனக்கு 65 வயது ஆகி விட்டதால், என்னால் கோர்ட்டுக்கு அலைய முடியாது. எனவே, இந்த வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்’ என்று என்.சேஷாத்ரி குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மதிவாணன், இந்த வழக்கை முடித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

'சிங்கப்பூரில் நல்ல சம்பளத்தில் உயர்ந்த பதவியில் இருந்த நான், என் பெற்றோருடன் வசிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் சென்னைக்கு வந்தேன். என் அப்பா எனக்குக் கொடுத்த இடத்தில் இந்த வீட்டைக் கட்டி பெற்றோர் நினைவாக 'நார்விஷா’ என்று பெயர் சூட்டி இருந்தேன். இப்போது அந்த வீடு எனக்கு இல்லை என்று ஆகிவிட்டது. வெறும் பணத்துக்காக இந்த வழக்கை நான் முடித்துக்​கொள்ளவில்லை. யாரையும் பழி வாங்கும் பழக்கம் எனக்குக் கிடையாது’ என்று சொல்​கிறாராம் சேஷாத்ரி குமார்!''

''எப்படியோ... ஸ்டாலின் தலை தப்பியது!''

''கடந்த இதழில் சசிகலாவின் ஆன்மிக ஈடுபாடு அதிகமாகி வருவதாகச் சொல்லி இருந்தேன். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்துள்ள படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோயிலுக்குக் கடந்த 11-ம் தேதி சசிகலா ரகசியமாக வந்து சாமி கும்பிட்டு விட்டுச் சென்றிருக்கிறார். இந்த ரகசிய விஜயம் குறித்து, அ.தி.மு.க-வின் சில முக்கியஸ்தர்களிடம் கேட்டபோது, 'சசிகலா வரும் தகவல் யாருக்குமே தெரிவிக்கப்படவில்லை. அவர் போன பிறகே எங்களுக்குத் தெரியும். விசாரித்தபோது, காலை சுமார் 9 மணிக்கு சசிகலாவும் இன்னும் இரண்டு பேரும் காரில் படவேடு வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கோயிலுக்குச் சென்று அம்மனுக்குப் புடைவை சாத்தி சாமி கும்பிட்டு விட்டுப் போனார்கள்’ என்கிறார்கள்.''

''என்ன வேண்டுதலாம்?''

''ஜெயலலிதாவுடன் மீண்டும் சேருவதற்குச் சில நாட்களுக்கு முன்பே சசிகலா இந்தக் கோயிலுக்கு யாருக்கும் தெரியாமல் வந்து இருக்கிறார். அப்போது அவர் காரில் இருந்து இறங்கவே இல்லையாம். அவருடன் வந்தவர்கள்தான், சசிகலா சார்பில் பூஜை செய்துவிட்டு வெளியே வந்து விபூதிக் குங்குமப் பிரசாதத்தை கொடுத்து இருக்கிறார்கள். அதைக் காரில் இருந்தபடியே வாங்கி நெற்றியில் வைத்திருக்​கிறார் சசிகலா. அந்த வேண்டுதல் பலித்து விட்டது என்பதற்காக இப்போது வந்திருக்கலாம். இப்போது ரகசியமாக வந்து சாமி கும்பிட்டுச் சென்றதைப் பார்க்கும்போது, 'அம்மா தன்னை மன்னித்துத் திரும்பவும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று வேண்டி இருப்பார் போல் தெரிகிறது. அது நிறைவேறி இருப்பதால், தனது வேண்டுதலை நிறைவேற்றிய அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி விட்டுச் சென்றி ருக்கலாம்!''

''...லாம்!''

மிஸ்டர் கழுகு: முன்னே... ஜெ.  பின்னே... மு.க.

''அடுத்து வருவதும் ஆன்மிகச் செய்திதான். சர்ச்சைக்குரிய இரண்டு சாமியார்கள் திடீரென சந்தித்தால்... செய்திதானே!  திடீர் விஜயமாக 11-ம் தேதி காலையில் மதுரை ஆதீனத்தை வந்து சந்தித்தார் நித்தியானந்தா. செங்கோல் ஒன்றை மதுரை ஆதீனத்துக்கு அன்பளிப்பாகவும் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்!''

''இது என்ன திடீர் ஷாக்?''

''தங்க மூலம் பூசப்பட்ட அந்த ஆறு அடி உயர வெள்ளிச் செங்கோலை பிரமிப்போடு பார்த்த ஆதீனம், தனது இரண்டு கைகளையும் உயர்த்தி டிரேட் மார்க் ஆசீர்வாதத்தை வழங்கி இருக்கிறார். மதுரை ஆதீன மடத்துக்கு நித்தியானந்தா வருவது இது மூன்றாவது முறை என்றாலும், சேனல் 'சிக்கல்’ விவகாரத்துக்குப் பிறகு, முதல் பயணமாம்.

