Published:Updated:

2ஜி-யிலிருந்து வெளிவருவோம்:ஜெ.க்கு கருணாநிதி பதில்

Vikatan Correspondent

சென்னை, மே.2,2011

2ஜி-யிலிருந்து வெளிவருவோம்:ஜெ.க்கு கருணாநிதி பதில்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு வளையத்தில் இருந்து திமுக நிச்சயம் வெளியே வரும் என்று அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார். ##~~##

இதுகுறித்து அவர் வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:

கேள்வி: 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்னை சம்பந்தமாக கழகத்தின் உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஜெயலலிதா மனம் போன போக்கில் விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?

பதில்: எந்தப் பிரச்னையை பற்றி கருத்து தெரிவித்தாலும், தன்னை எல்லாவித சந்தேகத்துக்கும் அப்பாற்பட்டவர் என்பதைப்போலவும், தூய்மை, வாய்மை இவற்றின் உருவகம் என்பதைப் போலவும், அறநெறிகளின் இருப்பிடம் என்பதைப்போலவும் கற்பனை செய்து கொண்டு; பிறர் மீது சேறு வாரி இறைப்பத்தில் அந்த அம்மையார் மிகவும் கைதேர்ந்தவர் என்பதை தமிழக மக்கள் நன்கறிவர்.

27-4-2011 அன்று எனது தலைமையில் நடைபெற்ற கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தைப்பற்றி, கடைந்தெடுத்த தனது தீய எண்ணத்தின் வெளிப்பாடாக அறிக்கை ஒன்றை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் - "பூதத்தை பூனைக்குட்டி விழுங்கிவிட்டதாக கூறுவதுபோல, அனுமானமாக பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக இந்தியாவின் தலைமை கணக்காயர் தெரிவித்தது முதலாக, இந்தப் பிரச்சினையில் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் தொடர்ந்து முயற்சித்து வருவதை நாடறியும்" என்றும்;
"தி.மு.க. தலைமை மீது பழி சுமத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி, தொடர்ந்து பல ஏடுகளும், ஊடகங்களும் செய்தி பரப்பி வருவதுடன், இதை ஓர் அரசியல் பிரச்னையாக்கி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியினரிடையே அவநம்பிக்கையை உருவாக்கிடவும், பிரச்னையை பெரிதுபடுத்தி, மாறுபாடுகளை வளர்த்து கூட்டணியை உடைக்கும் நோக்கத்துடனேயே செயல்பட்டு வருகின்றன" என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை திரித்தும், திசை திருப்பும் வகையிலும் ஜெயலலிதா விமர்சனம் செய்துள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இழப்பு எவ்வளவு என்பதை அறுதியிட்டு உறுதியாக இதுவரை யாராலும் அளவிட்டுக்கூற இயலவில்லை. ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று தனது அறிக்கையிலே சொன்ன தலைமைக் கணக்காயர், பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் முன் விசாரணைக்காக ஆஜரானபோது, ஆதாரம் ஏதுமின்றி அனுமானத்தின் அடிப்படையிலேதான் இந்த இழப்பைச் சொல்லியிருப்பதாக உறுதிப்படுத்தினார்;

வெவ்வேறு கோணத்தில் இழப்பு ஏதேனும் ஏற்பட்டிருக்குமா என்று கணக்கிட்டுப் பார்த்ததாகவும், அதிலே ஒரு கோணத்தில், வெறும் 57 ஆயிரத்து 666 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது என்றும் கூறியிருக்கிறார்.

மத்திய தொலைத்தொடர்புத்துறை மந்திரியாக இருந்த பா.ஜ.க.வை சேர்ந்த அருண் ஷோரி வெறும் 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று சொல்லியிருக்கிறார். புலன் விசாரணை செய்து, குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ள சி.பி.ஐ., 22 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத்தான் இழப்பு என்று குறிப்பிட்டிருக்கிறது.

பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் பா.ஜ.க.வை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷியோ ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு என்று சொல்லியிருக்கிறார். இப்படி ஒவ்வொரு வரும் தங்கள் அறிவுக்கும், கற்பனைக்கும் ஏற்ப இழப்பின் அளவை சொல்லியிருக்கிறார்கள்.

இப்படி "கருத்தியலான" ஒன்றை வைத்துக் கொண்டு, ஊதி ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில்- கழகத்தின் மீது தூசி விழுந்தாலும், அதைத்தூணாக்கும் நடவடிக்கையில்-இன்றைக்கு ஜெயலலிதாவைப் போலவே ஒருசில அரசியல்வாதிகளும், நாளேடுகளும், ஊடகங்களும் எத்தனிக்கின்றன என்பதற்கு நிரூபணங்கள் எதுவும் தேவையில்லை.

ஒருசில நாளேடுகளையும், ஊடகங்களையும் தொடர்ந்து படித்தாலும், பார்த்தாலும், இதனை எளிதில் புரிந்து கொள்ளலாம். அவர்களது நோக்கமெல்லாம் எப்படியாவது இந்த பிரச்சினையை பயன்படுத்திக்கொண்டு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க.வை தனிமைப்படுத்தி, அழித்துவிட வேண்டும் என்பதுதான்.

நாளேடுகள் எப்படிப்பட்ட எல்லை வரைக்கும் சென்றுவிட்டன என்பதை உணர்த்திட, இன்றைய நாளேடு ஒன்றில் இருந்து உதாரணம் ஒன்றை காட்டட்டுமா?. இன்றைய ஆங்கில நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையில், "பெரியதொரு குடும்பம் இறுதிச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்வதைப்போன்று கோபாலபுரம் கோட்டை தோற்றமளிக்கிறது" என்று எழுதியிருக்கிறார்கள்.

அவர்களது எண்ணம் எந்த அளவுக்கு கீழ்த்தரமானது, இழிவானது, விபரீதமானது என்பதை நான் விளக்கிட தேவையில்லை. இப்படியெல்லாம் நாளேடுகளும், ஊடகங்களும் வேலிகளை தாண்டும்போது, அரசியல் சதுரங்கம்-ஆதிக்க வட்டாரம் என்று விமர்சிப்பதில் என்ன குறை சொல்ல முடியும்?. மனசாட்சியை தொட்டுப்பார்த்தால், அப்படிப்பட்டவர்களது உள்நோக்கமும், நச்சு எண்ணமும் நன்றாக புரியுமே.

சன் டிவியில் இருந்து கலைஞர் தொலைக்காட்சிக்கு...

கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கு நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது என்று ஜெயலலிதா கேட்டிருக்கிறார். "சன் டி.வி."யில் என் மனைவி தயாளு அம்மாள் பெற்றிருந்த 20 சதவீத உரிமையை முழுவதுமாக விட்டு கொடுத்ததன் மூலம் 100 கோடி ரூபாய் கிடைத்தது என்ற விவரங்களை எல்லாம் 2008-ம் ஆண்டிலேயே நான் வெளியிட்டிருந்தேன்; அதை என் குடும்பத்தாருக்கு பிரித்துக்கொடுத்ததையும் விவரமாக குறிப்பிட்டிருந்தேன்.

ஜெயலலிதா தன்னை மிகப்பெரும் வழக்கறிஞராக கற்பனை செய்து கொண்டு, நிறைய கேள்விகளை கேட்டிருக்கிறார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நடைபெற்று கொண்டிருப்பதால், அவைகளுக்கு எல்லாம் இப்போது பதில் சொல்வது சட்டப்படி சரியாக இருக்காது.

ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, 1-7-1991 அன்று அவரிடமிருந்த சொத்துக்களின் மதிப்பு 2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 957 ரூபாய். ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தபிறகு, 30-4-1996-ல் ஜெயலலிதாவின் சொத்துக்களின் மதிப்பு 66 கோடியே 44 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய். ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக 66 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து குவித்த வழக்கு, 1997-ம் ஆண்டில் இருந்து கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அதைப்போலவே, பிறந்தநாள் நன்கொடையாக வந்த 2 லட்சம் டாலர்களை, தனது சொந்த கணக்கில் வரவு வைத்துக்கொண்டதால், சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு, 1997-ம் ஆண்டில் இருந்து கடந்த 14 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்குகளில் ஜெயலலிதா ஆஜராகாமல், ஒவ்வொரு தடவையும் ஏதாவது கற்பனையான காரணங்களின் அடிப்படையில் வாய்தாவுக்கு மேல் வாய்தா பெற்று, வழக்குகள் முடிவு பெற்று தீர்ப்புகள் வழங்கப்படுவதை தவிர்ப்பதற்காக கடந்த 14 ஆண்டுகளாக இழுத்தடித்து வருகிறார்.

வழக்குகளை சட்டப்படி நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என்று நிரூபித்துக்காட்டுவேன் என்று அடிக்கடி சண்டமாருதம் செய்யும் ஜெயலலிதா, இந்த வழக்குகளை தொடர்ந்து 14 ஆண்டுகளாக இழுத்தடித்து கொண்டிருப்பதேன்? என்பதை நடுநிலையாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நிறைவுப்பகுதி முக்கியமானது. "இந்த வழக்கிலும் உண்மையை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதுடன், அதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்வதே நம் கடமை என்று இந்த உயர்மட்டக்குழு தீர்மானித்து, அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதென முடிவெடுக்கிறது" என்று தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. கழகம், ஜெயலலிதாவைப்போல் அல்லாது, சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு, இந்த வழக்கு வளையத்தில் இருந்தும் நிச்சயமாக வெளியே வரும்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.