Published:Updated:

மே தினம்: தலைவர்கள் வாழ்த்து

மே தினம்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை, ஏப்.30,2011

மே தினம்: தலைவர்கள் வாழ்த்து

உழைப்பாளர்களின் உன்னதம் போற்றும் மே தினத்தையொட்டி, தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முதல்வர் கருணாநிதி:
 
மே நாள்! உழைப்பாளிகளின் பெருமையை உலகெங்கும் உரைத்திடும் உன்னதத் திருநாள்! உழைக்கும் தொழிலாளர்களுக்கு எட்டு மணிநேர வேலை, வேலைக்கேற்ற ஊதியம் முதலானவற்றைச் சட்டபூர்வமாக உலக அரங்கில் உறுதி செய்த நாள், இந்த மே நாள்! மேதினி போற்றும் இந்நன்னாளில் தொழிலாளர் சமுதாயத் தோழர்களுக்கும், அவர்தம் குடும்பத்தார்க்கும் எனது இதயம் கனிந்த மேதின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
 
"திராவிட இனமே பாட்டாளி இனம்" என்றார், அண்ணா. அவரது கொள்கை வழி நின்று பாடுபடும் திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழகத்தில் தொழிலாளர்களின் நலன்களைக் காத்திடும் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
 
தொழிலாளர்களுக்குத் தடையின்றி 20 சதவீத போனஸ், ஊக்கத் தொகை; நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம்; விவசாயக் கூலிகளாகவும், வேறுபல தொழில்களில் உழைப்பாளிகளாகவும் திகழும் ஏழை எளிய கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதியுதவி; உழைப்பாளி வர்க்கத்தின் பொது அறிவு வளர்ச்சிக்காக இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள்;
 
தொழிலாளர் குடும்பங்களின் பசிப்பிணி போக்கிட ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி; எரிவாயு இணைப்புடன் கூடிய இலவச எரிவாயு அடுப்புகள்; உழைப்பாளிகளின் உயிர்காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம்; குடிசைகளில்லா கிராமங்கள், குடிசைப் பகுதிகளில்லா நகரங்கள் கொண்ட தமிழகம் காணும் கலைஞர் வீடு வழங்கும் திட்டம். ##~~##

இவ்வாறு பல்வேறு திட்டங்களை வழங்கி, நாளும் உழைத்திடும் ஏழை எளிய தொழிலாளர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் - வளம் பெற வேண்டும் எனத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருக்கிறது இந்த அரசு என்பதனைச் சுட்டிக்காட்டி தொழிலாளர் சமுதாய உடன்பிறப்புகளுக்கு மீண்டும் எனது மே தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
 
அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா:
 
உழைப்போரின் உன்னதத் திருநாளாம் மே தினத்தை மேதினி எங்கும் கொண்டாடிக் கொண்டிருக்கும் எனதருமை தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது "மே" தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதிகாலை முதல் அந்தி சாயும் வரை கணக்கில்லாமல் வேலை செய்ய வேண்டும் என்பதை எதிர்த்தும், எட்டு மணி நேர வேலையை வலியுறுத்தியும் எழுந்த போராட்டத்தின் வெற்றி தினமே மே தினம்!
 
உழைப்புக்கேற்ற ஊதிய மின்மை, கொத்தடிமைத் தனமான இன்னல்கள் ஆகியவற்றில் இருந்து தொழிலாளர்களுக்கு விடுதலை கிடைத்த தினம் மே தினம்!

இந்த மே தின நன்னாளில், குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்; உழைப்பவரை உயர்த்துவோம் என்ற உறுதியை மேற்கொண்டு, தினக்கூலி அடிப்படையில் பணிபுரிபவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட அனைத்து உழைக்கும் வர்க்கத் தினரும் தொழிலாளர்களுக்கு உரிய பயன்களை அடையக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, தொழிலாளர்களின் வாழ்வில் வளமும், நலமும் கொழிக்கட்டும் என்று வாழ்த்தி, எனதருமை தொழிலாளப் பெருமக்களுக்கு மீண்டும் எனது தொழிலாளர் தின நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

தொழிலாளர்களின் உழைப்பே உலகத்தின் மூலதனம் என்ற உண்மையை, பாட்டாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் பிரகடனம் செய்த நாள்தான் மே முதல் நாள் ஆகும்.

1806 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவில் ஒன்றுதிரண்டு உரிமைக் கொடி உயர்த்தினார்கள். 1866 இல், அமெரிக்காவில் தேசிய தொழிற்சங்கம், எட்டு மணி நேரம்தான் வேலை என அறிவித்தது.

1884 சிகாகோவில் கூடிய மாநாடுதான் 1886 மே 1 முதல், எட்டு மணி நேர வேலையை உலகெங்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதை முன்வைத்தது.

1886 ஆம் ஆண்டு மே 3 ஆம் நாள் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீது காவல்துறை நடத்திய கொடிய அடக்குமுறையை எதிர்த்து, மே 4 ஆம் நாள், வைக்கோல்சந்தை சதுக்கம் என்ற இடத்தில், தொழிலாளர்கள் அமைதியாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில், காவல்துறை காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டதில், தொழிலாளர்கள் பலர் படுகாயம் அடைந்தனர், நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் நான்கு பேர் 87 நவம்பர் 11 இல் தூக்கில் இடப்பட்டனர்.

1888 இல், செயிண்ட் லூயிசில் கூடிய, அமெரிக்கத் தொழிலாளர்கள் கூட்டு அமைப்பு, மே முதல் நாளை, தொழிலாளர்கள் உரிமை தினமாக, உலகெங்கும் கொண்டாடத் தேர்ந்து எடுத்தது. அதற்கு அடுத்த ஆண்டே, எங்கெல்ஸ் அதை வரவேற்றார்.

1889 ஜூலை 14 இல், பிரெஞ்சுப் புரட்சியின் 100 ஆவது ஆண்டு விழாவை, இரண்டாவது அகிலத்தின் மாநாடாக, பாரிஸ் பட்டணத்தில் கூட்டி, மே முதல் நாளே, பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கை நாள் என அறிவிக்கப்பட்டது.

அன்றுமுதல் இன்றுவரை 122 ஆண்டுகளாக மே நாள் கொண்டாடப்படுகிறது. 1896 ஆம் ஆண்டு, மாமேதை லெனின், சிறையில் இருந்தவாறு, மே முதல் நாளை, ஒரு போராட்ட தினமாக தொழிலாளர்கள் அறியச் செய்து, ஒரு துண்டுப் பிரசுரம் வெளியிட்டார்.

மனிதகுல வரலாற்றில் தொழிலாளர்கள் தங்கள் வேலை உரிமைகளுக்காக மட்டும் போராடவில்லை. அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இரத்தம் சிந்தினார்கள், போராடினார்கள்.

ரஷ்யப் புரட்சியும், சீனப்புரட்சியும், கியூபா விடுதலையும், வியட்நாம் விடுதலையும், தொழிலாளர்கள் ஆயுதம் ஏந்தியும், உயிர்த்தியாகம் செய்தும் வெற்றியை ஈட்டித் தந்த புரட்சிகள் ஆகும்.

இப்போது நம் கண்ணெதிரே இலங்கைத் தீவில், கொடியவன் இராஜபக்சேயின் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்து, கற்பனைக்கு எட்டாத மனிதப் பேரழிவை நடத்தி விட்டது. இக்கோரக் கொலைகளை நடத்திய இராஜபக்சே, உண்மையை வெளிக்கொணர்ந்து ஐ.நா. மன்றத்துக்கு அளிக்கப்பட்ட அறிக்கையை எதிர்த்து, சிங்களக் காடையர்ளை, மே 1 ஆம் நாள் கொழும்பில் திரட்டுகிறான். அவனது மண்டைக் கொழுப்புக்கும், மாபாதகத்துக்கும் மரண அடி கொடுக்க அனைத்து நாடுகளின் மனசாட்சியைத் தட்டி எழுப்ப, கொடியோனைக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க, மனித உரிமை உணர்வுடையோர் அனைவரையும், மே தினம் அறைகூவி அழைக்கிறது.

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தோனுக்கு சங்காரம் நிசமெனத் தாய்த் தமிழகத்துப் பாட்டாளி வர்க்கமும்,இளையோர் கூட்டமும் சூளுரைக்கட்டும்! 
 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வீ.தங்கபாலு:
 
இந்தியத் திருநாட்டில் காங்கிரஸ் பேரியக்கம் தொடக்கக்காலம் முதலே தொழிலாளர் வர்க்கத்தின் வாழ்வுயர்வுக்கும், பாதுகாப்பிற்கும் தனியான அமைப்பை உருவாக்கி மிகுந்த அக்கறையோடு தொடர்ந்து தொண்டாற்றி வருவதை வரலாறு கூறும். மத்திய அரசு உழைக்கும் வர்க்கத்தின் பாதுகாப்பு அரணாக இருந்து செயல்பட்டு வருகிறது.
 
அரசு ஊழியர் களுக்கு 6-வது ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் அபரிமிதமான சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள் ளது. அனைத்து தொழிலா ளர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மே தின நல்வாழ்த்துக்கள்.   
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:

உழைப்பவருக்கு உயர்வு தேடுகின்ற நாள் மே நாளாகும். ஜாதி, மதம், இனம், மொழி, நிறம் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மனித குலம் முழுவதும் கொண்டாடும் நாள் மே தினமாகும்.

வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்து ஒரு சிலர் சுக வாழ்வு நடத்துவதும், மிகப் பலர் வறுமையில் வாடவுமான நிலை ஏற்படுகிறது. சமுதாயத்தின் அமைப்பை மாற்றி எல்லோரும் இன்ப வாழ்வு காண பாடுபடுவதே தே.மு.தி.கவின் லட்சியமாகும்.

வறுமையை ஒழித்து எல்லோருக்கும் வாழ்வு கிடைக்க வழி தேடுவதே நமது திட்டமாகும். சமுதாயத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்கவும், வேலை வாய்ப்பு கிடைக்கவும் அவற்றின் மூலம் சமவாய்ப்பு அமையவும் இந்த மே தின நன்னாளில் சூளுரை மேற்கொள்வோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன்:

உழைக்கும் மக்களின் உரிமை முழக்கம் எழுப்பும் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மே நாளில் பங்கேற்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்த்துக்கள்.

உலக அரங்கில் ஜப்பானில் இயற்கைச் சீற்றத்தால் ஏற்பட்ட உயிர், உடமைச் சேதங்களுடன் அணுமின் நிலயம் உடைந்து கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட கோர நிகழ்ச்சி, பல நாடுகளில் சர்வாதிகார ஆட்சிகளை அகற்ற மக்கள் நடத்திய மாபெரும் கிளர்ச்சிகள் ஆகியவற்றின் அனுபவங்களையும் பெற்றுள்ள இந்தியத் தொழிலாளி வர்க்கம் 2011 மே தினத்தையும் கடைப்பிடிக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை என்ற பெயரால் வழங்கப்பட்ட ஐந்து லட்சம் கோடி, ஊழலால் இழந்த ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடியும், கடத்தி பதுக்கப்பட்ட 120 லட்சம் கோடியும் இந்திய மக்களை ஏழ்மைக்குள் தள்ளியிருப்பதையும் எதிர்த்துப் போராட இந்த மே தினத்தில் உறுதி ஏற்கவேண்டும்.

இலங்கை வாழ் தமிழ் குடிமக்களை கொன்றழித்த போர்க் குற்றவாளிகளை சர்வதேசச் சட்டப்படி பகிரங்க விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும், மேற்குவங்கத்தில் 1995-ல் ஆயுதங்களைக் கொண்டு வந்து விமானம் மூலம் கலவரக்காரர்களுக்குக் கொடுத்து கலவரத்தைத் தூண்ட உதவிய கட்சிகள், அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மே தின சூளுரையாக ஏற்று வலியுறுத்த வேண்டி, மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்:
 
தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் தான் எதிர்காலத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்த இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற முடியும். எனவே தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதை மே நாளில் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

தனியார் துறையில் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பரந்து பட்ட பிரச்சாரம் இயக்கம் ஒன்றை கருத்தொற்றுமை உள்ளவர்களோடு இணைந்து விடுதலைச் சிறுத்தைகள் முன்னெடுக்கும் என்பதை இந்த மே நாளில் தெரிவித்துக்கொள்கிறோம்.