ஒரு மாதத்துக்கு முன், நித்தியின் பிடதி ஆசிரமத்துக்கு மதுரை ஆதீனம் சென்ற போது, 'நானே உங்களைத் தேடி வருவதாக இருந்தேன் சுவாமி’ என்று வாஞ்சை காட்டினாராம் நித்தி. இரண்டு மணி நேரம் ஆதீன மடத்தில் கதைத்துக் கொண்டு இருந்த நித்தி, 'திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மூத்த ஆதீனத்தில் மகாசந்நிதானமாக வீற்றிருக்கும் தாங்கள், சைவ சமய மதப் பிரசாரங்களை வெளிநாடுகளிலும் மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளிலும் உள் நாட்டிலும் உள்ள எங்களது சென்டர்களில் இனி மதுரை ஆதீனத்துக்கும் ஓர் இருக்கை நிச்சயம்’ என்று மாய்ந்தாராம். விஷயம் அறிந்து ஓடி வந்த பத்திரிகையாளர்களிடம், 'முழுக்க முழுக்க நட்பின் அடிப்படையில் ஆதீனகர்த்தரைப் பார்க்க வந்தேனே தவிர, ஆதீனச் சொத்துக்களை அபகரிக்கவோ, ஆக்கிரமிக்கவோ வரவில்லை’ என்று காமெடி செய்தாராம் நித்தி.''

''நித்திக்கு ஜோக் நல்லா வருமோ?''

'' 'நீங்கள் நித்தியானந்தாவைச் சந்தித்தது மற்றவர்களுக்கு நெருடலாகத் தெரியாதா?’ என்று மதுரை ஆதீனத்திடம் கேட்டதற்கு, 'உணர்வு இல்லாதவர்களுக்கும், புரிந்துகொள்ளாதவர்களுக்கும், அறியாமையில் இருப்பவர்களுக்கும் வேண்டுமானால், நெருடலாக இருக்கலாம். சைவத்தைப் பரப்புவதில் நித்தியானந்தரும் சிறப்பான சேவை செய்து வருகிறார். எனவே, ஐ அக்செப்ட் தி கான்செப்ட் ஆஃப் ஸ்ரீ நித்தியானந்தாஜி’ என்று சொல்லி வாயடைத்தாராம் மதுரை ஆதீனம்!''

''ஆன்மிகம் போதும், அரசியலுக்கு வாரும்'' என்றதும் இலங்கை விவகாரத்தைத் தொட்டார்.

''இலங்கையில் தமிழர்களுக்காக மத்திய அரசு செய்திருக்கும் மறுவாழ்வுப் பணிகளை பார்வையிடு​வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 15 பேர்கொண்ட நாடாளுமன்றக் குழு வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரையில் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்கிறது. இந்தக் குழுவில் அ.தி.மு.க-வின் ரவி பெர்னார்ட் பெயரும் இருந்தது. திடீரென இப்போது, 'இந்தக் குழுவில் அ.தி.மு.க. இடம்பெறாது’ என்று அதிரடியாக அறிவித்திருக்​கிறார் ஜெயலலிதா''

''ஏனாம்?''

''போரில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுடன் நேரடியாக சுதந்திரமாகப் பேசும் வாய்ப்பு நாடாளுமன்றக் குழுவுக்கு இல்லையாம். சிங்கள அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை, விருந்து போன்ற விஷயங்களுக்குத்தான் முக்கியத்துவம் என்பதால், இந்த குழுவில் இடம்பெற மாட்டோம் என்று சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா. 'முன்பு கனிமொழி உள்ளிட்ட எம்.பி.க்கள் இலங்கை போன நேரத்தில், விருந்து சாப்பிட்டுவிட்டு பரிசுப் பொருட்களை வாங்கித் திரும்பியது போல்தான் இருக்கும். இது கண்துடைப்பு’ என்றும் காட்டமாகச் சொல்லியிருக்கிறார்.

இந்தக் குழுவில் தமிழத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் சுதர்சன நாச்சியப்பன், கிருஷ்ணசாமி, மாணிக்தாகூர், சித்தன், சி.பி.எம். சார்பில் டி.கே.ரங்கராஜன், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். கடந்த முறை எட்டிப்பார்த்த திருமாவளவன் இப்போது மிஸ்ஸிங்'' என்று சொல்லி விட்டு வானத்தில் வட்டமிட்டார் கழுகார்!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வீ.நாகமணி

 கிடைக்குமா?

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலாளராக இருந்த கார்த்திகேயன், கடந்த ஜனவரி மாதம் கட்டாய லீவில் அனுப்பப்பட்டார். அவர் எடுத்த சில 'புதிய’ நடவடிக்கைகளைக் கண்டு ஆட்சி மேலிடம் கோபம் அடைந்ததால்தான், இந்த ஆக்ஷன் பாய்ந்தது. சசிகலா மீண்டும் கார்டனுக்கு வந்து விட்டதால், மீண்டும் பதவியில் வந்து அமரும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறாராம்.

 ராதாகிருஷ்ணனின் புதிய மனு!

நதி நீர் இணைப்பை வலியுறுத்தி 1983-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருந்தார், தி.மு.க. செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இந்த வழக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்துக்குப் போனது. இந்த வழக்கில்தான் இன்னொரு திருப்பம். 'நதி நீர் இணைப்புக்காக கமிட்டி ஒன்றை மத்திய அரசு நியமிக்க வேண்டும். நதிநீர் இணைப்பு தொடர்பான சாத்தியக் கூறு களையும் அறிக்கைகளையும் அவ்வப்போது கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவு போட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

'கங்கை - காவிரியோடு நதிநீர் இணைப்பை நிறுத்திக் கொள்ளாமல் வைகை, தாமிரபரணி, நெய்யாறு, வைப்பாறு ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்’ என்று இன்னொரு மனுவையும் போட்டிருக்கிறார் ராதாகிருஷ்ணன். நதியைப் போல இந்த வழக்கும் நீளமாகப் போகும் போல!

மிஸ்டர் கழுகு: முன்னே... ஜெ.  பின்னே... மு.க.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு